கற்கவேண்டும் புதிய பாடம்!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மரம், செடி, கொடிகள் மண்டியுள்ள ஒரு புதர் வழியே நாம் போகும்பொழுது ஏற்கெனவே பலர் சென்ற ஒற்றையடிப் பாதை ஒன்று கட்டாயம் தெரியும். இவ்வழியே நாம் சென்றால் கல், முள், பள்ளம் என இடர்பாடுகளைச் சந்திக்காமல் எளிதாகப் பயணம் மேற்கொள்ளலாம் அல்லவா! அதுபோலவே வாழ்ந்து மறைந்த சாதனையாளர்களின் அனுபவத் தொகுப்பே நாம் படிக்க வேண்டிய புதிய பாடங்கள்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கூறுகிறார்;

‘புத்தகத்தில் உலகத்தைப் படித்தால் அறிவு செழிக்கும்!

உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்!

இருட்டு நேரத்தில் சிலர் பயணம் மேற்கொள்ளும் போது முன்னேபோகிறவர் சற்று கால் இடறி தடுமாறினால் பின் தொடர்பவர்களுக்கு ‘இரட்டை விளக்கு’ காட்டிய மாதிரி என்பார்கள். நம் முன்னோர்கள் வளரும் தலைமுறை வாழ்வில் சிறந்து விளங்க ஏற்ற வழியை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

‘ஆசை அறுமின்! ஆசை அறுமின்!

ஈசனோடு ஆயினும் ஆசை அறுமுன்’ என்று திருமூலரும்

‘அவா இல்லார்க்கு இல்லாரும் துன்பம்’ என்று திருவள்ளுவரும் பாடியுள்ளார்.

‘அனைத்துத் துன்பங்களுக்கும் மூலகாரணம் ஆசையே!’ என்கின்றனர் ஞானிகள்.

‘ஞானியர்கள் உபதேசத்தை எல்லாம் சராசரி மனிதர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முடியுமா?’ மேற் சொன்ன சந்தேகம் பலருக்குள் எழுகிறது! இதற்கான பதில் பாரதியார் பாட்டில் இருக்கின்றது!

‘எண்ணிய முடிதல் வேண்டும்!

நல்லவே எண்ணல் வேண்டும்!

திண்ணிய நெஞ்சம் வேண்டும்!

தெளிந்த நல் அறிவு வேண்டும்!’

என்கிறார் மகாகவி பாரதியார். தெளிவான புத்தியுடன் நம் வாழ்விற்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்து அவற்றை அடைய ஆசைப்படுவதில் தவறே இல்லை. நல்லவற்றை அடைய தொடர்ந்து ஆசைப்படுவதே இலட்சியம்! மாறி மாறி அது வேண்டும், இது வேண்டும் என நிமிடத்திற்கு ஒன்றாக நினைத்து ஏங்குவது வீணான தேவையற்ற ஆசை. சிறகடிக்கும் சின்னச் சின்ன ஆசைகளில் நாம் சிக்குண்டால் சின்னா பின்னமாகிப் போய் விடும் நம் எதிர்காலம்! பின்னர்

ஆசை! ஆசை! பேராசை இப்பொழுது!

ஆசை தீரும் காலம் எப்பொழுது?

என்று ஏங்கியபடியே தூங்கிப்போய் விடும் நம் வாழ்வு! பேராசை கொண்டவர்களை யாரால் திருப்திபடுத்த முடியும்? அடியவன் ஒருவனின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டவனே மனித உருவில் வந்ததாக ஒரு கதை. ‘பக்தனே! அது வேண்டும் இது வேண்டும் என ஆயிரம் கோரிக்கைகள் வைக்கும் உனக்கு அனுக்கிரகம் செய்யவே மனித உருவில் நான் வந்துள்ளேன். இதோ பார்! என் வலது கை ஆட்காட்டி விரல்! என் ஆட்காட்டி விரல் எதன் மீது பட்டாலும் அப்பொருள் தங்கமாக மாறிவிடும். ‘அப்படியா!’ என்று வாய் பிளந்தான் ஆசை பக்தன். அவன் வீட்டில் உள்ள பழைய இரும்பு பிரோவைத் தொட்டார் கடவுள்! தங்கமாகி ஜொலித்தது துருப்பிடித்த பீரோ! ‘நாற்காலி, மேஜை, அண்டா, குண்டா என அனைத்தையும் தங்கமாக்கித் தாருங்கள், என வேண்டினான் பக்தன். சிரித்தபடியே கடவுள் அனைத்தையும் தங்கம் ஆக்கினார்! ‘போதுமா! போய் வரட்டுமா’ என்றார் கடவுள். பூரண நிறைவடையாமல் நின்றிருந்த பக்தனை நோக்கி ‘இன்னும் உனக்கு என்னதான் தேவை’ என்றார் கடவுள்.

‘தெய்வமே! உன் வலதுகை ஆட்காட்டி விரல் தான் எனக்கு வேண்டும்’ மூர்ச்சையாக கீழே விழுந்தார் மூல முதல்வர்! திருவாசகத்தில் மாணிக்கவாசகர் நமக்குச் சரியான திசையைக் காட்டுகின்றார். மனமாகிய வண்டே! நீ ஏன் தினை அளவு உள்ள சின்னச் சின்ன மலர்களில் தேன் பருக ஆசைப்படுகிறாய்! எந்நாளும், எப்போதும் பார்த்தாலும், கேட்டாலும் நினைத்தாலும் பேரின்பம் நல்கும் பெருமானின் திருவருளை நாடிச் செல்க.

தினைத் தனை உள்ளதோர்

பூவினில் தேன் உண்ணாதே!

நினைத் தொறும் காண் தொறும்

பேசும் தொறும் எப்போதும்

அனைத்து எலும்பு உள்நென

ஆனந்தத் தேன் சொரியும்

குனிப்பு உடையானுக்கே

சென்று ஊதாய்க் கோத்தும்பி!

முயல்களுக்கு ஆசைப்பட்டு அதை வீழ்த்திய அம்புகளை வைத்திருப்பதைவிட, யானையைக் குறிவைத்து வீழ்த்தாமல் தவறிவிட்ட வேலை உன்கையில் ஏந்துவதே வெற்றியின் அடையாளம் என்கின்றார் வள்ளுவர்.

கான முயலெய்த அம்பினில் யானை  

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பளபளக்கும் புதிய காரில் பவனிவந்தான் ஒருவன்! ஒரு நாள் தன் பள்ளிக்கூட நண்பன் ஒருவனைச் சந்தித்து தன் புதிய காரைப் பெருமிதம் பொங்க அவனுக்குக் காட்டி மகிழ்ந்தான். ‘வெளி நாட்டுக் காராக வாங்கி விட்டாயா! மிக மிக மகிழ்ச்சி! நன்றாக இருக்கிறது’ என்று பாராட்டியவனிடம் ‘நான் வாங்கவில்லை. என் அண்ணன் எனக்குத் தந்த அன்பளிப்பு இது’ என்றான். ‘அப்படியா! மிகவும் நல்லது’ என்றபடி அன்பளிப்பாகத் தன் நண்பன் பெற்ற காரையும், அவனையும் அர்த்தம் பொதிந்த பார்வையுடன் பார்த்தான் பள்ளிக்கூட நண்பன்.

‘உனக்கும் என் அண்ணனைப் போல் ஒருவன் வேண்டும் என்று ஏங்குகிறாயா? என்றவனிடம் நண்பன் சொன்னான். ‘தம்பிக்கு அன்பளிப்பாகக் கார் வாங்கித் தந்த உன் அண்ணனைப் போல் நானும் ஆக வேண்டும் என மனதில் உறுதி மேற்கொண்டேன். அர்த்தமுள்ள ஆசைகள் மனித வாழ்வை அற்புதமாக ஆக்க வல்லவை.

Related Stories: