×

திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒலிக்கும் மார்கழி

மார்கழி மாதம் பிறக்கப் போகிறது (16-12-2022). பனிவிடியலில், நம் செவிகுளிர பக்திப் பாடல்கள், மாதம் முழுக்க ஒலித்துக் கொண்டே இருக்கும். எல்லாக் கோயில்களும் வழிபாட்டிற்கு திறந்திருக்கும். எங்கெங்கு பார்த்தாலும் பக்தி மணம்கமழும். ஆன்மிக விழிப்புணர்வின் உன்னதமான மாதம் மார்கழி மாதம். திருமால் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவையும், சிவாலயங்களில் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சியும், ஒலித்துக்கொண்டே இருக்கும்.

திருப்பாவை

1. திருப்பாவை ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அவள் நோற்ற, மார்கழி நோன்பு திருப்பாவை பாசுரங்களாக விரிந்திருக்கிறது.
2. மார்கழி மாதத்தின் பெயரோடு ``மார்கழித்திங்கள்’’ என்று தொடங்குகிறது திருப்பாவை என்பது சிறப்பு.

“மார்கழி”த் திங்கள் மதிநிறைந்த
நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்
சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
(திருப்பாவை, முதல் பாசுரம்)


3. வைணவத்தில் மார்கழி மாதத்தை திருப்பாவை மாதம் என்று அழைப்பார்கள். மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளையும் அந்தந்த நாளுக்குரிய பாசுர வரிகளைச் சொல்லிக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, ``ஓங்கி உலகளந்த’’ என்று குறிப்பிட்டால், மார்கழி மூன்றாம் நாள் என்று பொருள்.

4. பொதுவாக பகவானை துயில் எழுப்புவது ``சுப்ரபாதம்’’ (தமிழில் திருப்பள்ளியெழுச்சி) என்பார்கள். ஆனால், திருப்பாவை வித்தியாசமான சுப்ரபாதம். முதலில் அடியார்களை துயிலெழுப்பி, அவர்களோடு இணைந்து பெருமாளை துயில் எழுப்பி, தன்னுடைய வேண்டுதலைச் சொல்வதாக அமைந்திருக்கிறது.

5. அனைத்து வேதாந்தக் கருத்துக்களும் திருப்பாவையில் இருப்பதால், வேதம் அனைத்திற்கும் வித்து என்று ஆன்றோர்கள் கொண்டாடுகிறார்கள். திருப்பாவையின் தத்துவத்தை முழுவதும் புரிந்து கொண்டால், வைணவத்தின் முழுமையான தத்துவத்தை ஒருவன் புரிந்துகொண்டவன் ஆகிவிடுவான்.

6. தமிழில் பாடப்பட்ட திருப்பாவை பாசுரங்கள், மார்கழி மாதத்தில் இந்தியா முழுவதும் உள்ள எல்லா திருமால் ஆலயங்களிலும் பாடப்படுகிறது. மற்ற மொழிக்காரர்கள் தங்கள் மொழிகளில் திருப்பாவைப்பாடல்களை எழுதிக் கொண்டு, தமிழில் பாடி வழிபாடு நடத்துகிறார்கள்.

7. இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தவர் சுவாமி ராமானுஜர். திருமலையில் 11 மாதங் களில், வடமொழி சுப்ரபாதம்தான் ஒலிக்கும். ஆனால், மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும்தான் ஒலிக்கும்.

8. நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில், அர்ச்சனை செய்வதுபோல், போற்றி மந்திரம் திருப்பாவையில் உள்ளது. இந்தப் பாடலைச் சொல்லி ஒவ்வொரு பூவாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கலாம்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்
திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில்
வேல்போற்றி
என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை
கொள்வாய்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்
எம்பாவாய்


9. வைணவ ஆலயங்களில் எந்த விழாவாக இருந்தாலும்கூட ஆண்டாளின் திருப்பாவை பாடல்களைப் பாடாமல் வழிபாடு நிறைவு பெறாது.

10. இறைவனை அடைவதற்கு ஆண்டாள் காட்டும் மூன்று வழிகள்;

1. தூய்மையான மனதோடு

2. தூய்மையான மலர்களோடு

3. இறைவனின் திருநாமத்தை பாடுவதன் மூலம், மிக எளிதாக இறைவனை அடையலாம்.

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை

1. மணிவாசகப் பெருமான் இயற்றிய நூல் திருவாசகம். திருவாசகத்துக்கு, `உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று சொல்வார்கள். அந்த திருவாசகத்தின் சிகரமாக மார்கழி மாதத்தில் பாடப்படுவதற்கென்றே அமைந்த நூல் திருவெம்பாவை.

2. பஞ்சபூத தலங்களில், அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. அதனால், அந்த தல புராணத்தின் கருத்து முதல்வரியில் சொல்லப்படுகிறது.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்
தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்
செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்
தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி
மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும்
புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே!
என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!


3. `திரு’ என்றால் செல்வத்தைக் குறிக்கும். மார்கழிச் செல்வன் அல்லவா சிவபெருமான். திருவாதிரை மாதம் மார்கழி. இறைவனுக்கு திரு ஆதிரையான் என்ற பெயர் உண்டு.

4. மார்கழி விடியல் எழுந்து, செல்வமாகிய திருநீறு (விபூதி)அணிந்து,                                                                                                              செல்வனாகியசிவனை,  திருவெம்பாவை பாடி வழிபட்டால், அவர்களுக்கு எல்லா விதமான செல்வமும் கிடைக்கும்.

5. சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான தத்துவக் கருத்துக்கள் சாறு பிழிந்து திருவெம்பாவையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டுப்பாடல்கள், சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது. ஒன்பதாவது பாடல், சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல், நீராடுதலையும் குறிப்பன.

6. திருவெம்பாவையை ஒருவர் முழுமையாக உணர்ந்து கொண்டுவிட்டால், சைவ சித்தாந்தக் கருத்துக்கள் அவர் நெஞ்சில் படும். மார்கழி மாதத்தில் எல்லா சிவாலயங்களிலும், திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகிறது. வீதியில் அடியார்கள் இதனை ஓதிக் கொண்டே வலம் வரும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியாகும்.

7. வைணவத்தில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி என்று இரண்டு நூல்கள் இருக்கின்றன. ஆனால், சைவத்தில் திருவெம்பாவை இருபது பாடல்களும், திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்களும், ஆக முப்பது பாடல்கள் இருக்கின்றன. மணிவாசகப் பெருமானே திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி இரண்டையும் அருளிச் செய்திருக்கிறார். திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலும் `எம்பாவாய்’ என்கின்ற சொல் பாடலின் நிறைவில் வருகிறது. பாவை நோன்பின் அடையாளமாக இந்த சொல் இருக்கிறது.

8. சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்ற மூன்று விஷயங்களைச் சொல்வார்கள். பசுவாகிய ஆன்மாக்கள், பாசமாகிய மும்மலங்களில் இருந்து நீங்கி, பதியாகிய இறைவனை அடைந்து, அவருக்குத் தொண்டுபுரிவதுதான் நோக்கம் என்பதை நாடகப்பாணியில் விளக்குவது திருவெம்பாவை.

9. இதில், ஒவ்வொரு பெண்களும் சிவனடியார்கள்தான். அவர்களைத்தூக்கத்திலிருந்து எழுப்புவதாக எண்ணக்கூடாது. பொதுவாகவே, ஆன்மிகத்தில் எழுப்புவது என்றாலே ஆன்மிக எழுச்சியைத் தான் குறிப்பிடுகிறது.

10. இறைவனின் ஐந்து தொழில்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற விஷயம் திருவெம்பாவையில் பொதிந்து கிடக்கிறது. திருப்பாவையில், போற்றி மந்திரம் இருப்பதுபோலவே, திருவெம்பாவையிலும், அமைந்திருக்கும் அழகு வியக்கத்தக்கது. ஒரே ஒரு வேறுபாடு என்னவென்று சொன்னால், திருப்பாவையில் போற்றி என்ற சொல், ஒவ்வொரு வரியின் நிறைவாக வரும். ஆனால், திருவெம்பாவையில் ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும் “போற்றி” இருக்கின்றது.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம்
செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம்
பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம்
பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம்
இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத
புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும்
பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர்
எம்பாவாய்


இறைவனைப் போற்றுவது உயிர்களின் தலையாயக்கடமை என்பதை விளக்குவது, திருப்பாவையும், திருவெம்பாவையும்.

முனைவர் ஸ்ரீராம்

Tags : Margazhi ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் வருடாபிஷேகம்