மீஞ்சூர் அருகே டாஸ்மாக்கில் வாலிபர் வெட்டிக்கொலை: 7 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூரில் உள்ள டாஸ்மாக் பாரில் வாலிபரை சரமாரி வெட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயலில் டாஸ்மாக்கடை உள்ளது. இங்கு மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (25) என்பவர் நேற்றுமுன்தினம் மது பாட்டில்கள் வாங்கி பாரில் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மீஞ்சூர், சூர்யா நகரை சேர்ந்த தேவா (30) மற்றும் அவரது நண்பர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். திடீரென ராஜசேகருக்கும் தேவாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. மேற்கண்ட இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர்  சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் தேவா தரப்பினர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ராஜசேகரை சரமாரி வெட்டினர். அவரது தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் துடித்தார். இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. அப்பகுதியினர் ராஜசேகரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.  சிகிச்சைப் பலனின்றி நேற்று ராஜசேகர், பரிதாபமாக இறந்தார்.   தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மீஞ்சூரை சேர்ந்த தேவராஜ்  (26), வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்த அஜித் (25) மற்றும் சஞ்சய் (20), சீமாபுரம் கிராமத்தை சேர்ந்த பரத் (20), ஹரிஷ் குமார் (20), ஏரிக்கரை சேர்ந்த முகேஷ் (21), மோகன் (21) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.  பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது….

The post மீஞ்சூர் அருகே டாஸ்மாக்கில் வாலிபர் வெட்டிக்கொலை: 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: