கடந்த 2016 பிப்ரவரி 5ம் தேதி திரைக்கு வந்த படம், ‘விசாரணை’. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘கயல்’ ஆனந்தி, சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், மிஷா கோஷல், சூப்பர் குட் சுப்பிரமணி, அஜய் கோஷ், ஈ.ராமதாஸ் நடித்தனர். எம்.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவான இப்படம், பிறகு ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா ஸ்டுடியோவில் படக்குழுவினர் சந்தித்தனர். வெற்றிமாறன், எம்.சந்திரகுமார், ‘அட்டகத்தி’ தினேஷ், சமுத்திரக்கனி, கருணாஸ், சரவண சுப்பையா, மூணாறு ரமேஷ், திலீப் சுப்பராயன், தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கலந்துகொண்டனர்.
போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், அதிகாரத்தின் கொடூர முகம், அடித்தட்டு மக்களின் வலி ஆகியவற்றை நேர்மையாகவும், துணிச்சலாகவும் திரையில் பதிவு செய்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகள் வென்ற இப்படம், வெனிஸ் பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படமாகும். சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் 3 தேசிய விருதுகள் வென்றது. இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷ் வெளியிட்ட பதிவில், ‘எங்களது ‘விசாரணை’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதயங்களை வென்ற படம் இது. வுண்டர்ஃபார் பில்ம்ஸ், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்த மிகச்சிறந்த படம் இது என்று சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
