2 ஆண்டுக்கு பிறகு நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது நகராட்சி மாட்டுசந்தை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மாட்டுசந்தை 2 ஆண்டுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதால் அங்கு மாடுகள் விற்பனை செய்ய வசதியாக சுத்தப்படுத்தி தயார்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.   பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும். சந்தை நாளின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும். கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளிலிருந்தும் விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டுவரப்படுவது வழக்கமாக இருந்தது. வாரத்தில் இரண்டு நாட்களில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்கப்படும். சுமார் ரூ.3கோடி வரை ஒரு வாரத்தில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.   இங்கு வரும் மாடுகளை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்வர். இதனால், வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் நகராட்சி மாட்டு சந்தைநாளின்போது வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருப்பதுடன், மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெறும். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் உடுமலைரோட்டில் உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் போட்டி மாட்டு சந்தை உருவானதால், நகராட்சி சந்தைக்கு பல வாரமாக மாடுகள் வரத்து மிகவும் குறைந்தது.  இதனால், நகராட்சிக்கு குத்தகை மூலம் கிடைக்கபெறும் வருமான இழப்பு ஏற்பட்டதுடன், பலரின் தொழில் பாதிக்கப்பட்டது. இருப்பினும், நகராட்சி சந்தையில் மீண்டும் மாட்டு வியாபாரம் நடைபெறும் என்ற நம்பிக்கையில், அப்பகுதியில் நகராட்சி மூலம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால், வியாபாரிகள் வருகை நாளுக்கு நாள் குறைவானது. மேலும், அந்நேரத்தில் இருந்த அதிமுக அரசின் மறைமுக மிரட்டலால் வியாபாரிகள் திப்பம்பட்டியில் திடீர் என உதயமான சந்தைக்கு மாடுகளை கொண்டு விற்பனை செய்ய துவங்கினர்.   இதனால் நகராட்சி மாட்டு சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மீண்டும் மாட்டு சந்தை செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பொள்ளாச்சியின் பாரம்பரியமிக்க நகராட்சி மாட்டு சந்தையில் நாளை 6ம் தேதி முதல் மாடு விற்பனை நடைபெற நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சந்தையை சுத்தப்படுத்தி தயார்படுத்தும்  பணி தீவிரமாக நடக்கிறது. இதுகுறித்து நகராட்சி  ஆணையாளர் காந்திராஜ் விடுத்துள்ள அறிக்கை: பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மாட்டுசந்தை நன்றாக இயங்கும் வகையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. எனவே, மாட்டு வியாபாரிகள் மாட்டு சந்தையில் மாடுகளை கொண்டுவந்து விற்பனை செய்து கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post 2 ஆண்டுக்கு பிறகு நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது நகராட்சி மாட்டுசந்தை appeared first on Dinakaran.

Related Stories: