×

தனியாக சிக்கிக்கொண்டால் சண்டைபோட்டு தப்புவேன் - அமலாபால்

எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘அதோ அந்த பறவை போல.’ பாடல் வரியை தலைப்பாக கொண்டு புதிய படம் உருவாகியிருக்கிறது. அமலாபால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆசிஷ்வித்யார்த்தி, சமீர் கொச்சர் ஆகியோரும் நடிக்கின்றனர். கே.ஆர்.வினோத் இயக்குகிறார். அருண் கதை எழுதுகிறார். ஜோன்ஸ் தயாரிக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமலாபால் கலந்துகொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது: வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அதோ அந்த பறவை போல படத்தின் கதையை என்னிடம் சொன்னார்கள். ஒரு பெண் தனியாக காட்டில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார். அவரை சிலர் தாக்குகின்றனர். அவர்களிடம் போராடி எப்படி மீள்கிறாள் என்பதுதான் கதை. அடர்ந்த காட்டுபகுதியில் முழுகதையும் நடக்கிறது.

இதற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் (சண்டை பயிற்சி) கற்க வேண்டியிருந்ததால் முறைப்படி கற்றுக்கொண்டேன். படத்துக்காக நான் சண்டை கலையை கற்றுக்கொண்டாலும் தனிப்பட்ட முறையிலும் எனக்கு இது பாதுகாப்பாக இருக்கும் என்ற தைரியம் உள்ளது. எங்காவது தனியாக சிக்கிக்கொண்டால் எதிர்த்து போராடி என்னால் தப்பிக்க முடியும் என்ற துணிச்சல் வந்திருக்கிறது.

இப்படத்தை பார்க்கும் பெண்களில் சிலருக்கு இந்த உணர்வு ஏற்பட்டு அவர்கள் மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றால் அது படத்துக்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும். இப்படத்தில் நடித்தபோது 60 அடி உயர மரத்திலிருந்து எந்த உதவியும் இல்லாமல் இறங்கியது, உயரத்திலிருந்து சேற்றில் டைவ் அடித்தது, சண்டை காட்சிகளில் எலும்பில் அடிபட்டது என பல மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளன. இப்படத்தின் இயக்குனர் வினோத் சின்சியராக பணியாற்றினார். நான் நடித்த மைனா படத்தை தயாரித்த ஜோன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இவ்வாறு அமலாபால் கூறினார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!