×

பாடலாசிரியர் ஆனார் கிரிக்கெட் வீரர்!

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இதன் பாடல்களை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். பாடல்கள் எழுதிய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். சினிமாவில் ‘வானம் கொட்டட்டும்’ படம்தான் என்னுடைய முதல் வாய்ப்பு. கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது எனது கனவாக இருந்தது. பாடலாசிரியராக வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், இசையின் மிகப்பெரிய ரசிகன் நான். பாடலாசிரியர்களில் மருதகாசியின் ரசிகன். கண்ணதாசன், வைரமுத்து, உடுமலை நாராயணகவி ஆகியோரையும் பிடிக்கும்.

இயக்குநர் தனாவுடன் வேலை செய்த அனுபவம் சிறப்பாக இருந்தது. படத்தில் ‘ஈஸி கம் ஈஸி கோ...’ என்ற பாடலில் இரண்டாவது வரி ‘கைப்பிடித்து நாம் நடக்க ஒரு உலகம் ஒதுங்கிவிடும் வா வா வா... வீசி வரும் பேரலையும் பதுங்கி நின்று தழுவிடும் வா வா வா...’ என்று எழுதினேன். பாடலை எழுதி முடித்ததும் தனாவிற்கும், மணிரத்தினம் சாருக்கும் அனுப்பினேன். உடனே ‘ஏன் இன்னும் இந்தப் பாடலை முழுதாக முடிக்கவில்லை’ என்று மணிரத்தினம் சார் கேட்டார்.

குறைவான நாட்களில் இந்தப் பாடலை இயற்றி இருந்தாலும் பாடல் சிறப்பாக வந்தது. சித் ஸ்ரீராம் அவருடைய கோணத்தில் பாடல் வரிகளைக் கொண்டு வந்தார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையைத் தள்ளிவைத்து புதுவிதமாக இசையை அமைத்தார். அவர் இசையை ஒவ்வொரு பிரிவாக வடிவமைத்த விதம்தான் எனக்கு பாடல் இயற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தோன்ற வைத்தது.  

பாடலாசிரியருக்கு போதிய இடைவெளியும், சுதந்திரமும் இருந்தால் மட்டுமே பாடல் வரிகள் சிறப்பாக அமையும். இந்தப் படத்தில் எனக்கு அது இருந்தது. எதிர்காலத்தில் பாடலாசிரியராகவே இருப்பேனா என்பது தெரியாது. தனா என்னுடைய நல்ல நண்பர். என்னைவிட இலக்கியத்தில் புலமை வாய்ந்தவர். இந்தப் படம் மூலம்தான் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவருடனும் பணியாற்றியது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது’’ என்றார்.

Tags : Cricketer ,songwriter ,
× RELATED மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் புதிய...