கம்போடியாவுக்கு வேலைக்கு அனுப்பி மோசடி கும்பலிடம் பெண்ணை விற்ற சென்னை ஏஜென்ட் சிக்கினார்

புதுச்சேரி: புதுச்சேரியில் 27 வயது பட்டதாரி இளம்பெண், வலைதளம் வழியாக வெளிநாட்டு வேலை தேடியுள்ளார். அப்போது கம்போடியாவில் தொலைபேசி அழைப்பாளர் பணிக்காக புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஏஜென்ட் முருகன் என்பவரை நாடியுள்ளார். அவர் மாதம் ரூ1 லட்சம் சம்பளம் என கூறி, விசா உள்ளிட்ட பணிகளுக்காக ரூ3.25 லட்சம் கேட்டுள்ளார். சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தலைமை ஏஜென்ட் ராஜ்குமாரிடம் பேரம் பேசியபிறகு முருகனிடம் பணத்தை அப்பெண் வழங்கினாராம்.பின்னர் ஏஜென்ட்டான முருகன், அந்த இளம்பெண்ணை சுற்றுலா விசாவில் கம்போடியாவுக்கு அனுப்பிய நிலையில், அவர் கூறிய கம்பெனிக்கு சென்றபோது தொலைபேசி அழைப்பாளர் பணியை தவிர்த்து மோசடி வேலைகளில் ஈடுபடுமாறு கூறவே அதிர்ச்சியடைந்தார். அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த கம்பெனி மேலாளர் ஆட்டிடோ மற்றும் ஜான் உள்ளிட்ட சிலர், உன்னை ரூ2.76 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியிருக்கிறோம், நாங்கள் கூறும் பணியை செய்யாவிடில் விபசார கும்பலிடம் விற்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவரை ஒரு அறையில் அடைத்து சித்ரவதை செய்ததோடு, அவரது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனிடையே அக்கும்பலிடம் இருந்து வேறொரு இந்தியர் உதவியுடன் தப்பி புதுச்சேரி திரும்பிய இளம்பெண், டிஜிபி மனோஜ்குமார் லாவை கடந்த மாதம் 12ம் தேதி சந்தித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளில் வழக்குபதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னையில் தனிப்படையினர் முகாமிட்டு தலைமை ஏஜென்ட்டான ராஜ்குமாரை தேடினர். சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் கம்போடியா கும்பல் குறித்த தகவல்களையும் சேகரித்தனர்.இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ராஜ்குமார் பதுங்கியிருப்பதாக சிபிசிஐடிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சாதாரண உடையில் அங்கு நேற்றுமுன்தினம் இரவு விரைந்த சிபிசிஐடி போலீசார்,  ராஜ்குமாரை நேற்று சிதம்பரத்தில் சுற்றிவளைத்தனர். பின்னர் புதுச்சேரி சிபிசிஐடி  அலுவலகம் கொண்டு வந்து விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள ஆட்டிடோ, ஜான் ஆகியோரை தேடி வருகின்றனர்….

The post கம்போடியாவுக்கு வேலைக்கு அனுப்பி மோசடி கும்பலிடம் பெண்ணை விற்ற சென்னை ஏஜென்ட் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: