பூந்தமல்லி: பழைய ஊதியம் வழங்க கோரி தனியார் உணவு டெலிவரி ஊழியர்கள் நடை பயணம் மேற்கொண்டனர். உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனமான ஸ்விகியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்நிறுவனம் ஊழியர்ளுக்கு சம்பளம் கொடுப்பதில் சில புதிய நடைமுறைகளை அறிவித்தது. இதனைக் கண்டித்து அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் கடந்த சில தினங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்நிறுவனம் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலிருந்து இந்நிறுவன ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடை பயணமாக சென்றனர்.அப்போது அவர்கள் கூறியதாவது : ‘‘கடந்த திங்கட்கிழமை முதல் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம் . எங்களது சம்பளத்தை புதிய திட்டத்தில் கொடுக்க முயற்சி செய்கிறார்கள் . பழைய முறையில் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை. எங்களது நிறுவனத்தின் கிளை அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அங்கு சென்று கோரிக்கை வைத்தும் ஏற்கவில்லை. தற்போதுள்ள புதிய முறையில் தான் வேலை பார்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எங்களுக்கு பழைய முறையில் வேலை கொடுக்க வேண்டும். முகம் தெரியாத முதலாளியிடம் வேலை செய்து வருகிறோம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெங்களூரில் இருப்பதாக வந்த தகவலையடுத்து அவரை சந்தித்து, எங்களது கோரிக்கைகளை சொல்வதற்காக தற்போது நடை பயணமாக பெங்களூர் செல்கின்றோம். பழைய நடை முறையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை வேலை செய்யும் போது குறிப்பிட்ட தொகை வரும். தற்போது புதிய நடைமுறையில் பகுதி நேரமாக பார்ப்பவர்களுக்கும், முழு நேரமாக பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு இத்தனை உணவு டெலிவரி செய்தால் குறிப்பிட்ட தொகை சம்பளமாக தருவதாக கூறுகின்றனர். இது, எங்களுக்கு ஏற்றது போல் இல்லை. இதனால் ஊழியர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேற போகிறோம். பழைய ஆப் நடைமுறையில் வர வேண்டும். புதிய ஆப் வரக்கூடாது.’’ என தெரிவித்தனர்….
The post பழைய ஊதியம் வழங்கக் கோரி தனியார் உணவு டெலிவரி ஊழியர்கள் நடைபயணம்: பூந்தமல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.