சந்திரனைப் புரிந்து கொண்டால் சந்தோஷமாக வாழலாம்

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

சந்திரன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் ஒருவராவார். இவருக்கு “சோமன்” என்ற பெயரும் உண்டு. சந்திரனைப் பார்த்து காதல் வயப்படுகின்றனர்.  சந்திரன் இல்லாத காதல் பாடல்கள் இல்லை. காரணம், வானத்தில் இருக்கும் முழு நிலவு மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது.சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். அந்த சந்திரனைப் புரிந்து கொண்டால் சந்தோஷமாக வாழலாம்.

 

எப்படிப் புரிந்து கொள்வது?

அவரைப் பற்றிய  ஜோதிட ரீதியான சில விஷயங்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

ராசி நல்ல ராசிதான்

ஒருவருக்கு சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுதான் அவருடைய பிறந்த ராசி என்று சொல்வார்கள். லக்னத்தைப்  போலவே ராசியின் பலனும் பார்க்க வேண்டும். ஒருவனுடைய திசா புத்தி பலனைப் பொருத்து தான் அவனுக்கு நல்லதும் கெட்டதும் நடக்கின்றது.  ஒருவருக்கு சரியான பலன் நடக்காவிட்டால் ‘‘என் ராசி சரியில்லை” என்று சொல்வார்கள். எனவே, ராசியை நிர்ணயிப்பது சந்திரன்தான். கோயில்களில் அர்ச்சனை செய்யும்போது, ராசிதான் கேட்பார்கள். லக்னம் அல்ல. சில ஜாதகங்களில் லக்னத்தை விட, ராசி பலமாக இருந்தால், ராசியைக்  கொண்டு பலன் அறிய வேண்டும். ப்ரஸ்ன ஜாதகத்திலும், சந்திரன் மிக முக்கியம். ஒருவன் என்ன மனதில் நினைத்து கொண்டு வந்திருக்கிறான் என்பது சந்திரன் நிலை கொண்டு அறிய முடியும்.

சந்திராஷ்டமம் என்ன செய்யும்?

“சந்திராஷ்டமம்” என்று ஒன்று உண்டு. ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் வருகின்ற இரண்டேகால் நாள் “சந்திராஷ்டமம்” என்று சொல்வார்கள். பொதுவாக சுபகாரியங்களை இந்த சந்திராஷ்டம தினத்தில் செய்யாது இருப்பது நல்லது. ஒருவருக்கு தசாபுத்திகளும் கோசார ரீதியான பலன்களும் கடுமையாக இருக்கின்ற போது, இந்த சந்திராஷ்டமம் என்கிற தினத்தை சேர்த்துக் கொண்டால், அந்த தினங்களில் அவரை படாதபாடுபடுத்தும். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரமாக வருகின்ற பொழுது அது சாதக தாரையில் விழும். 9வது நட்சத்திரம் பரமமைத்ரம். 8-ஆவது நட்சத்திரம் மைத்ர தாரை. இவர்களுக்கு  சந்திராஷ்டமத்திலும் ஓரளவு சாதகமான பலன்களைச்  செய்யும் என்பார்கள். எதுவாக இருப்பினும் சந்திராஷ்டமம் வேண்டாமே? ஏன் அந்த வம்பு?

புது வண்டியா? பழைய வண்டியா?

வாகன காரகன் என்றால் சுக்கிரனும் சந்திரனும் என்றும் சொல்வார்கள். சுக்கிரன் வண்டி, வாகனம் போன்றவற்றைக்  குறிப்பிடுகின்ற கிரகம். வண்டி வாகனத்திற்கு உரிய இடம் நான்காம் இடம். அந்த நான்காம் இடத்தைப் பெறுவதில் சந்திரனுக்கும் ஒரு பங்கு உண்டு. காரணம், காலச்சக்கரத்தின் நான்காவது ராசியாக சந்திரனுடைய கடகம் வருகிறது அல்லவா. எனவே, சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் சந்திரனுக்கும் உண்டு.

பொதுவாக ஆறாம் வீட்டுக்கு அதிபதியும் சந்திரனும், 8,12 ஆம் அதிபதியாக, ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருந்தால், வண்டியில் பிரச்சினை ஆபத்து வரும். இன்னொரு விஷயம். சிலர் புது வண்டி மட்டும் வாங்குவார்கள். சிலர் பழைய வண்டி வாங்குவார்கள். பெரும்பாலும் புது வண்டியை சுக்கிரன் குறித்தால், ஓரளவு பழைய வண்டிகளை சந்திரன் குறிப்பதாகவும் கூறுகின்றனர். சுக்கிர பலம் புது வண்டி யோகத்தையும், சந்திர பலம் பழைய வண்டி யோகத்தையும் கொடுக்கும்.

ஸ்லோகத்தைச் சொல்லி துவக்குங்கள்

இன்னொரு சந்தேகமும் நமக்கு வரும். சந்திரபலம் வேறு? தாராபலம் வேறா? ஆம். சந்திரபலம் என்பது வேறு. தாராபலம் என்பது வேறு. இரண்டும் பஞ்சாங்கத்தில் விரிவாக விளக்கி இருப்பார்கள். ஒரு சுப நாளுக்கு மூன்று விதமான பலம் வேண்டும் என்று சொல்வார்கள். ஒன்று லக்னபலம். இன்னொன்று தாராபலம். இன்னொன்று சந்திரபலம். மந்திரத்தை ஆரம்பிக்கும் பொழுதும் இந்த மூன்று பலங்களும் கிடைக்க வேண்டும் என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள்.

ததேவ லக்னம் ஸுதினம் ததேவ;

தாரா பலம் சந்திர பலம் ததேவ

வித்யா பலம் தைவ பலம் ததேவ

லக்ஷ்மீபதே: அங்கிரியுகம் ஸ்மராமி

 - என்பது மந்திரம். இதை தினசரி

பூஜையில் சொல்ல அந்த நாள் நல்ல நாளாக இருக்கும். வழிபாடு துவங்கும் முன் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி துவக்குங்கள்.

சூரிய உதய நேரம்

ஹோரை, ராகு காலம், எமகண்டம்  என்று பல விஷயங்களை பார்த்து ஒரு காரியத்தைச்  செய்கிறோம். இந்தக் கால கணக்குகள் சூரிய உதயத்திலிருந்து வைத்திருக்க வேண்டும். ஹோரை எடுத்துக்கொணடால்,  ஒரு கிரகத்துக்கு ஒரு மணிநேர கால அளவில் தொடர்ந்து வரும். வரிசையில் அந்த நாளுக்குரிய கிரகத்தின் ஹோரையில் ஆரம்பித்து அடுத்தடுத்து மற்ற கிரகங்களுக்கான ஹோரைகள் நடக்கும். இதிலும் ஒரு கணக்கு உண்டு. சிலர் ஹோரையை தவறாகக் கையாள்வார்கள். ஒவ்வொரு நாளும் சூரிய உதய நேரத்தை கணக்கில் கொள்ளாமல், ஹோரையை கணக்கிடுவது தவறாக முடியும். ராகு கால, எம கண்ட கணக்கும் இப்படித்தான்.

உதாரணமாக, திங்கட்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஹோரை என்று இருக்கும். ஆனால் அன்றைய சூரிய உதயமானது, நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில், 6. 24க்கு என்று இருந்தால், 6.24 முதல் 7.24 வரை தான் சந்திர ஓரை என்று எடுத்துக் கொண்டு, அதற்கு அடுத்து ஒரு மணி நேரத்தை கூட்டி மற்ற ஹோரைகளைக் கணக்கிடவேண்டும். ராகு காலம் எமகண்டம் போன்றவையும் அப்படித்தான். ஆனால் இந்த சூரிய உதய  காலத்தை கணக்கிடாது போனால், நாம் எந்த ராகு காலத்தைத் தவிர்க்கவேண்டும் என்று நினைத்தோமோ அந்த ராகு காலத்தில் அந்த காரியத்தைச் செய்து சங்கடப்படும் நிலைமை வந்து விடுகிறது.

