சுகம் தருமா உலகிற்கு? சுபகிருது புத்தாண்டு!!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

“காலம்”-எனும் சக்கரம்தான் எத்தனை வேகமாகச் சுழல்கிறது! நினைக்க, நினைக்க வியப்பாக உள்ளது!! அதற்குத்தான் ஏன் இத்தனை அவசரம்?

“காலம்” - எனும் மாபெரும் சக்தியிடம் மண்டியிட்டு, மடிந்த மாமன்னர்கள்தான் எத்தனை எத்தனை? மறைந்த சாம்ராஜ்யங்கள்தான் எத்தனை எத்தனை?

“பிலவ” தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடியது நேற்றுதான் என்பதுபோல் மனதில் பசுமை மாறாத நிலையில், அதற்குள் சுபகிருது  பிறந்துவிட்டது இப்போது!

புது வருடம் என்றாலே, புதுப்புது ஆசைகள்! எதிர்பார்ப்புகள்!! நம்பிக்கைகள்!! புத்தாண்டை வரவேற்கும் இத்தருணத்தில், விடைபெறும் பிலவ ஆண்டைத்தான் நம்மால் மறக்க இயலுமா எளிதில்?

“கொரோனா”, “ஒமிக்ரான்” ஆகியவற்றின் கோர தாண்டவம்! அவற்றை மறப்பதற்குள் ரஷிய - உக்ரைன் போர்!!  எழில் மிகு மாபெரும் நகரங்கள் தீயில் கருகி, உருக்குலைந்து கிடக்கும் கோர காட்சிகள்!! ஒரு துளி நல்ல நீர் கூடக் கிடைக்காமல், பேசுவதற்குக்கூட சக்தியின்றி, குழந்தைகளுடன், உயிருக்கு மன்றாடி, எங்கு செல்வது? எவரிடம் கேட்பது? நாளை என்பதும் உண்டா நமக்கு? என்று தள்ளாடி, புகலிடம் தேடி ஓடிடும் இளம்பெண்கள்!! இந்நிலையில், உலகை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு, காலமென்னும் காரிருள் கரைந்துவிட்டது, பிலவ ஆண்டு, பிறக்கிறது, சுபக்கிருது. புத்தாண்டை வரவேற்கிறோம், வணங்கி!!

புத்தாண்டும் பகலவனும்!!

நமது புத்தாண்டுகள் அனைத்தும், வானியல் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்பட்டுவருகின்றன. ராசி மண்டலம் ஆரம்பமே மேஷராசியில்தான் ஆரம்பமாகிறது!! அந்த மேஷம்,  சூரியனுக்கு உச்ச வீடாகும். அதாவது, மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது, சூரியன் உச்ச பலத்தை அடைகிறார். சூரியன் - ஆத்ம, சரீரகாரகர். நாம் மாதப் பிறப்பு, அமாவாசை,  சூரிய - சந்திர கிரகணகாலங்கள், மறைந்த தாய் - தந்தையருக்குச் செய்யும் ஆண்டுத் திதிகள் ஆகியவற்றின்போது, செய்யும் பித்ரு பூஜைகள் (சிரார்த்தம் - தர்ப்பணம்) எள்ளும் தண்ணீரும் விடுதல் - ஆகியவற்றின் பலனை நமது மூதாதையர் எங்கிருக்கிறார்களோ அங்கு சென்று, அவர்களிடம் சேர்ப்பதால், பித்ருகாரகர் எனப் பூஜிக்கப்படுகிறார்.

இத்தகைய தனிப் பெருமையும், அளவற்ற தெய்வீக சக்தியும்கொண்ட, சூரியனின் உச்ச ராசியான மேஷத்தில் அவர் பிரவேசிக்கும் நாளைத்தான் தமிழ்ப்புத்தாண்டு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். நவக் கிரகங்களில் 8 கிரகங்கள் சூரியனிடமிருந்தே தமது ஆற்றல்களையும், சக்திகளையும் பெறுகின்றன என  “பாஸ்கர சம்ஹிதை” மிகப் பழைமையான நூல் கூறுகிறது. ஆதலால் சூரியனுக்கு, நவக் கிரக நாயகன் எனும் பெருமையும் உள்ளது.

ஆண்டுகள் அறுபது!

“பிரபவ” ஆண்டு முதல், அட்சய ஆண்டு முடிய, தமிழ்ப் புத்தாண்டுகள் 60 ஆகும். இறைவன் மானிடராகப் பிறந்தவர்களுக்கு அருளியுள்ள மொத்த ஆயுள் காலம் 120. பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் வாழ்வதாகும். இவ்விதம் 120 ஆண்டுகள் வாழ்ந்த மகான்கள் இருவர்!

1) ஸ்ரீமத் ராமானுஜர்-இவரது ஜீவவிக்கிரகம் ஸ்ரீ பெரும்புதூர் திவ்ய க்ஷேத்திரத்தில் உள்ளது.

2) மத்வ சித்தாந்த மகானான ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் - இவரது ஜீவ பிருந்தாவனம் கர்நாடகாவில் உள்ள ஸோதே எனும் வனத்தில் உள்ளது. இம்மகானும் மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரரைப் போன்றே உயிருடன்  பிருந்தாவனத்தினுள் யோக நிலையில் அமர்ந்தவர்-!

வானியலும், விஞ்ஞானமும், ஜோதிடமும்!

ஒரு நாட்டை எவ்விதம் மன்னர்கள் ஆண்டுவந்தனரோ, அதே போன்று ஒவ்வொரு புத்தாண்டும் நவக் கிரகங்களின் அதிகாரத்தின் (கட்டுப்பாட்டில்), வருகின்றன. அவற்றை அறிந்துகொள்ளவே, வேதத்தின் அங்கமான, ஜோதிடம் உதவுகிறது. எவ்வித நவீன வானியல் சாதனங் களும் இல்லாத பண்டைய நாட்களிலேயே, நம் முன்னோர்கள் சிறிதளவு பிழையுமில்லாமல், மாதப் பிறப்பு, சூரிய - சந்திர கிரகண காலங்கள், அமாவாசை - பௌர்ணமி போன்ற மிக நுணுக்கமான காலகட்டங்களை எவ்விதப் பிழையுமின்றி மிகத் துல்லியமாகக் கணித்துக் கூறிவந்துள்ளனர்.

நமது மகரிஷிகளின் வானியல் திறமையை முதன்முதலில் உலகில் அணுகுண்டைக் கண்டுபிடித்த, “ஓப்பன் ஹீமர்” எனும் ஜெர்மானிய விஞ்ஞான மேதை போற்றிப் புகழ்ந்துள்ளார். ஜெர்மானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அவர், ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் புலமை வாய்ந்தவர். மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆக்னேயாஸ்திரம் (அக்னி ஆயுதம்) அணுகுண்டையே குறிக்கிறது எனக் கருத்து தெரிவித்துள்ளார், அமெரிக்க நாட்டில் அவர் பங்கேற்ற பத்திரிகை நிகழ்ச்சியொன்றில்!

வானியலும், ஜோதிடக்கலையும் விஞ்ஞானமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையே என்பதை நமது புராதன நூல்களும் நிரூபித்துள்ளன. இந்த அடிப்படையில்தான், நாம் ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டையும் தெய்வீகத் திருநாளாகக் கொண்டாடியும், பூஜித்தும் வருகின்றோம்.

நவகிரகங்களின் அதிகாரத்தில் - கட்டுப்பாட்டில் புத்தாண்டு!

ஒவ்வொரு புத்தாண்டிலும், மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான எந்தெந்த அம்சங்கள், எந்தெந்த கிரகங்களின் கட்டுப்பாட்டில் வருகின்றன?  - என்பதை ஜோதிடம் கூறுகின்றது. அந்தந்த கிரகங்களையே அவற்றின் பொறுப்புகளின் அடிப்படையில் “ராஜா” என்றும் “மந்திரி”, “சேனாதிபதி” என்றும் “மேகாதிபதி” என்றும் ஜோதிடம் விவரிக்கிறது. இந்த ஆண்டின் அதிகாரம் (பொறுப்புகள்) பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டு, அதன் பிறகு அந்தந்த ராசிக்குரிய  பலன் களையும் பரிகாரங்களையும் பார்ப்போம்.

Related Stories: