நந்தி வடிவ தொந்தியுடன் துவாரபாலகர்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: வைத்தியநாதேஸ்வரர் ஆலயம், தலக்காடு, (மைசூரிலிருந்து 45 கிமீ), கர்நாடக மாநிலம்.

காலம்: ஆரம்ப கட்டுமானங்கள் மேலை கங்கர் வம்சம் (பொ.ஆ 350-999). பின்னர் சோழ, ஹொய்சாள, விஜயநகரப் பேரரசு மன்னர்களால் புனரமைக்கப்பட்டது.

‘துவாரபாலகர்கள்’ - இந்துக் கோயில்களின் மூலவரின் கருவறைக்கு இருபுறமும் நுழைவாயிலில் வாயிற்காப்பாளராக வாயிற்காப்பானாக வீற்றிருப்பவர்கள். துவாரபாலகர்களின் சிற்பங்கள் பெரும் போர்வீரர்களுக்கு உரிய வீரத்தை வெளிப்படுத்தும் குணாதிசயங்களுடன் சித்தரிக்கப்படுகின்றன. கருவறையில் வீற்றிருக்கும் தெய்வத்தின் மகத்துவத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் அவர்களின் தோற்றம், பண்புக்கூறுகள் அமைந்திருக்கும். அவர்களின் ஆடைகள், தரித்திருக்கும் தெய்வீக சின்னங்கள், ஆயுதங்கள், சக்திகள் ஆகியவை பிரதான தெய்வத்தின் இயல்புகளுடன் தொடர்புகொண்டே அமைக்கப்பட்டிருக்கும். சிவன், விஷ்ணு, அம்மன் என ஒவ்வொரு கடவுளும் தங்களுக்கென பிரத்யேக துவாரபாலகர்களைக் கொண்டுள்ளனர்.

அசத்த வைக்கும் அழகியல், தைரியம் வெளிப்படும் விரிந்த விழிகள், அச்சுறுத்தும் தோரணை, கோரைப்பற்களுடன் லேசான புன்னகை காட்டும் இதழ்கள், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த ஆபரணங்கள், உறுதியாக ஊன்றி நிற்கும் கால்கள் என அனைத்துச் சிற்பச் சிறப்புகளுடன் காணப்படும் இந்த துவாரபாலகர்கள் தலக்காடுவின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும்.துவாரபாலகரின் மார்புப்பகுதி, வயிற்றில் நடுவில் தொந்திப்பகுதியை காணுகையில், காளை(நந்தி)யின் முக வடிவம் தெரிவது போல் காட்சிப்படுத்தியுள்ளது மற்றொரு சிறப்பு.

மேலை கங்கர் வம்சத்தின் (பொ. ஆ 350-999) தலைநகரான தலக்காடு, அக்காலத்தில் செழிப்பான நகரமாக விளங்கி, ராஷ்ட்ரகூடர்கள், சாளுக்கியர், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு, மைசூர் உடையார்கள் என தென்னிந்தியாவின் பல புகழ்பெற்ற அரசர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. முதலாம் இராஜராஜ சோழர் தலைக்காட்டைக் கைப்பற்றி அதற்கு ‘ராஜராஜபுரம்’ என்று பெயரிட்டார்.

காவிரிக்கரையில் அமைந்திருக்கும் தலக்காட்டில் பாதளேஷ்வரர், மருளேஸ்வரர், அர்கேஸ்வரர், வைத்தியநாதேஸ்வரர், மல்லிகார்ஜுனர் மற்றும் கீர்த்தி நாராயணப்பெருமாள் கோயில்கள் புகழ்பெற்றவை.இவற்றில், மிகப் பெரியதான வைத்தியநாதேஸ்வரர் கோயில் (வைத்தியேஸ்வரா என்றும் உச்சரிக்கப்படுகிறது), 16-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு ஆட்சியாளர்களால் விரிவுபடுத்தப்பட்டு, புனரமைக்கப்பட்டதால், கங்க - சோழ - ஹொய்சாள - விஜயநகர என அனைத்துக் கட்டடக்கலைகளின் கலவை அம்சங்களைக்காணலாம்.

17-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு காவிரி ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களினால் மணலில் புதைந்திருந்த இப்பகுதி (அரசியின் சாபத்தினால் மணலில் புதைந்தது எனவும் ஒரு கருத்துண்டு), சில நூற்றாண்டுகளாக ஒரு மறக்கப்பட்ட நகரமாக இருந்துள்ளது. பின்னர் அகழ்வாராய்ச்சிகளினால் இவ்வாலயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

Related Stories: