ரூ.5 லட்சத்துக்கு மேல் நடைபெறும் திருப்பணிகளுக்கு ஆணையரின் அங்கீகாரம் பெறுவது கட்டாயம் திருப்பணிகளை பிரித்து வேலை செய்வது கண்டறியப்பட்டால் அங்கீகாரம் ரத்து: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருப்பணி வேலைகளின் மீது ஒப்பந்தபுள்ளி அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ளவை, ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ளவை, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவை என வகைப்படுத்தப்பட்ட பட்டியலை சார்ந்த கோயில்களில் ஆணையரின் திருத்தம் மற்றும் ரத்து அங்கீகாரத்திற்குட்பட்டு ஒரு குறிப்பிட்ட திருப்பணியின் மதிப்பு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்குமேயானால் அந்த ஒப்பந்தபுள்ளி அங்கீகாரம் மண்டல இணை ஆணையரால் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று இணை ஆணையர் நிலையில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் ஒரு குறிப்பிட்ட திருப்பணியின் மதிப்பு ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருப்பின் அந்த பணியின் ஒப்பந்தப்புள்ளி அக்கோயிலின் அலுவலரால் அங்கீகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வருங்காலங்களில் ஒரேயளவிலான தன்மையுடைய வேலைகளை ஆணையரது அனுமதியை தவிர்க்கும் பொருட்டு பல வேலைகளாக பிரித்து இணை ஆணையர் நிலையிலேயே பணி அங்கீகரிக்கப்படுதல் முற்றிலும் தடை செய்யப்பட்டு உத்தரவிடப்படுகிறது. இச்சுற்றறிக்கையினை செயல்படுத்துவதில் ஏதேனும் முரண்பாடு தெரியவரின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட திருப்பணி வேலைகளின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் மிகைப்படும் நேர்வில் ஆணையரின் அங்கீகாரத்திற்கு அனுப்புவதை தவிர்க்கும் நோக்கில் அப்பணியினை பல்வேறு பணிகளாக பிரித்து இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களால் அங்கீகரித்து தொகை செலவிடப்பட்டது கண்டறியப்பட்டால், மேலே கூறப்பட்ட சட்டப்பிரிவின் படி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு செலவினத்தொகை முழுவதும் தண்டத் தொகையாக நிர்ணயம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும், அத்திருக்கோயில் தணிக்கையின் போது இது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அங்கீகாரம் வழங்கிய அலுவலரை பொறப்பாக்கி செலவின தொகை முழுவதும் தணிக்கை மறுப்புக்குள்ளாக்கப்பட்டு தண்டத்தொகை நிர்ணயம் செய்து வசூலிக்கப்படும்….

The post ரூ.5 லட்சத்துக்கு மேல் நடைபெறும் திருப்பணிகளுக்கு ஆணையரின் அங்கீகாரம் பெறுவது கட்டாயம் திருப்பணிகளை பிரித்து வேலை செய்வது கண்டறியப்பட்டால் அங்கீகாரம் ரத்து: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: