கடந்த 2000ல் வெளியான ‘பத்ரி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், ரேணு தேசாய். தமிழில் ‘ஜேம்ஸ்பாண்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும், எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார். நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாணை காதல் திருமணம் செய்துகொண்ட அவர், கடந்த 2012ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது தனது 2 வாரிசுகளுடன் வசித்து வரும் ரேணுகா தேசாய், மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தன்னை குறிவைத்து அவதூறு செய்திகள் வெளியிட்டு வந்த 4 சோஷியல் மீடியா கணக்குகளுக்கு எதிராக, தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘பெண்கள், குழந்தைகள், விலங்குகள் பாதுகாப்பு குறித்து சோஷியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வரும் எனது கருத்துகளை சிலர் திரித்து பரப்புகிறார்கள். அது எனக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை பற்றி அவதூறுகள் பரப்பியும் மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியவர்களையும் தண்டிக்கும் வகையில், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக சைபர் கிரைம் போலீசாரை அணுகியுள்ளேன்’ என்றார்.
