அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் -பாலினும் சொல் இனியாய்

ஒருசில பூசனைகளை செய்துவிட்டு தான் இறைவனுக்கு மிகுதியாகக் செய்துவிட்டோம் என்று தங்களின் புகழை பறைசாற்றிக்கொள்வது சிலரின் உலக வழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், அபிராமிபட்டர் மாத்திரை பொழுதுகூட உமையம்மையை மறந்தறியாதவர். ஆனால், அவர் மாற்றி யோசிக்கிறார். நம் பூசனையினால் உமையம்மை வரவில்லை குழந்தையானது மழலையில் தவறாக பேசினாலும், அதைக் கேட்ட தாய் அக்குழந்தையின் மழலையை உயர்வாகக் கருதி புகழ்வது போல உமையம்மை தன் கருணையினாலேயே அருள்செய்கிறார். அதையே இப்பாடலின் வழி அறிவோம்.

பாலினும் சொல்இனியாய் பனிமா மலர்ப் பாதம் வைக்க

மாலினும், தேவர்வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின்  

மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு

நாலினும் சாலநன்றோ அடி யேன்முடை நாய்த்தலையே?

- பாடல் 60

“பாலினும் சொல் இனியாய்”

பாலையும் சொல்லையும் இணைத்து ஒப்பிடுகிறார் அபிராமிப்பட்டர். இவை இரண்டும் ஐந்து விதத்தில் ஒன்றான தன்மைகொண்டது. அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம். உணவை உண்டு செரிக்க இயலாத நிலையில் சுமார் ஆறுமாதக் குழந்தைக்கு உணவாக தாய்ப்பால் மட்டுமே அளிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. பதிகத்தில்  “முலை சுரந்தொழகு பாலூட்டி’’ என்கிறார். இந்த நிலையில் குழந்தைக்கு உயிர் காக்கும் அமுதமாய் இருக்கின்ற பாலின் தன்மையையே “பாலினும்” என்கிறார்.

பொதுவாக மனிதர்கள் நோயுற்ற நிலையிலும், உணவுகள் ஒவ்வாத நிலையிலும் கூட பசும்பால் உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. அப்படி நோயுற்ற நிலையிலும் உணவாக திகழும் இன்றியமையா தன்மையையே “பிணிக்கு மருந்தே - 24” என்கிறார். ஒரு மனிதன் இறந்த நிலையில் அவனது உடல் எரிக்கப்பட்டும்கூட பால் ஊற்றும் வழக்கம் உள்ளது. சாத்திரங்களிலும் இது பரிந்துரைக்கப்படுகிறது. அந்த நிலையில், பாலினுடைய உயிர் காக்கும் பண்பையும் “பாலினும்” என்றே குறிப்பிடுகிறார். அதையே “அமரர் பெருவிருந்தே-24” என்று குறிப்பிடுவதிலிருந்தும் அறியலாம்.

கோயில்களில் உறையும் அர்ச்சாவதாரமான கல் திருமேனிகளிலும் கூட எண்ணெயும், பாலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இறையருளை பெற்றுத்தரும் சாதனமாகவும் பால் கருதப்படுகிறது. திருக்கடையூரை பொறுத்தவரை, அமுதம் நிறைந்த குடமே அமிர்த கடேஷ்வரராக கள்ளவாரரான விநாயகரால் வழிபடப்பட்டது. அமிர்தம் என்ற சொல் தண்ணீர், பால், இறவா மருந்து என இம்மூன்றையும் குறிக்கும் அமிர்தமாக உமையம்மையும், கடமாக சிவமும் இணைந்தே அமிர்தகடேஷ்வர் எனப்படுகிறது. எல்லா கோயில்களிலும் அம்மன் சந்நதியில் பள்ளியறை இருக்கும். ஆனால், திருக்கடையூரில் இருக்கும் பள்ளியறையானது சுவாமி கோயிலிலேயே இருப்பதை கொண்டும் நிறைந்த அமுதமுமாய் என்பதனாலும் அறியலாம். உமையம்மையின் அர்ச்சாவதார மூர்த்தியாக பாலே உள்ளது.

சுயம்பு மூர்த்திகள் உளியினால் செதுக்கப்படாதது. சுயம்பு மூர்த்திகளை கண்டால் எந்த பசுவும் தானே தனது பாலை சுரந்து விடும் பண்பு கொண்டது என்பதை பட்டர் “அருளே-30” என்று குறிப்பிடுகிறார். இப்படி பாலை சுரந்ததன் வழி கண்டு பிடிக்கப்பட்ட சுயம்பு லிங்கங்களே, தேனுபுரீஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறது. இந்த நிலையில், பாலானது இறைவனை வெளிப்படுத்தி காட்டுகிற பண்பையும் “பாலினும்” என்கிறார். இந்த கருத்துக்கள் அனைத்தையும் மனதில் கொண்டே உயிர் வாழ அடிப்படையானதும், உடல் ஆரோக்கியத்தையும், உடலோடு மட்டுமன்றி உயிருக்கு நலம் பயப்பதையும் இறையருளை பெற்று தரும் பண்பையும் இறைவனையே வெளிப்படுத்தும் பண்பினையும் இவை எல்லாவற்றையும் விட உயர்வாக உமையம்மையே பாலாக திகழும் தன்மையையும் ``பாலினும்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

சொல் இனியாய்சொல்லையும், பாலையும் குணப்பண்பால் ஒன்றாக்கி காட்டுகிறார். பிறந்தவுடன் குழந்தைக்கு அளிக்கப்படும் தாய்ப்பாலை போல தீக்ஷை செய்தவுடன் உபதேசிக்கப்படும் மந்திரசொல்லானதை மீண்டும் மீண்டும் சொல்வதனால், குழந்தையை எப்படி பால் வளர்க்கிறதோ, அதுபோல இறைவன் மீதிருக்கும் நம்பிக்கையை வளர்க்கும் பண்புடையது ஜபம். நம்பிக்கை என்பது நாம் அனுபவித்தாலன்றி தோன்றாதது. ஜபம் செய்யும் உபாசகனுக்கு கடவுள் கனவில் தோன்றுவதும், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் இன்ப துன்பத்தை முன்கூட்டியே அறிவதும், ஜபம்செய்தபொழுது ஏற்படும் மாறுபாட்டை அனுபவத்தில் அறிவதாலும் சகுனத்தினாலும் தோன்றும். இதுவே சாதகனை வளர்க்கும். அதனால்தான், சொல் இனியாய் என்றார். தீட்சை என்பது சாதகனுக்கு மறுபிறப்பு போன்றதாகும். அதனாலும் பெயர் மாற்றப்படுகிறது. அதைக் கொண்டும் இதை உணரலாம்.

மனிதர்கள் துன்புறுகிறபோது அதை போக்கிக் கொள்ள பல்வேறு வழிகளை நாடுகிறார்கள். அதில் ஒன்று குரு உபதேசித்த மொழியை கேட்டல். இந்த உபதேச மொழியானது சாதகனுக்கு துன்பத்தை நிவர்த்தி செய்யும் வழியாகவும் அதைப் போக்கும் சாதகமாகவும் உபதேச மொழியே பயன்படுகிறது. உதாரணமாய், அருணகிரிநாதருக்கு ``சும்மா இரு சொல்லற, பட்டினத்தாருக்கு ``காதற்ற ஊசியும் வாராது நூலின் கடைவழிக்கே’’ என்பது போல, அபிராமிபட்டர் அமாவாசையை பெளர்ணமி என்றது அவர் வாழ்வையே முழுவதுமாய் மாற்றி அமைத்தது. அத்தகைய ஆற்றலுடைய சொல்லையே “சொல் இனியாய்” என்றார்.

உடலை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் உயிரைப்பற்றிய வளர்ச்சியை உண்மைத் தன்மையை விளக்கிக் கூறும் வேதவேதாந்தத்தின் ஆற்றல் மிக்க அனுபவம் சார்ந்த அறிவுரைகளையே “சொல் இனியாய்” என்றார். இதையே “மறையின் பரிமளமே-22  ``சுருதிகளின் பணையும் கொழுந்தும்-2” என்பதனாலும் அறியலாம். இதை நடைமுறையில் `மஹா வாக்கியம்’ என்பர். இதையே “அஹம் பிரம்மாஸ்மி” என்று துறவியர் மந்திரமாக ஜபிப்பர்.

கோயில்களில் இறைவனை வழிபடுவதற்கு பாலைப் பயன்படுத்துவது போல, வேத மற்றும் ஆகம மந்திரங்களை சொல்லியே வழிபாடு செய்வர். அதைக் கருத்தில்கொண்டே ``சொல் இனியாய்’’ என்றார். இதையே பட்டர் “வேதம் சொன்ன வழிக்கே”-79 என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக “சொல்” என்ற சொல்லால் “சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்”-28 என்று சிவபெருமானையும் குறிப்பிட்டார்.

இத்தகைய பாலுக்கும் சொல்லுக்கும் உண்டான ஒப்புமையை கருதியே பாலினும் சொல் இனியாய் என்றார். பாலைவிட சொல்லை உயர்த்திக் கூறுவதற்கு காரணம் பால் உடல் நலத்தை தருகிறது. சொல் உடல் நலத்தோடு உயிர் நலத்தையும் சேர்த்து பெறும் ஞானத்தையும் தருவதனால் “பாலினும் சொல் இனியாய்” என்றார்.

பனிமா மலர் பாதம்

வடமொழியில், ஹிமம் என்பதற்கு “பனி” என்று பொருள். பனி என்கின்ற வார்த்தையை மூன்று பொருள்களில் அபிராமிப்பட்டர் பயன்படுத்துகிறார். ஒன்று குளிர். மலை அரசன் மகளான பார்வதியை பனி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இதையே “இமவான் பெற்ற கோமளமே”-95 என்பதனால் அறியலாம். பனி என்ற சொல்லிற்கு அச்சம், பயம் என்பதும் ஒரு பொருளுண்டு. உலக உயிர்களுக்கு அச்சத்தை தரும் அழிவை செய்யும் பரமனுக்கு மனையாள் என்ற முறையில் பயங்கரி என்று உமையம்மைக்கு பெயர்.

அந்த அச்சமானது உலகிலுள்ளோர் உலக இன்பங்களில் தோய்ந்து உயிரை பற்றிய அறிவை இழந்த நிலையில் அச்சத்தால், உயிர் உணர்வை, உண்மை உணர்வை தோற்றுவிப்பாள் அந்த வகையில், உமையம்மையின் காளி வடிவத்தையே பனி என்கிறார்.

``மா’’ என்ற சொல் இலக்குமி, சரஸ்வதி, தாயாகிய பார்வதி இவர்கள் மூவரையும் குறிக்கும். திருக்கடையூரை பொறுத்தவரை பாலாம்பிகா சமேத காலசம்ஹாரமூர்த்தி. இவர் இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். அதில், பாலாம்பிகையின் வலதுபுறம் இலக்குமியும், இடதுபுறம் சரஸ்வதியும் தோழியராக எழுந்தருளியுள்ளதையே “மா” என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார். மேலும், “மா” என்பதற்கு அழகு, செல்வம் என்பது பொருள். மகாவிஷ்ணு தனது செல்வச் செழிப்பான அனைத்து ஆபரணங்களையும் ஒன்றாக்கி அபிராமியை உருவாக்கினார். அதனால், “மா” என்ற சொல்லால் செல்வம் அழகு இரண்டையும் சூட்டி அபிராமியையே சொல்கிறார். இதை “அணியே அணியும் அணிக்கு அழகே”-24 என்பதனால் அறியலாம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: