இந்த வாரப் பண்டிகைகளை கொண்டாடுவோம்

புரட்டாசி சனிக்கிழமை 18.9.2021 சனிக்கிழமை

புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமை. புரட்டாசி தளியல் (தளிகை) பலர் வீட்டில் போடுவார்கள். பெருமாளை நினைத்து செய்யும் உயர்ந்த சக்தி வாய்ந்த வழிபாடு இது. பலருக்கு குல தெய்வம், பலருக்கு இஷ்ட தெய்வம் பெருமாள். அவருக்கே உள்ள பிரத்தியேக சனிக்கிழமை வழிப்பாடு மிகவும் விசேஷமானது. ஸ்திர வாரமான சனிக்கிழமை என்பதால் காலை எழுந்து, எண்ணெய் தேய்த்து நீராடி, பெருமாளுக்கு விரதம் இருக்க வேண்டும். மதியம், தலை வாழை இலை போட்டு, பெருமாளுக்கு பல்வேறுவிதமான பிரசாதங்களைத்  தயார் செய்து படையல் போட வேண்டும்.

மாவிளக்கு போடும் பழக்கம் இருந்தாலும் சிறப்பானது. சக்தி வாய்ந்தது. பிறகு வீடு முழுக்க வாசனை சாம்பிராணி போட்டு, நாராயண கோஷம் போட வேண்டும். கோவிந்த நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும். இதன் மூலமாக பெருமானுடைய பேரருள் கிடைக்கும். கோவிந்த நாம கோஷத்தால் உலகத்தின் பல்வேறு உபாதைகள் குறையும். அன்றைய தினம் அவிட்ட நட்சத்திரம் என்பதால் செவ்வாய் கிரகத்தின் தோஷங்கள் குறைந்து திருமணத் தடைகளும் நீங்கும். திருமணமானவர்களுக்கு சந்தோஷமான மண வாழ்வு கிடைக்கும்.

சத் சந்தான புத்திர பிராப்தி ஏற்படும். சனிக்கிழமை துவாதசியோடு வருவதால் பெருமாள் வழிபாட்டையும் துவாதசி பாரணையும் சேர்த்து  நடத்தி விடலாம். மிக சிறப்பான இந்த வழிபாட்டைச் செய்வதன் மூலமாக குடும்பத்தில் திருமகளின் அருள் சித்திக்கும்.

சனி பிரதோஷம் (18.9.2021 சனிக்கிழமை)

பிரதோஷங்கள் பல வகை உண்டு. அதில் சனிக்கிழமை பிரதோஷம் வந்தால், அது “சனி பிரதோஷ”மாகக்  கருதப்படுகிறது. திரயோதசி திதி, சனிக்கிழமைகளில் வருவதால் இது சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. சனி மகாபிரதோஷ நாளில்  விரதம் இருந்தால்  அது மற்ற பிரதோஷ பலனைவிட அதிகமான பிரதோஷப் பலனைத் தரும்.  

சகல பாவங்களும் விலகும். புண்ணியம் சேரும். இந்திரனுக்குச்  சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்தத் தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். சனிப்பிரதோஷ நாளில் மாலையில் சிவனையும்  நந்தியையும் தரிசிக்கும் வரை விரதம்  இருக்க வேண்டும். எதுவும் சாப்பிடக்கூடாது.

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அறுகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

அனந்த விரதம் - கெஜலட்சுமி விரதம் 19.9.2021 ஞாயிற்றுக்கிழமை

பூஜைக்கு முன்னால் ஆசமனியம் பண்ணுகின்ற போது மூன்று மந்திரங்களைச் சொல்லுவார்கள்.

ஒன்று “அச்சுதன்”.

இரண்டு “அனந்தன்.”

மூன்று “கோவிந்தன்.”

இதில் இடையில் இருக்கக்கூடிய மந்திரம்  அனந்தன். அனந்தன் என்றால் எண்ணற்றவன். அடக்க முடியாதவன்.  அளவற்ற சக்தி உடையவன். அளவற்ற சக்தியைத் தருபவன் என்று  பொருள். பகவான் பள்ளிகொண்ட ஆதிசேஷனுக்கு “அநந்தன்” என்று பெயர். அந்த அனந்தனை எப்பொழுதும், “ஒழிவில் காலமெல்லாம் உடனாய்” தன்னோடு இணைத்து இருப்பதால், பகவானுக்கும் அனந்தன் என்று பெயர்.

