நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்

இன்று உலக உணவு தினம் ஆகும். இந்தியா உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் அங்கமாகவுள்ள அனைத்து நாடுகளிலும் இந்நாள் உலக உணவு தினமாக ஆசரிக்கப்படுகிறது. பசியால் வருந்துவோர் இல்லாத ஒரு உலகை உருவாக்க வேண்டும் என்பதே இந்நாள் ஆசரிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும்.உணவின்றி உயிர் வாழ்தல் என்பது இயலாத ஒன்று. ஆகவே தான், கடவுள் இவ்வுலகில் மனுக்குலத்தைப் படைத்து, அவர்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய உணவு தானியங்களையும் படைத்தார். இதோ, பூமியின் மேல் எங்கும் விதை தரும் சகலவிதப் பூண்டுகளையும், விதை தரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்

களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது.(ஆதியாகமம் 1:29) எனக்கூறி கடவுள் மனுக்குலத்துக்குத் தேவையான உணவு பொருட்களைப் படைத்தார் என்று திருமறை கூறுகிறது.

மேலும், இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு பிரயாணம் செய்கையில், அவர்களுக்காக வான தூதர்கள் உண்ணும் உணவாகிய மன்னாவை கடவுள் வானத்திலிருந்து வருஷிக்கப் பண்ணினார் என்று திருமறை கூறுகிறது. இதைக்குறித்து திருப்பாடல் ஆசிரியர், மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார் (சங்கீதம் 78:24) எனப் பாடுகிறார்.

அதுபோல, கடவுள் இவ்வுலகில் இயேசு என்னும் பெயரில் மறுவுருவெடுத்து, வாழ்ந்த காலங்களில் ஒருமுறை, அவரது போதனையைக் கேட்க, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவர்களிடம் இருந்ததோ ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே. மாலை நேரமானதால், அவருடைய சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து, ஜனங்கள் உணவைப் பெற்றுக்  கொள்வதற்காக அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இயேசுவோ அவர்களை நோக்கி: அவர்கள் போக வேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங் கொடுங்கள் (மத்தேயு 14:16) எனக் கூறி, அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து ஜனங்களிடத்தில் கொடுத்தார்.

அதைச் சீடர்கள் ஜனங்களிடத்தில் கொடுத்தனர். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள் (மத்தேயு 14:20) என்று திருமறை கூறுகின்ற வண்ணம் ஆண்டவர் தமது அற்புதமான கரத்தால் ஐயாயிரத்திற்கும் மேலான ஜனங்களைப் போஷித்தார்.ஆம்! மனிதர்களாகிய நாம் நன்றாக உணவு உட்கொண்டு, நலமுடன் வாழ வேண்டும் என்பது தான்

கடவுளின் விருப்பமாகும். எனவே தான், அவர் நமக்காக காய்கள், கனிகள், தானியங்கள் போன்ற உணவு விதைகளை இயற்கையாகவே கொடுத்திருக்கிறார். உலக உணவு தினமாகிய இந்நாளில், கடவுள் அருளிய இவ்வருட் கொடைகளை நினைத்துப் பார்த்து, அவருக்கு நன்றி கூறுவது நமது கடமையாகும்; நமக்குக் கிடைத்திருக்கும் உணவுப் பொருட்களை சற்றும் வீணாக்காமல், முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பாகும். மேலும், உணவின்றி வாழ்கின்றஜனங்களை நினைத்துப் பார்க்கவும், அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைப் புரியவும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது உற்றார், சுற்றார், நமக்குத் தெரிந்தவர், தெரியாதவர் யாராக இருந்தாலும், அவர்கள் உணவின்றி வாழ்வதைக் காண்போமெனில், வயிறார அவர்களுக்கு உணவு கொடுப்போம். ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்ற அருள் நாதர் இயேசுவின் கூற்றுக்கிணங்க, நமது திருமண நாள், பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது, உணவின்றி வாழ்வோரை மனதில் கொள்வோம்! உணவைப்

பகிர்ந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்போம்!

Related Stories:

More
>