சொக்க வைக்கும் சொக்கீஸ்வரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: சொக்கீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்

காலம்: உத்தமச்சோழன், பொ.ஆ.985

காமாட்சி அம்மன் கோயில் வாயிலுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் இந்த சோழர் கால ஆலயம், தரை மட்டத்திற்கு கீழே அமைந்துள்ளதால் அதிகமானவர்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. சோழர் கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழும் இவ்வாலயம், சோழ மன்னர் உத்தமச் சோழனால் பொ.ஆ.985ல் கற்றளியாக கட்டப் பட்டது. இத்திருக்கோயில் கல்வெட்டில், `தெற்கிருந்த நக்கர் கோயில்’ என்று இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இந்த சிறிய கற்றளியின் ஆலய விமானத்தில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களின் எழில், காண்போர் மனதை மயக்கும். விமானத்தில் கிரீவ கோஷ்ட பகுதியில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, யோக நரசிம்மர் சிற்பங்கள், நந்திகள் சூழ பேரழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகிய கீர்த்தி முகத்துடன் கூடிய நாஸிகை பகுதியினுள் மினியேச்சராக ஆலய விமானம் அமைத்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

வியாள வரியும், நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள கூடு, குறுஞ்சிற்பங்களின் நேர்த்தியும் வியக்க வைக்கின்றன. கோஷ்ட தெய்வங்களில் சில புதிய சிலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேஷ்டைகள் புரியும் பூதகணங்கள் இருபுறமும் இருக்க, கோஷ்டத்தில் வீற்றிருக்கும் விநாயகரும், மேலே நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் தோரணமும் சிந்தையைக் கவருகின்றன. கௌசிகன் என்பவன் வழிபட்டதால், இத்திருக்கோயில் இறைவன் `கௌசிகேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டு, தற்போது `சொக்கீஸ்வரர்’ என்ற பெயர் கொண்டுள்ளார். இவ்வாலயம் தொல்லியல் துறையினரால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தொகுப்பு: மது

படங்கள்: ஜெகதீஷ்

Related Stories: