×

வெண்ணிலா கபடி குழு 2 - விமர்சனம்

பசுபதியின் மகன் விக்ராந்த். சிறுவயதில் பள்ளி டீச்சரை  தாக்கியதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் விக்ராந்தை சேர்க்கும் நிலை ஏற்படுகிறது. சிறுவன் மீது வழக்கு பதியாமல் இருக்க, தனது தம்பியை எதிர்த்து பசுபதி கபடி விளையாடக்கூடாது என்று போலீஸ் அதிகாரி ரயில் ரவி நிபந்தனை விதிக்கிறார். மகன் சீர்திருத்த பள்ளியில்  சேர்க்கப்படுவதை தவிர்க்க, கபடி விளையாட்டை விட்டுக்கொடுக்கிறார் பசுபதி. பிறகு கணக்கம்பட்டியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தென்காசியில் குடியேறுகிறார். அங்கு வசிக்கும் ரவிமரியாவின் மகள் அர்த்தனாவும், விக்ராந்தும் காதலிக்கின்றனர். இதை ரவிமரியா எதிர்க்கிறார். எனவே, விக்ராந்தை அர்த்தனா புறக்கணிக்கிறார்.

பிறகு வரும் பிரச்னைகளால், விக்ராந்த் சென்னைக்கு அனுப்பப்படுகிறார். அம்மா அனுபமா குமார் மூலம் பசுபதியின் பழைய வாழ்க்கையை  தெரிந்துகொள்கிறார் விக்ராந்த். சென்னை செல்லாமல், கணக்கம் பட்டிக்கு செல்கிறார். அங்கு கபடி பயிற்சியாளர் ஆடுகளம் கிஷோரை  சந்திக்கிறார். சூரி, அப்புக்குட்டி, நித்தீஷ், மாயி சுந்தர் உள்பட பலர்  இணைந்துள்ள வெண்ணிலா கபடி குழுவினருடன் பயிற்சி பெறுகிறார். மாநில கபடி போட்டியில் விக்ராந்தை கலந்துகொள்ள விடாமல் சின்னத் தம்பி ரவீந்தர் ஒருபுறமும், தனது மகளை கடத்திவிட்டதாக ரவிமரியா மறுபுறமும் இடையூறு செய்கின்றனர். இதை மீறி விக்ராந்த் ஜெயித்தாரா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

வெண்ணிலா கபடி குழுவின் தொடர்ச்சியாக இப்படம் வந்துள்ளது. செல்வசேகரன் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இதில் காதலுக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. மகனை கபடி விளையாட்டில் ஜெயிக்க  வைக்க உற்சாகப்படுத்தும் தந்தையாக, பசுபதி நன்கு நடித்து இருக்கிறார். முதலில் அப்பாவை வெறுத்து, பிறகு மனம் மாறி, கபடி விளையாட்டில் ஜெயிக்க சபதம் செய்யும் விக்ராந்த் மனதில் பதிகிறார். அவருக்கும், அர்த்தனாவுக்குமான காதல் காட்சிகளுக்கு, 1980களில் வெளியான இளையராஜாவின் பாடல்கள் பின்னணியில் உற்சாகப்படுத்துகிறது.

பரோட்டா  சாப்பிடும் சூரி மற்றும் அப்புக்குட்டி  சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர். அர்த்தனா, கஞ்சா கருப்பு, ரவிமரியா, ஆடுகளம் கிஷோர், அருள்தாஸ் ஆகியோர் தங்கள் கேரக்டர்களை நிறைவாக செய்துள்ளனர். தென்காசியின்  பசுமையையும், கபடி மைதானத்தையும் இயல்பாக பதிவு செய்துள்ளது கிருஷ்ணசாமி கேமரா. செல்வகணேஷ் பின்னணி இசை காட்சிகளுக்கு கச்சிதமாக இருக்கிறது என்றாலும், பாடல்கள் மனதில் நிற்கவில்லை. மிக எளிதில் யூகிக்க முடிகின்ற திரைக்கதை பலவீனம். காட்சிகளில் புதுமை இல்லை. இதுபோல் வரும் சில குறைகளை நிவர்த்தி செய்து இருந்தால், இந்த கபடி ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!