மதுரை ஆதீன மடத்தின் அடுத்த பீடாதிபதி நான் தான்!: அறிக்கை வெளியிட்டு சர்ச்சை கிளப்பும் நித்தியானந்தா..!!

மதுரை: மதுரை ஆதீன மடத்தின் அடுத்த பீடாதிபதி தாம் தான் என நித்தியானந்தா தன்னை தானே அறிவித்துக்கொண்டுள்ளார். மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதியான அருணகிரிநாதர் சுவாச கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகாத நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீ கைலாசா இந்து தேச நிர்வாகம் என்ற பெயரில் நித்தியானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை ஆதின மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் ஏப்ரல் 27, 2012 அன்று தன்னை 293வது ஆதீனமாக பிரகடனப்படுத்தி தன்னை சட்டபூர்வ வாரிசாக அறிவித்து முடிசூட்டியதால் எல்லா உரிமைகளும், கடமைகளும், பொறுப்புகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மதுரை ஆதீனத்தின் உடல்நலத்திற்காகவும், நீண்ட நாட்கள் வாழ்வதற்காகவும் அவருக்கு தியான சிகிச்சை பிரார்த்தனைகளை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கைலாசா தேசத்தின் தலைவர் என்ற முறையிலும், மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னி தானம் என்ற முறையிலும் இந்த ஆணையை பிறப்பிப்பதாக குறிப்பிட்டு நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார். நித்தியானந்தாவின் இந்த அறிவிப்பால் மதுரை ஆதீனத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதீன மடம் உரிய விளக்கம் அளித்து மடாதிபதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே, மதுரை ஆதீனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மடத்தில் உள்ள அவரது அறையை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள், விலை உயர்ந்த நகைகள் முக்கிய ஆவணங்கள் உள்ளதால் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post மதுரை ஆதீன மடத்தின் அடுத்த பீடாதிபதி நான் தான்!: அறிக்கை வெளியிட்டு சர்ச்சை கிளப்பும் நித்தியானந்தா..!! appeared first on Dinakaran.

Related Stories: