மகனே... பால சாஸ்தா!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

ஆகமம் சிவராத்திரியை லிங்கோத்பவ காலம் என்று கூறும். யாமம் என்பது இரவையும், சேமம் என்பது சிவத்தையும் குறிக்கும். இரண்டையும் சேர்த்து சிவராத்திரி எனவும், வைரவர் என்பதால் லிங்கோத் பவ வடிவத்திலிருந்து வைரவ தோற்றத்தையும் குறிக்கவே ‘யாமம் வைரவர் ஏத்தும் பொழுதும் எமக்கு என்று வைத்த சேமம் திருவடி’ (73) என்பதால் நன்கு அறியலாம். “மகனும்” என்ற வார்த்தையால் சாஸ்தாவை குறிப்பிடுகின்றார். அசுரர்களும் தேவர்களும், பிணி, மூப்பு, சாக்காடு நீங்க இருவரும் இணைந்து அமுதம் கடைந்தார்கள், அமுதம் கிடைத்தபின் அமுதத்தை தேவர்கள் மட்டுமே உண்ண வேண்டும்.

அசுரர்கள் உண்ணக்கூடாது என்று உள்ளுக்குள் சூழ்ச்சி செய்து திருமாலானவர் தேவர்களை காக்க அசுரர்களை அமுதம் உண்பதிலிருந்து விலக்க மோகினி வடிவம் கொண்டார். வழுவூர் தலபுராணமோ அந்த மோகினி வடிவத்தில், மோகம் கொண்ட சிவபெருமானுக்கும், விஷ்ணுவிற்கும் மகனாகத்தோன்றியவரே `பூர்ணா புஷ்கலா சாஸ்தா’ என்கிறது. தாருகா வனத்தில் ரிஷிகளுக்கு ஞானத்தைத் தரும் பொருட்டு விஷ்ணு மோகினியாகவும், சிவபெருமான் பிட்ஷாடனராகவும் தோன்றி அருள் செய்தார்.

அவர்கள் இருவருக்கும் தோன்றிய மகனே பால சாஸ்தா என்று தல புராணம் குறிப்பிடுகிறது. எவ்வாறாயினும், விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் தோன்றிய புதல்வரே சாஸ்தா. அதையே அபிராமி பட்டர் “மகனும்” என்கிறார். மேலும், உமையம்மையே விஷ்ணுவாக இருக்கிறார் என்பதை ‘தரங்கக்கடலுள் வெங்கட் பனி அணைமேல் துயில் கூரும் வீழப் பொருளே’ (35) என்பதனாலும் உமையம்மையாகிற விஷ்ணுவின் மகனே சாஸ்தா என்பதையே “மகனும்”  என்கின்றார்.

“உண்டாய தன்றோ”

“உண்டாயது” என்பது தாய்மை அடைதலை குறிக்கும். உமையம்மையே ஐந்து வடிவங்கள் எடுத்து சிவபெருமானுடன் இணைந்து ஐந்து புதல்வர்களை ஈன்றாள் என்கிறது சாத்த தந்திரம். அதில் ‘கோபேச காளி, சமரேது துர்கா, போகே பவானி, பும்சா இதி விஷ்ணு’ என்ற தந்திர சாஸ்திர வரிகளால் கோபமாக விளங்கும் காளியினிடத்து பைரவரும், சண்டையிடும் துர்கையிடத்து வீரபத்திரரும், இன்புற்று இருக்குங்கால் பவானியிடத்து விநாயகரும், உமையம்மையே ஆணாக இருக்கும் போது, விஷ்ணபீடத்தில் சாஸ்தாவும், `சா’ என்ற உமையம்மையான அவள் என்று அழைக்கப்படுகிறாள். செவிலித்தாயாகிற கங்கையிடத்து காங்கேயனாகிய முருகனும் முறையே அவதரித்தனர். மேலும், நிலத்தின் அம்சமாக கணபதியும், நீரின் அம்சமான சாஸ்தாவும், காற்றின் அம்சமாக பைரவரும், தீயின் அம்சமாக முருகனும், ஆகாயத்தின் அம்சமாக வீரபத்திரரும் உருவானவர்கள் என்று சாக்த ஆகமங்கள் கூறுகின்றது.

இதையெல்லாம் மனதில் கொண்டு, ஐந்து புதல்வர்களையும் இவ்வாறு பாடலில் இணைந்து “தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ” என்றார். ஒரு பெண்ணிற்கு ஐந்து சிறப்புகள். அந்த ஐந்தையும் குறைவற பெற்றவள் உமையம்மை. கணவனிடத்து அன்பு, அறம், மகப்பேறு, என்றும் சுமங்கலியாக இருத்தல், குடும்பத்தை நடத்தும் பாங்கு, கணவனிடத்து அன்பு தகனம் முன்செய்த தவ பெருமார்க்கு பற்றில்லாமல் துறவியாக இருந்த சிவபெருமானுக்குதான் அன்புற்று ஐந்து புதல்வர்களால் நிறுவுகிறார் பட்டர்.

அறத்தின் வழி மணந்ததால் உமையம்மையின் இல்லறத்தின் உயர்வையும், தவம், அன்பு, உண்மை, மெய்கீர்த்தி, தியாகம் என்ற மிக உயர்ந்த பண்புகளை, பெற்ற புதல்வர்கள் சிவபெருமான் என்றும் அழியாமல் இருப்பதால் நித்ய சுமங்கலி என்றும் இனி வரும் அடுத்த வரியில் “வல்லி நீ செய்த வல்லமே” என்பதனால் உமையம்மை உலகை நடத்தும் பேராற்றலை மிகத் தெளிவாக “உண்டாயதன்றோ” என்றார்.

‘‘வல்லி நீ செய்த வல்லபமே” என்ற இந்த வார்த்தையால் “ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவபெருமார்க்கு” என்பதால் கடுமையான அறத்தை பின்பற்றும் துறவறத்தை பின்பற்றும் துறவியை தன் அன்பினால் உலகம் உய்வுறும் பொருட்டு திருமணம் செய்துகொண்ட சிறப்பான தன்மையை “வல்லபம்” என்கின்றார். “தடக்கையும்‌ செம்‌ முகனும்முந்‌ நான்கிரு மூன்றுஎனத்தோன்றிய மூதறிவின்‌ மகனும்‌உண்‌ டாயதன்றோ” என்கிறார். காமனையே எரித்த பண்புடைய கோலத்தையுடைய சிவபெருமானுடன் அறத்துடனும் அன்புடனும் வாழ்ந்து சிறப்பான ஐந்து புதல்வர்களைப்பெற்றதன் சிறப்பை “வல்லபமே” என்கிறார்.

இப்பாடல் ஒரு சாமான்ய பொண்ணாக உமையம்மையை மனதில் கருதி பாடலை துவங்கி அவர் தெய்வமாக முடிவில் காண்கின்றார்.இந்த பாடலின் வழி தெய்வீகத்திற்கும்மானுடத்திற்கும் இல்லத்தரசிக்கும் இருக்க வேண்டிய அன்பையும் அறத்தையும் அதன் விளைவான அருள் பெருக்கையுமே “வல்லி நீ செய்த வல்லபமே” என்றார். உமய அம்மையின் வல்லபத்தை அருளைப்பெற நாமும் முயல்வோம்.

“அந்தமாக”“ககனமும்‌ வானும்‌ புவனமும்‌ காண விற்காமன்‌ அங்கம்‌ தகனம்முன்‌ செய்த தவப்பெரு மாற்குத்‌” என்பதால் சிவபெருமானுடைய சிறிய தவமாகிய அறத்தையும் “தடக்கையும்‌ செம்‌ முகனும்முந்‌ நான்கிரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்‌ மகனும்‌ உண்‌டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே” என்பதால் ஊமை அம்மையின் அன்பையும் விளக்கி இல்லறச் சிறப்பை நிலைநாட்டி இறையருள் பெற வழிவகை செய்கிறார் வழியை பின்பற்றி மகிழ்வோம்.

வல்லபம்‌ ஒன்றறியேன்‌; சிறியேன்‌; நின்‌ மலரடிச்செம்‌

பல்லவம்‌ அல்லதுபற்று ஒன்றுஇலேன்‌; பசும்‌ பொற்பொருப்பு

வில்லவர்‌ தம்முடன்‌ வீற்றிருப்பாய்‌ வினையேன்தொடுத்த

சொல்‌ அவ மாயினும்‌, நின்திரு நாமங்கள்‌ தோத்திரமே.

அறுபத்தி ஆறாவது அந்தாதி

“ஆதியாக”

அபிராமி சமயத்தை பின்பற்றுவோர் ஆசாரம் அனுஷ்டிக்கவில்லையே, மந்திரம் சொல்லவில்லையே, கோயிலுக்கு செல்லவில்லையே, என்ற கவலை வேண்டாம். உமையம்மைக்கு கருணை மிக உண்டு நமக்கு வரம் தரும் வலிமையும் அவளுக்கு அதிகம் உண்டு. தவறாக சொன்னாலும் பரவாயில்லை. உங்கள் தாயை நீங்கள் அழைப்பது போல் உள் அன்போடு உள்ளம் உருகி இந்த பாடலைப் படிக்க மட்டும் செய்யுங்கள். அது உமையம்மையின் காதுகளில் விழும் அவளின் திருவடி உங்களின் வீடுகளை தேடிவரும் நீங்கள் தேடுவது அனுபவச் சாத்தியப்படும் என்கிறார் பட்டர்  முயன்று பார்ப்போம். நாமங்களை தோத்திரம்  செய்வோம் இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

வல்லபம் ஒன்றறியேன்

சிறியேன்

நின் மலரடிச்செம் பல்லவம் அல்லதுபற்று

ஒன்று இலேன்

பசும் பொற்பொறுப்பு, வில்லவர் தம்முடன்

வீற்றிருப்பாய்

வினையேன்

தொடுத்த சொல்

அவமாயினும்

நின் திரு நாமங்கள் தோத்திரமே

இவ்வரிசையின்படி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

‘‘வல்லபம் ஒன்றறியேன்”

என்ற சொல்லானது வலிமையை குறிக்கும். இப்பாடலைப்பொறுத்தவரை உபாசனைப் பலம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் அருளைப் பெறும் திறன் என்ற பொருளில் அபிராமிபட்டர் பயன்படுத்துகிறார். உபாசனை நெறியில் வல்லபமானது தசமகா வித்யை என்ற பத்துவிதமான அருட்பெறும் திறமையை குறிக்க பயன்படுத்தும் சொல்லாகும்.

இந்த சொல்லின் செறிவை அறிய அதை ஒவ்வொன்றாய் காண்போம். அபிராமியின் அருளைப் பெற அவள் அருளாலே உபதேசிக்கப்பட்ட சாக்த தந்திரங்களாகிய பூசனை செயல்முறை விளக்க நூல். இந்த நூலை கற்றல் என்பது உபாசகனுக்கு வலிமையூட்டும். அந்த வகையில் அபிராமி பட்டர் சில நூல்களை அந்தாதியில் குறிப்பிட்டுள்ளதை நாம் காண முடிகிறது. மேலும், சில இடங்களில் எதிர்மறையாக படிக்கவில்லையே என்று வருத்தப்பட்டு கூறும் வகையிலும் சில நூல்களை குறிப்பிடுகிறார்.

* அபிராமி அந்தாதியில் ‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு’ (79) என்பதனால் வேதங்களை கற்றல் என்பது ஒருவகை உபாசனை பலம்.

* ‘சுருதிகளின் பணையும்’ (2) என்ற வார்த்தையால் வேதமந்திரங்கள் கூறும் சடங்கு, மற்றும் வேள்வி முறை இவைகளை அறிதல் என்பது உபாசனைக்கு வலிமையூட்டும்.

* ‘மறையின் பரிமளமே’ (22) என்பதனால் வேதம் மற்றும் வைதீக சடங்குகளின் தத்வார்த்தங்களை அறிந்திருத்தல் என்பது உபாசனைக்கு மிகுந்த பலத்தைத்தரும்.

* ‘சுருதிகளின் கொழுந்தும்’ (2) என்பதனால் வேதத்தை அறிய உதவிபுரியும் ஆறு அங்க நூல்களாவன.

சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். சிக்ஷா - வேத எழுத்துக்களின் பிறப்பிடம் அவைகளை உச்சரிக்கும் முறையை ஒலியின் அளவு இவைகளைப் பற்றி விரிவாகக் கூறும் நூல்.வியாகரணம் - வேதத்தில் காணப்படும் சொற்களுக்கான பகுதி மற்றும் விகுதிகளைப் பற்றி அறிய உதவும் நூல்.

இது பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டிற்கும் பொருந்தும் [ஒட்டு விளக்கம் ப்ரகிருதி ப்ரத்ய யஞானம்]சந்தஸ் - யாப்பிலக்கணம் நிருக்தம் - வேதங்களில் காணப்படும் அறிய சொற்களுக்கான பொருள் விளக்க நூல். ஜோதிஷம் - இவை வைதீக கருமங்களுக்கான காலத்தைப் போதிக்கும் நூல்.

கல்பம் - சடங்குகளுக்கான முறைமையைக் கூறும் மந்திர நூல் ‘சுருதிகளின் கொழுந்தும்’ என்பதனால் இத்தகைய மந்திரங்களை முறைப்படி உச்சரித்து பொருள் அறிந்து அதன் வழி சடங்குகளை  செய்து மனத்தூய்மை பெற்று அதனால் ஆன்ம விசாரம் தோன்றி அதன் வழி சிவன் அருளை தோற்றுவிக்கும் சாஸ்திரங்களை, அறியாதவனாகவும், முழுமையாக அறிந்து உணரும் ஆற்றல் இல்லாதவனாக இருக்கின்றேன் என்பதனால் இந்நூலைக்கற்பது சிறந்தது என்பதாகிறது.

* மேலும், உமையம்மைக்கு மிகவும் விருப்பமான பூசனையை அறிந்து அதை சரிவர பொருட்களைக்கொண்டு தக்க காலத்தில் தக்க மனப்பக்குவம் பெற்று சக்தியின் அருள் பெற சக்தியற்றவனாய் இருக்கிறேன். ‘பரமாகம பத்ததியே’ (6) என்பதனால் அறியலாம்.

* என்னுடைய தேவைகளை உமையம்மைக்கு தெரியப்படுத்தி உமையம்மை கூறும் மொழியை, சகுனங்களை அறிந்து என்னால் புரிந்து கொள்ள இயலாதவனாய் இருக்கிறேன். இதை ‘புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம்’ (91) தொழும் பண்பு எனக்கு இல்லை என்பதனால் எதிர்மறையாகச்சொல்கிறார்.

* இந்த பூசனையை செய்தால் இன்ன பலன் வரும், இந்த தோத்திரத்தை சொன்னால் இந்தப் பலன் வரும், இந்த யந்திரத்தை அமைத்து விட்டால் ஸ்வாமி இப்படி தோன்றும். இந்த தெய்வத்திற்கு இந்த காலம், இன்னதை  செய்தால் இந்த பலன் வரும் என்கின்ற பூஜா பத்ததி நூல்களை அறிந்து, அதன் பொருள் புரிந்து, அதில் உள்ளபடி மனம், வாக்கு, காயத்தால் உலகிலுள்ள பொருட்களை கொண்டு உன்னை அர்ச்சித்து அதன் வழி பலனை பெற வலிமை அற்றவனாக இருக்கிறேன் என்பதனால் பலத்தை எதிர்மறையாகக் கூறுகிறார்.உலக இன்பங்களை எல்லாம் ஒடுக்கி உள்ள உண்மையை அறிந்து உன்னையே நினைத்து உள்ளம் ஒருமித்து த்யானம் செய்ய இயலாதவனாய் இருக்கிறேன். என்பதை ‘நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்’ (59) என்பதனால் அறியலாம்.

உன் திருவிளையாடல்களை உணர்த்தும் தேவிபாகவதம், லலிதா ஸஹஸ்ரநாமம், தேவி மஹாத்மியம் போன்ற உனது புனித சரித்திரங்களை கேட்டு மனம் தெளிய ‘நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும், நினைப்பதுன்னை’ (10) அவற்றைப் பற்றி நினைக்க வல்லமை உடையவன் இல்லை. உனது திருமந்திரத்தை உள்ளம் உருகி அன்புடன் உன்னை அழைக்கும் வகையில் முறையான குருவினிடத்து உபதேசம் பெற்று மந்திரம் சொல்ல வல்லேன் அல்லேன் என்பதை ‘மன்னியது உன் திருமந்திரம்’ (6) இப்படி எல்லா வகையிலும் உபாசனை வழியில் வெற்றி பெற வேதாத்யயனம், ஷடங்குகள், சடங்குகளின் தத்துவங்கள், முறையாக மந்ரோச்சாரனம் செய்தல், சித்தாந்தம், பூஜாபத்தி தோத்திரம், தாந்ரீக நெறி, ஆச்சார அனுஷ்டானம், த்யானம் மற்றும் மூலமந்ரம் இந்த பத்து வகை நெறியிலும் ஒன்றைக்கூட அறிந்து பின்பற்ற தகுதி வலிமை அற்றவனாக அறியும் ஆற்றல் இல்லாதவனாக [மனப்பாட திறன் இல்லாதவராக] தான் இருப்பதையே ‘‘வல்லபம் ஒன்றறியேன்” என்கிறார்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: