சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பப்புகளில் போதை பொருள் விற்பனை செய்வதாக, சென்னை பெருநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி புதிதாக தொடங்கியுள்ள உதவி கமிஷனர் தலைமையிலான போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு போதை பொருள் வேண்டும் என்று ஆர்டர் செய்தனர். அந்த பெண் கூறிய ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ 7வது கேட் அருகே கண்காணிப்பு பணியில் தனிப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பெண் வந்ததும், பெண் காவலர்கள் உதவியுடன் போதை பொருள் வாங்குவது போல் நடித்து அவரை மடக்கி பிடித்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில், 5 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் இளம்பெண்ணை பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோவிலம்பாக்கம் வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவை சேர்ந்த எஸ்தர்(எ)மீனா(28) என்றும் சின்னத்திரை துணை நடிகையான இவர், திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளதும் தெரியவந்தது. உடனே துணை நடிகை எஸ்தர் (எ)மீனாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். செல்போனில் உள்ள தகவல்களை வைத்து அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தியது குறித்து போலீசார் கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மீனா, சினிமா துறை சார்ந்தவர்களிடம் பழகி வந்துள்ளார். அதன்படி மீனாவுக்கு கடந்த 2021ம் ஆண்டு ‘டெடி’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனக்கு தெரிந்த துணை இயக்குநர்கள் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு தேடினார். இதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொள்ளும் நட்சத்திர ஓட்டல் பார்ட்டி, பப்புகளில் மீனா கலந்து கொண்டுள்ளார்.
அதன் பிறகு சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அடிக்கடி இரவு நேரம் பப்புகளுக்கு மீனா சென்று வந்து போது, தாமஸ் என்பவரின் நட்பு கிடைத்தது. அவருடன் சேர்ந்து மெத்தம்பெட்டமைன் மற்றும் உயர் ரக கஞ்சாவை மீனா பயன்படுத்தி போதைக்கு அடிமையானார். மேலும், சினிமா மற்றும் சின்னத்திரையில் மீனாவுக்கு பிரபல நடிகைகளுடன் நல்ல நட்பு இருந்தது.
பொதுமக்களிடம் நல்ல வரவேற்புள்ள சீரியல் எபிசோடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நட்சத்திர ஓட்டல்களில் சம்பந்தப்பட்ட சீரியல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்வார்கள். அப்படி கலந்து கொள்ளும் போது, முன்னணி நடிகைகள் சிலரிடம் மீனா, மெத்தம்பெட்டமைன் பற்றி தெரிவித்துள்ளார். அதன்பின் ஒவ்வொரு நடிகைகளும், அவர்களாகவே மீனாவை தொடர்பு கொண்டு, மெத்தம்பெட்டமைன் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த வகையான போதை பொருள் எளிதில் கிடைக்காது என்பதால், துணை நடிகை மீனாவை முன்னணியில் உள்ள சீரியல் நடிகைகள் பலர், வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு மெத்தம்பெட்டமைன் பெற்றுள்ளனர். அதை உறுதி செய்யும் வகையில், துணை நடிகை மீனா பயன்படுத்திய செல்போனில் உள்ள வாட்ஸ் அப்பில் எந்தெந்த சீரியல் நடிகைகளுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தார். அவர்களுக்கு எவ்வளவு போதை பொருள் வழங்கப்பட்டது என்ற விவரங்கள் உள்ளது.
மேலும், சில முன்னணி நடிகைகள் தினமும் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு என தனியாக துணை நடிகை மீனா வாட்ஸ் அப் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் போதை பொருள் விற்றுள்ளார். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் மத்தியில் அமோகமாக போதை பொருள் விற்பனை செய்ததாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு வெளியாட்களுக்கும் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்து வந்த போது போலீசார் பிடியில் சிக்கி கொண்டதாகவும் கைதான துணை நடிகை மீனா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், துணை நடிகை மீனா பயன்படுத்திய செல்போனில் உள்ள வாட்ஸ் அப் மூலம் மெத்தம்பெட்டமைன் போதை பொருட்கள் வாங்கிய முன்னணி நடிகைகள் யார் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கி உள்ளனர். அவருக்கு மொத்தமாக மெத்தம்பெட்டமைன் வாங்கி கொடுக்கும் ஆண் நண்பர் தாமஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்த கும்பலை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருளை துணை நடிகை மீனாவிடம் பெற்று பயன்படுத்தி வந்த பிரபல நடிகைகள் குறித்து விபரங்களும் விரையில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணை நடிகை ஒருவர் சக நடிகைகளுக்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் சின்னத்திரை நடிகைகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதம் ரூ.1.50 லட்சம் வருமானம்
துணை நடிகை மீனாவுக்கு சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்க ஒரு நாள் கூலியாக ₹3 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். அதுவும் வாய்ப்பு கிடைத்தால்தான் உண்டு. மற்ற நேரங்களில் தெரிந்த நடிகைகளுக்கு மெத்தம்பெட்டமைன் விற்பனை ெசய்து, அதில் வரும் வருமானத்தில் ஆண் நண்பர் தாமசுடன் வசதியாக வாழ்ந்துள்ளார். உயர் ரக மெத்தம்பெட்டமைன் ஒரு கிராம் ₹4 ஆயிரம் வரை விலை போகிறது. அதை வாங்கி கைமாற்றி ஒரு கிராமுக்கு ₹1000 கூடுதலாக வைத்து விற்றுள்ளார். ஒரு நாளைக்கு சாதரணமாக 5 கிராம் மெத்தம்பெட்டமைன் வாங்கி கைமாற்றி விட்டாலே ₹5 ஆயிரம் மீனாவுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் மாதம் ₹1.50 லட்சம் வருமானம் வருகிறது. இதனால் துணை நடிகை மீனா முழு நேர தொழிலாக தனது ஆண் நண்பருடன் இணைந்து சினிமா மற்றும் சின்னத்திரை முன்னணி நடிகைகளுக்கு மெத்தம்பெட்டமைன், வாட்ஸ் அப் ஆர்டர் பெயரில் விற்பனை செய்து வந்துள்ளார்.
The post பப்புகள் மூலம் பழக்கமான ஆண் நண்பர் உதவியுடன் பிரபல நடிகைகளுக்கு தினமும் போதை பொருள் விற்பனை appeared first on Dinakaran.