சந்திரன் தரும் யோகங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். கால புருஷனுக்கு நான்காம் வீடான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். ரிஷப ராசியில் உச்சம் பெறும் சந்திரன், விருச்சிகத்தில் நீசமடைகிறார். கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன். சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோகமாகவும், அதுவே ராகு கேது போன்ற சர்ப்ப கிரகங்களுடன் சேரும் போதும், சனியோடு சேரும் போதும் தோஷமாகவும் மாறுகிறது.

குரு சந்திர யோகம்

1. சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல வசதி, மதிப்பு, மரியாதையுடன் இருப்பார்கள்.

2 .சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் மங்களன் என்று சொல்லப்படும் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகமாகும். இதன் மூலம் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ், தீயணைப்புத்துறை, ராணுவம் மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் என வசதியாக வாழ்வார்கள்.

3. சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் குரு இருப்பது கஜகேசரி யோகமாகும். இந்த அமைப்பு பல தோஷங்களை நீக்கும் என ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றது. மேலும் சில நூல்களில் சந்திரனுக்கு 7 ல் சப்தமமாக குரு இருப்பதுதான் ராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது.

4. சூரியனுக்கு 7ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது அமாவாசை யோகம்.

5. இது தவிர பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களைத் தருபவர் சந்திரன். சந்திரனுடன் கிரகங்கள் சேர்ந்து இருக்கும் இடம். ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் ஆகியவற்றை வைத்துத்தான் யோக, அவயோகங்கள் அமைகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகம் மிகவும் பலம் பெறுகிறது. ஒரு நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் நிற்கும்போது அந்த நீச அம்சம் நீங்கி, நீசபங்க ராஜயோக அமைப்பு உண்டாகிறது.

6. சந்திரனுக்கு இரண்டில் புதன் இருப்பது மிகச்சிறந்த அமைப்பாகும். இயல், இசை, நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். சொற்பொழிவாளர்கள், மேடைப் பேச்சு, கதாகாலட்சேபம், வாக்கு சாதுர்யம் இருக்கும். வாய்மூலம் பேசி பொருள் ஈட்டும் யோகம் உண்டு.

7. சந்திரன், புதன், சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களுக்கும் ஜாதக கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால், ஏதாவது பார்வை, சார பரிவர்த்தனை ஏற்பட்டால் ஜாதகர் அதிபுத்திசாலியாக, பல்கலை வித்தகராக இருப்பார்.

8. சந்திரனுக்கு இரண்டாம் இடமான தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி இருந்தால் நிறைகுறைகள் இருக்கும். இந்த அமைப்புதான் ஏழரை சனியின் கடைசி தனஸ்தான சனியாகும். இவர்களை கரி நாக்கு உடையவர்கள் என்று சொல்வார்கள், எதை எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாமல் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள்.

புனர்பூ தோஷம்

சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகு கேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது. கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகு, கேது, செவ்வாயுடன் சம்மந்தப்படும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக விளங்குவார். சனியும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் உண்டாகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது, சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, கிழமை, தேதிகள் மூலம் சனிசந்திரன் தொடர்பு ஏற்படுவது எல்லாமே எதிர்பாராத விதமாக நடக்கும்.

மன சஞ்சலம், சபலம் மிகுந்திருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். ஆளுக்கு தகுந்தாற்போல், இடத்திற்கு தகுந்தாற்போல் குண இயல்புகளை சீக்கிரத்தில் மாற்றிக் கொள்வார்கள். முயற்சி செய்யும்போது முடியாது, நடக்காது என்று நினைத்தால் அப்படியே நடந்து விடும். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும் திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும். சிலருக்கு நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும். வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்துகின்றன. சந்திரன் ராகு அல்லது சந்திரன் கேது கூட்டணியுடன் சனி, புதன் சம்பந்தப் படும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு விடும்.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன்?

சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன், முதல் வீட்டில் இருந்தால், லக்கினத்தில் இருப்பது நல்லது. ஆனால், சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ, அல்லது உச்ச வீடாகவோ இருந்தால், நல்லது. நட்பு வீடாக இருந்தாலும் நல்லது. வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார்.  திடீர் பணவரவு இருக்கும்.

2ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும். அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும். சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும். சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

3ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார். நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயணம் செய்ய வைப்பார். வாகன வசதி கிடைக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

4ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.  4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு, குளம், கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும்.  கொடை குணம் இருக்கும்.

5ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவைப்பார். குழந்தை பாக்கியம் அமையும். ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

6ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்ணுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார். வளர்பிறை சந்திரன்

7ல் அமர்ந்து, பாபக்கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெறாமல் இருந்தால்  அன்பான வாழ்க்கை துணைவர் அமைவார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

8ல் சந்திரன் இருந்தால், சஞ்சலமான குணம் கொண்டவர்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவர்கள். தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

9ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம், நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

10ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதப் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றி கொள்ளும் தைரியத்தைத் தருவார். வாழ்க்கை பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டு பண்ணுவார். தாய் வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டு பண்ணுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11ல் உள்ள சந்திரன், மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தைத் தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்கக் கூடிய திறமையைத் தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு  இழக்க.  செய்வான். கண் பார்வை மங்கச் செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.

ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கத்தால் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த ஹார்மோன் இயக்கத்தை சந்திரன் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. எனவே பெண்ணினுடைய கரு முட்டை கருத்தரிக்கிற நிலைக்கு போவதற்கு சந்திரன் சஞ்சாரம் முக்கியமாகும். ஒரு பெண் கருத்தரிப்பதற்கு சூரியன்-சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதோடு பூமிகாரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் கெட்டுவிடக்கூடாது. செவ்வாய் ரத்தகாரகன். பெண்கள் பூப்படைவதற்கு முக்கிய காரணமே செவ்வாய்தான். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். இது சந்திரன் வாங்கிய சாரம், மற்ற கிரக சேர்க்கை, பார்க்கும் கிரகங்கள் போன்ற பல விஷயங்களையும் பொறுத்தே இருக்கும். பொதுப் பலனை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு பலன் கூறினால் சரியாக இருக்கும்.

 

விதியை சமாளிக்கக்கூடிய ஆற்றல்

சந்திரன் தரும் யோகங்கள் பற்றி நாம் நிறைய ஆய்வு செய்யலாம். ஒருவனுக்கு மதி மிகச் சிறப்பாக அமைந்து விட்டால் விதியை சமாளிக்கக்கூடிய ஆற்றல் கிடைத்துவிடும். இந்த ஜாதகம் மிதுன லக்கின ஜாதகம். லக்னத்தில் புதன் கேது. இரண்டில் சூரியன். 3ல் சுக்கிரன். ஐந்தில் செவ்வாய் குரு. ஏழில் ராகு. 9ல் சனி (வக்கிரம்) ஆட்சி.12ல் சந்திரன். சந்திரன் ரோகிணி மூன்றாம் பாதத்தில் இருக்கின்றார். லக்கினத்தில் புதனும், கேதுவும் 5 டிகிரியில் இணைந்திருக்கிறார்கள்.  கேது குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் இருக்க, 7, 10க்குடைய குரு ஐந்தில் செவ்வாயோடு அமர்ந்திருக்கிறார்.

லக்னாதிபதியான புதன், லக்ன கேந்திரத்தில் வலிமையோடு அமர்ந் திருக்கிறார். அவரே 4ஆம் இடத்துக்கு (கல்விக்கு) அதிபதி. எனவே தடையற்ற கல்வி சிறப்பாக கிடைப்பதை புதன் உறுதி செய்கிறார். சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் உச்சத்தில் இருக்கிறார். வாக்குக்கு அதிபதி உச்சம் பெறுவது என்பது அற்புதமான அமைப்பு.  தைரிய வீரிய ஸ்தானத்திற்கான சூரியன் இரண்டாமிடத்தில் (கடகத்தில்) அமர்ந்திருப்பதும் அருமையான அமைப்பு. இங்கே சந்திரன் உயர்ந்த வாக்கையும் புகழையும் திடமான மனதையும் தருகின்றார். புதன் வித்தைக்கு அதிபதி. கணித கலைக்கு உரியவன். புதன் குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால், குரு  தொடர்பு. குரு தனகாரகன். எனவே பொருள் சம்பந்தப்பட்ட கணிதப் படிப்பை, புதன்+ குரு சம்பந்தம் கொடுக்கிறது.

ஜாதகர் பொருளாதாரத்தில் முனைவர்.பல முனைவர்களை உருவாக்கியவர். சிறந்த பொருளாதார பேராசான். சந்திரனைப் பொருத்தவரை வாக்கு ஸ்தானத்திற்கு 11ம் இடமான லாபஸ்

தானத்தில் உச்சம் பெற்று இருப்பதையும் கவனிக்க வேண்டும். சந்திரனை ராசியாக எடுத்துக்கொண்டால் ராசிக்கு இரண்டில் புதன், குருவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதும், ஞான காரகனான கேதுவுடன் நெருங்கி அமர்ந்திருப்பதும் விசேஷமானது. காரணம், இவர் உலகியல் படிப்பு மட்டும் படிக்கவில்லை. மிகச்சிறந்த வேத கல்வியிலும் பண்டிதர்.  குரு 5ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதை கவனத்தில்  எடுத்துக்கொள்ளலாம்.

அல்லது ராசிக்கு இரண்டாம் இடமாகிய வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதாலும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே படிப்பு, வாக்கு, உத்தியோகம், ஞானக் கல்வி, எல்லாம் இணைந்து இருப்பது அழகான அமைப்பு. 6 க்கு உடைய செவ்வாய் ஐந்தாம் இடத்தில் லக்னாதிபதியை விட வலிமை குன்றி இருப்பதால், இவருக்கு பெரும் பகையோ அல்லது வியாதியோ அல்லது கடனோ  இதுவரை இல்லை. இனி வருவதற்கும் வாய்ப்பு இல்லை. தலைவலி என்று கூட இவர் பெரும்பாலும் படுத்ததில்லை. எந்த சிறு வியாதி வந்தாலும் தானாகவே சரியாகப் போய்விடும். காரணம் உடல் காரகனான சந்திரன் பலம் பெற்றது.

சந்திர பலம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

சந்திர ஹோரையைப்  பொருத்தவரையில் அதற்கான பலன்கள்: பயணம் செய்யலாம், தாய்வழி உறவுகளைச்  சந்திக்கலாம், பெண்கள் (திருமண விஷயமாக) பற்றிப்  பேசலாம், புது நகை வாங்குவதற்கும், புது கடை திறப்பதற்கும், ஏற்ற நேரம். எண் கணிதத்தில் சந்திரன் 2 க்கு உரியவன். இதிலேயும் தேய்பிறையும் வளர்பிறையும் உண்டு. தேய்பிறை சந்திரன் நேர்மாறான பலன்களை தரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பெளர்ணமி, அமாவாசை, சந்திர தரிசன தினங்கள் என சந்திர பகவானுக்குரிய நாட்களில் நாம் சந்திரனை வழிபட்டு வர மன குழப்பம் நீங்கி, நிம்மதி உண்டாகும்.

முகத்தில் புது பொலிவு ஏற்படும். பெளர்ணமி தினங்களிலும், திங்கட்கிழமை தோறும் (4ம் பிறை தவிர) இரவில் 8 மணி முதல் 9 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள ஸ்ரீ சந்திர பகவானுக்கு உரிய மந்திரங்களை கிழக்கு திசை பார்த்து அமர்ந்து குறைந்தது 27 முறை, அதிகபட்சம் 108 முறை ஜெபிக்கவும்.

சந்திரன் மூல மந்திரம்:

ஓம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ

சந்திரனுக்கு உரிய ஸ்தோத்திரம்

ததி சங்க துஷாராபம் ஷீரோதார்ண

வஸம்பவம்!

நமாமி சசினம் ஸோமம் சம்போர்

மகுடபூஷணம்!

சந்திர காயத்ரி மந்திரம்

பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|

தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||

சந்திரனைப் புரிந்து கொண்டால் சந்தோஷ வாழ்வு உறுதியாகும்.

Related Stories:

More
>