திருவனந்தபுரத்தில் பகவான், அனந்தபத்மநாப ஸ்வாமி என்ற திருநாமத்தோடு காட்சி தருகின்றார். அவ்வூர், “அனந்தபுரம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த அனந்தனுக்கு ஒரு விரதம் “அனந்த விரதம்” என்கிற பெயரில் இருக்கிறது. அதுவும் நாகதெய்வமான ராகுவின் சதய நட்சத்திரத்தில் இந்த விரதம் வருகிறது.

பொதுவாக பிள்ளையார் சதுர்த்திக்கு பின் வருகின்ற சதுர்த்தசி திதியில் இவ்விரதம் கொண்டாடப்படுகிறது. (அதாவது விநாயகர் சதுர்த்திக்கு பத்தாம் நாள் இவ்விரதம் வரும்).

இழந்த பொருட்களை திரும்பக்  கிடைப்பதற்காக, இந்த விரதம் இருக்கும்படி, பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். இந்த விரதம் இருந்து பாண்டவர்கள், தாம் இழந்த நாட்டையும், செல்வங்களையும், திரும்ப அடைந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. முறையாக இருப்பதற்கான வழிமுறைகள் சாஸ்திரங்களில் சொல்லப்

பட்டிருக்கின்றன. எளிமையாக இந்த விரதத்தை இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை காலை நீராடி, சூரியனை, சூரிய நாராயணனாக நினைத்து வணங்கி, மதியம் பெருமானுக்குப் படையல் போட்டு, மாலை அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, நெய் விளக்கு போட்டு, துளசி மாலைகளைக்  கொடுத்து அர்ச்சனை செய்வதன் மூலமாக, நாம் எதிர்பார்த்தது கிடைக்கும். எதிர்பாராத பல நன்மைகளும் அனந்தன் அருளால் கிடைக்கும்.

உமா மஹேஸ்வர விரதம் 20.9.2021 திங்கள் கிழமை

ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு வகையான விரதம்  நம்முடைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சிவபெருமானுக்கு எட்டு வகையான விரதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே திங்கட்கிழமை சிவபிரானுக்கு மிகவும் இஷ்டமான நாள். அன்று அவசியம் இருக்க வேண்டிய விரதம் சோமவார விரதம். அதில் சிறப்பானது விநாயகர் சதுர்த்திக்கு பின்னால் பௌர்ணமியோடு இணைந்து வருகின்ற உமா மகேஸ்வர விரதம். சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கௌரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்ற எட்டில் இந்த விரதமானது மிக விசேஷமானது.

இப்போதெல்லாம்  திருமணமாகியும் கருத்து வேறுபாடுகளால் தம்பதிகள் பலர் பிரிந்து இருக்கின்றனர். சென்னையிலேயே எட்டு குடும்பநல வழக்கு நீதிமன்றங்கள் வந்து விட்டன. காரணம்  தம்பதிகளிடையே தன் முனைப்பு. “நீயா?  நானா?” சிக்கல்கள். இந்த கருத்து வேறுபாடுகளை நீக்கி பிரிந்த தம்பதியர்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்த விரதம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விரதத்தின் மகிமை குறித்து  “சிவரகசியம்” என்கின்ற நூலில், பல உன்னதமான பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.  இந்திராதி தேவர்களும், ரிஷிகளும் இவ்விரதத்தை கடைபிடித்து, மகத்தான பலன்களை அடைந்திருக்கின்றனர். இது வேத விற்பன்னர்களை கொண்டு செய்யவேண்டிய மிக விரிவான பூஜை.

மிக எளிமையாகவும் கடைபிடிக்கலாம்

அன்றைய தினம் காலையில் நீராடி, விரதமிருந்து, மதியம் அம்பாளுடன் கூடிய சிவபெருமான் படம் இருந்தால், அதற்குப் பூக்களைச் சூட்டி, அலங்காரம் செய்து, தூப தீபங்களைக்  காட்டி,  நிவேதனம் செய்ய வேண்டும்.

பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்

அன்று இரவு அவசியம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும். அம்பாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. அப்பனும் அம்மையும் அனைத்து பலன்களையும்,  தம்பதி சமேதராக இணைந்து தரும் இணையற்ற விரதம் இது.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

Related Stories: