பென்னாகரம் : பென்னாகரம் அருகே, தந்தையை கட்டையால் அடித்து மகன் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகேயுள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமரன் (70). இவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு குணசேகரன், தங்கராஜ் என்ற மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இளைய மகன் தங்கராஜ்(40), லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தங்கராஜ் புதியதாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்டித்தருவதற்கு ஒப்பந்தம் போட்ட காண்ட்ராக்டர், உரிய நேரத்தில் கட்டுமான பணியை முடித்து தரவில்லை. இதனால், தங்கராஜ் காண்ட்ராக்டருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விவகாரத்தில் காண்ட்ராக்டருக்கு ஆதரவாக, தங்கராஜின் தந்தை குமரன் பேசி வந்துள்ளார். இதனால் தந்தை மீது ஆத்திரமடைந்த தங்கராஜ், கடந்த 3 நாட்களாக கடும் கோபத்துடன், மனநலம் பாதித்தவர் போல் சுற்றித்திரிந்துள்ளார். நேற்று காலை, தங்கராஜிடம் அமைதியாக இருக்கும்படி குமரன் கூறியுள்ளார். அப்ேபாது அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து, தந்தை என்றும் பாராமல் குமரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமரன், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத தங்கராஜ், கட்டையுடன் வெளியே சென்று, சாலையில் சென்ற வாகனங்களை ஆவேசமாக அடித்து நொறுக்கியுள்ளார். இதில், அவ்வழியாக சென்ற பால் வண்டியின் கண்ணாடி உடைந்ததுடன், டிரைவர் படுகாயமடைந்தார். இதனிடையே, சத்தம்கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், தங்கராஜை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்து கயிற்றால் கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்னர், இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தங்கராஜை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையுண்ட குமரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடு கட்டும் பிரச்னையில் காண்ட்ராக்டருக்கு ஆதரவாக பேசியதால், தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
The post பென்னாகரம் அருகே பரபரப்பு தந்தையை அடித்துக்கொன்ற மகன் தெருவுக்கு வந்து வாகனங்களை தாக்கியதால் கட்டிப்போட்டனர் appeared first on Dinakaran.