செவ்வாய் தோஷம் எப்படி வருகின்றது?

வேப்ப மரத்திலிருந்து வேப்பங்காய்தானே வரும். அவரைக் கொடியில் புடலை கிடைக்குமா என்ன. அதுபோல பரம்பரையாக வருவது என்றொரு விஷயம் உண்டே. உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதெனில் உங்கள் குடும்பத்தில் தந்தையாருக்கோ அல்லது பாட்டனாருக்கோ சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கேட்கிறார் அல்லவா. அறிவியல் கூட ஜீன்கள் மூன்று தலைமுறைக்கு ஒருவரின் உருவ அமைப்பையும் குணங்களையும் கடத்துகின்றன என்று கூறுகிறதல்லவா. அதுவேதான் இங்கும் நிகழ்கிறது. முன் தலைமுறையினரின் தவறும் கர்ம வினையாக உங்களிடம் வந்து சேருகிறது. இன்னொன்று நீங்கள் இந்த குடும்பத்தில் பிறக்க வேண்டுமென்பதிலும் உங்கள் கர்மவினை அடங்கியுள்ளது. யாராலும் கணிக்க முடியாத காலதேவனின் கணிப்பில் இதுவும் ஒன்று. ‘‘அவர் ரொம்ப நல்லவர் ஸார். அவருக்குப்போய் இப்படியொரு வியாதி வந்துடுச்சே’’ என்பதற்கு பின்னால் காலதேவனின் கணக்குகள் இருக்கிறது. முன்னோர் செய்த வினைகளை நாம் அறியாவிட்டாலும் அதன் பாதிப்பு உங்கள் வரை வரத்தான் செய்யும். வரக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்க முடியாது.

இதுமட்டுமல்ல சகோதர, சகோதரிக்கு சேர வேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும்போது  பூமிகாரகனான செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்குகிறது. அடக்க விலைக்கு விற்காமல் அநியாய விலைக்கு பூமியை விற்கும்போதும் செவ்வாய் தன் தோஷத்தால் வளைக்கிறார். அறிவியலில் வினைபடு பொருள், வினைவிளை பொருள் என்று சொல்வதுபோல செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்தவற்றின் மீது நாம் நியாயமாக நடந்து கொள்ள வெண்டும். அது தவறும்போது அதன் விளைவால் தோஷம்தான் மிஞ்சுகிறது.

‘‘செவ்வாய் தோஷம் எவ்வளவு வருடங்கள் இருக்கும்’’.‘‘உங்கள் உடம்பில் ரத்தம் ஓடும் வரை இருக்கும். ஒரு ஜாதகத்தை கையில் எடுத்துக் கொண்டால் அதில் ராசியிலிருந்தோ அல்லது லக்னத்திலிருந்தோ 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம்.’’

‘‘ஏன், மற்ற இடங்களில் இருக்கும் செவ்வாயைவிட இந்த இடங்களில் இருந்தால் தோஷம் என்கிறார்கள்.’’ ‘ஏனெனில், செவ்வாய் எழுச்சிக்குரிய கிரகம். எப்போதும் கனலையும், தணலையும் தன்னிடமிருந்து வெளிப்படுத்தியபடியே இருக்கும். இப்படிப்பட்ட கிரகமானது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான இடங்களைச் சொல்லும் மேற்கண்ட இடங்களில் நிற்கும்போது அதை பாதிக்கத்தான் செய்யும். அதனால்தான் அந்த இடங்களில் செவ்வாய் இருக்கிறதா என்று பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

Related Stories: