இந்த வருட சூரிய - சந்திர கிரகணங்கள்

“சுபகிருது” தமிழ்ப்புத்தாண்டில், இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழவுள்ளன. அவற்றில் ஒரு சூரிய கிரகணமும், ஒரு சந்திர கிரகணமும் மட்டுமே இந்தியாவில் தெரியும்.

நம் நாட்டில் தெரியும் சூரிய கிரகணம்

1. பார்சுவ சூரிய கிரகணம்:  சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 8ம் தேதி (25-10-2022), செவ்வாய்க்கிழமை, சுவாதி நட்சத்திரம், அமாவாசை திதியில் நிகழ்கிறது. கிரகணம் ஆரம்பம் மாலை 5.13 மணி; மத்யம காலம் மாலை 5.47 மணி; கிரகண முடிவு: 6.11 மணி. திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களும் சாந்தி செய்துகொள்ள வேண்டும். காலை 9.00 மணிக்கு மேல் போஜனம் கூடாது. பித்ருக்களுக்கான சூரிய கிரகண கால தர்ப்பணம், கிரகணம் ஆரம்பிக்கும்போது செய்தால், பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியோர் மற்றும் வியாதியஸ்தர்களுக்கு விதிவிலக்கு. கருவுற்றிருக்கும் பெண்மணிகள், நாள் முழுவதும் சூரியனின் கிரகண சாயை தங்கள் உடல்மீது படாமல் வீட்டினுள் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். சூரிய கிரகண சாயை உடம்பில் பட்டால், அது குழந்தையைப் பாதிக்கும். விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை இது!

நம் நாட்டில் தெரியும் சந்திர கிரகணம்

சுப கிருது வருடம், ஐப்பசி மாதம், 22ம் தேதி (8-11-2022) செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி, பரணி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. கிரகண ஆரம்பம்: பிற்பகல் 2.39 மணி; மத்திய காலம்:  மாலை 4.31;  கிரகண முடிவு: மாலை 6.19மணி. அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம் நட்சத்திரங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்கள் சாந்தி செய்துகொள்ளவேண்டும். காலை 6 மணிக்குமேல் எதுவும் சாப்பிடக்கூடாது. சந்திர கிரகணத்தில், கிரகணம் விடும்போது  பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ருக்களுக்கு பரம சந்தோஷத்தைத் தரும். எமது வாசக அன்பர்களுக்கு அளித்துள்ள இப்புத்தாண்டு ராசிபலன்கள் அனைத்தும் மேற்கூறிய சூரிய சந்திர கிரகணங்களால் அந்தந்த ராசிகளுக்கு ஏற்படும்  தோஷங்களையும் கணக்கில் கொண்டே கூறப்பட்டுள்ளன.

Related Stories: