சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் விஸ்வரூபம் எடுக்கிறது ஈ.வி.கே.எஸ், தங்கபாலு, கிருஷ்ணசாமி செல்வபெருந்தகை திடீர் டெல்லி பயணம்: கே.எஸ்.அழகிரியை நீக்கக்கோரி மல்லிகார்ஜூன கார்கேவை இன்று சந்தித்து முறையிடுகின்றனர்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் விஸ்ரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் நேற்று திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். டெல்லி சென்றுள்ள அவர்கள் இன்று காலை கே.எஸ்அழகிரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து பேச உள்ளனர். காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை கூறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ரூபி மனோகரன் எம்எல்ஏவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கே.எஸ்.அழகிரியின் காரை முற்றுகையிட்ட நெல்லை மாவட்ட காங்கிரசார் மீது கண்மூடித்தனமான தாக்குதல் அரங்கேறியது. இந்த மோதலில் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ெபரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக, 62 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு இந்த பிரச்னை சென்றது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வருகிற 24ம் தேதி ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்த உள்ளது.இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம், தற்போது மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவே திரும்பியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர். இதனை நிரூபிக்கும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடந்த இந்திரா காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் அழகிரியை புறக்கணிக்கும் வகையில் பலரும் பங்கேற்கவில்லை. இந்திரா காந்தி சிலைக்கு கே.எஸ்.அழகிரியுடன், கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் மாலை அணிவிக்க உடன் செல்லவில்லை. பின்னர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், சட்டபேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் தனியாக சென்று இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். அப்போது கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி இந்த தலைவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவரை தாக்கியதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதல் பெரும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்து முறையிட வேண்டும் என்றும் ஆலோசனையில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்திற்கு புகார் அளிக்க திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி சென்றுள்ள அவர்கள் ஓரணியாக இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று நேரில் சந்தித்து கே.எஸ்.அழகிரி மீது புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது புகார் அளிக்க சென்றவர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம். கே.எஸ்.அழகிரியே கட்சி தொண்டர் ஒருவரை அடிக்க சென்றது போன்ற விவகாரங்களை ஆதாரமாக கொண்டு அவர்கள் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் வலியுறுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனைத்து மூத்த தலைவர்களும் ஓரணியில் திரண்டுள்ளதால் கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லி சென்றுள்ள மூத்த தலைவர்களால் தமிழக காங்கிரசில் அடுத்த கட்டமாக என்ன நடக்க போகிறது என்ற பரபரப்பு தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது….

The post சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் விஸ்வரூபம் எடுக்கிறது ஈ.வி.கே.எஸ், தங்கபாலு, கிருஷ்ணசாமி செல்வபெருந்தகை திடீர் டெல்லி பயணம்: கே.எஸ்.அழகிரியை நீக்கக்கோரி மல்லிகார்ஜூன கார்கேவை இன்று சந்தித்து முறையிடுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: