சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேரை விடுவித்தது தூத்துக்குடி நீதிமன்றம்..!!

தூத்துக்குடி: சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவனை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜேக்கப் ஜீவன், தாயார் எபனேஸ்ஸரம்மாள், சகோதரர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சர் கீதாஜீவனின் தந்தையுமான பெரியசாமி மீது 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த பெரியசாமி, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவரது குடும்பத்தினர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு காலமானார். அவரைத் தவிர குடும்பத்தினர் 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி கீதா ஜீவன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி குருமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் கீதா ஜீவன்  உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் கீதா ஜீவன் குடும்பத்தினர் மற்றும் திமுகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தீர்ப்பை அமைச்சர் கீதா ஜீவன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். முன்னதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்….

The post சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேரை விடுவித்தது தூத்துக்குடி நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: