1. பொய்கையாழ்வார்
5. நம்மாழ்வார்
நம்மாழ்வார் பற்பல பாசுரங்களால் வராகனை மங்களாசாசனம் செய்கிறார். திருவிருத்தத்தில் கடைசி பாட்டுக்கு முதல் பாட்டு. மிக அற்புதமான பாட்டு.ஈனச் சொல்லாயினுமாக எரிதிறை வைய முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான்,இருங்கற்ப கம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மாற்று எல்லா அவர்க்கும் ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவேகண்ணனிடத்தில் ஈடுபாடு கொண்ட ஆழ்வார், பற்பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, வராகப் பெருமானைவிட நல்லவரை உயிர்களைக் காப்பவரை, நான் காணவில்லை என்கிறார். அவரைச் சரணடைந்தால் நமக்கு ஞானத்தைத் தந்து கரையேற்றுவான் என உறுதிபடச் சொல்கிறார்.“ஈனச் சொல்லாயினுமாக” என்கின்ற சொல் முக்கியமான சொல். சில விஷயத்தை உறுதியாகச் சொல்லும்போது, அதை நம்பாதவர்கள், உறுதியோடு சொன்னவர்களை பழித்துப் பேசுவார்கள். நம்மாழ்வார் சொல்கிறார்:“அப்படி என் மீது பழி வருவதாக இருந்தாலும் வரட்டும். ஆனால் நான் சொன்ன சொல்லில் இருந்து மாற மாட்டேன். பக்தர்கள், முக்தர்கள், நித்தியர்கள் என எல்லோருக்கும் மெய்யறிவு தரும் ஞான பிரான் வராகப் பெருமானே.” என்கிறார். இதில் சொல் என்பதற்கு தத்துவம் என்று பொருள். வைணவ மரபில் திரிவிக்கிரம பெருமாளை “உத்தமன்” என்றும், வராக பெருமாளை “ஞான பிரான்” என்றும் போற்றுவது மரபு. அந்த ஞானப் பிரான் சொன்ன வார்த்தைகளைப் பரப்புவதற்காக, பூமாதேவியே ஆண்டாளாக அவதரித்தாள். அதனால் ஆண்டாளை “ஞானப் பூங்கொடி” என்று போற்றுவர். நம்மாழ்வார் ஞானபிரான் மீது அளவில்லா காதல் கொண்டவர் என்பதை திருவாய்மொழியிலும் பல பாசுரங்களில் பாடுகின்றார். குறிப்பாக திருவாய்மொழியை நிறைவு செய்கின்ற பொழுது, அவர் மனம் முழுக்க வராகப்பெருமான் கொள்ளை கொள்ளுகின்றான். வானமாமலை என்று சொல்லப்படும் திவ்ய தேசத்துப் பெருமாளை வணங்க முற்படும் நம்மாழ்வார் அப்பெருமானை வராகப் பெருமாளாகக் கருதி, “நான் தொழுவதற்காக என் எதிரில் வந்தருள வேண்டும்” என்கிறார். இங்கே ஒரு கேள்வி எழும். நம்மாழ்வார் ஸ்ரீ வரமங்கல நகர் (வானமாமலை) நேரில் சென்று பகவானைத் தொழுதாரா?நம்மாழ்வார், தான் இருந்த புளிய மரத்தடியில் இருந்து, எந்த திவ்ய தேசமும் நேரில் சென்று பாடவில்லை. அந்தந்த திவ்யதேசத்து எம்பெருமான்களே இவர் முன்னால் எழுந்தருளி தமிழ்ப் பாசுரங்கள் பெற்றனர் என்பது வைணவ மரபு. அந்த அடிப்படையில் வானமாமலை பெருமாளை, “ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே! கண்ணா! என்னை ஆளுடை வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே! நீ அடியேன் தொழ வான மாமலை வந்தருளே” என்று பாடுகின்றார்.திருவாய்மொழியை நிறைவு செய்யும் பொழுது அழகான வராகப்பெருமாள் உருவம் நம்மாழ்வார் மனதில் நிற்கிறது. இந்த வராகப் பெருமான் அழகுதானே அன்று பூமாதேவியையும் கவர்ந்தது? எத்தனை அழகு தெரியுமா இந்த பெருமான்? இரண்டு தந்தங்களில் அவன் பிராட்டியை கவ்விக்கொண்டு நீல ரத்தினம் போல் கடலில் இருந்து எழுந்த பொழுது, எத்தனை அழகு தெரியுமா? அப்படிப்பட்ட எம்பெருமானாகிய வராகப் பெருமாளை நான் பெற்றுவிட்டேன்; பெற்ற பின்பு இனி அவரை விட்டு அகல முடியுமா? என்று கேட்கிறார். அழகான பாசுரம். கோலமலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பே யோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப கோலவராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் நீலக்கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ?“போக்குவனோ” என்ற கேள்வியில் பதிலும் இருக்கிறது. ‘‘போக்க மாட்டேன்” என்பதுதான் பதில்.
உன்னைப் பெற்ற பின்பு அடியேன் விட்டு விடுவேனோ என்பது நாம் சொல்லும் சாதாரணப் பொருள். ஆனால், வைணவ உரையாசிரியர்கள் வராகப் பெருமான் அவதாரமெடுத்து, அவர் மீது அன்பு வைத்த பரம பக்தர்களான நம்மை அடைந்தபின், கைவிட்டுவிடுவாரா? கைவிட மாட்டார் என்று பொருள் என்று சொன்னார்கள்.
6. பெரியாழ்வார்பெரியாழ்வார் ஏழு பாசுரங்களால் வராகப் பெருமானை மங்களாசாசனம் செய்கின்றார். அதில் ஒரு அருமையான பாசுரம். வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புலச் சேவை அதக்கிகயிற்றும் அக்காணி கழித்துக் காலிடைப் பாசம் சுழற்றி எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே ஒரு காலத்தில் கடலுக்குள் ஒளிக்கப்பட்டு இருந்த பூமியை தன் கோரைப் பற்களால் தாங்கி எடுத்துவந்த தன்மையைப் போல், நானும் என் தாயினுடைய கருவறை என்னும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அங்கே இருந்து என்னை நீக்கி வெளிக்கொண்டு வந்து, என்னுடைய வலிமையான ஐந்து புலன்கள் எனப்படும் காளைகளின் ஆணவத்தை அடக்கி ,நரம்பு எலும்போடு இருக்கும் இந்த உடலின் ஆசைகளை அறுத்தெறிந்து எமதூதர்கள் பாசக்கயிறால் என்னைக் கட்டா வண்ணம் காப்பாற்றி,எனக்கு ஆத்மஞானத்தை ஓதுவித்து, தன்னைப் பணி செய்யுமாறு கொண்டான் என்று, தான் அடைந்த நன்மையை பரக்கப் பேசுகிறார் பெரியாழ்வார். இதில் அக்கு ஆணி என்பது மேலே தோலோடு இருக்கும் வெளி உடம்பையும், காலிடைப் பாசம் என்பது சூட்சும உடலையும் குறிக்கும்.7. ஆண்டாள்ஆண்டாள் வராகரைப் போற்றுகின்ற பாசுரம் அதிஅற்புதமான பாசுரம். வராகப் பெருமாள் தன்னுடைய மேன்மையைப் பொருட்படுத்தாது, பூமியைக் காக்க வேண்டும் என்பதற்காக, பன்றி உருவை எடுத்துக் கொண்டு, கலங்கிய நீரில், சேறும் சகதியுமாக உடம்பில் பூசிக்கொண்டு, மற்ற தேவர்கள் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பூமாதேவியைப் பொறுப்போடு மீட்டெடுத்து, உயிர்கள் உய்வு பெறுவதற்காக நல்ல ஞான உபதேசங்கள் செய்தானே, அந்த உபதேசங்களை எல்லாம், என்னுடைய தந்தையான விஷ்ணுசித்தர், எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருப்பார்; அதனால் நானும் நினைத்துக் கொண்டிருப்பேன். இப்படிப்பட்ட ஒரு அற்புதமான காரியத்தைச் செய்ததால், அவருடைய ஒளி வளர்ந்தது. இதில் அற்புதமான விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை சேற்றில் விழுந்து விட்டது. எத்தனையோ பேர், நம்முடைய உடை கசங்கிவிடும்; உயிர் போய்விடுமே என்றெல்லாம் நினைத்து, எந்தவித முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அந்த சேற்று நீரில் குதித்து உடம்பெல்லாம் சேறுபூசிக்கொண்டு, அந்த குழந்தையை ஒருவர் காப்பாற்று கின்ற பொழுது, இந்த காரியத்தைச் செய்யாத மற்றவர்களைவிட, சேறு பூசிக் கொண்ட அவர்தான் அழகாகத் தெரிவார். இது உளவியல். இந்த உளவியலை இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாடுகிறார். ‘‘மானம் இலாப் பன்றி” என்று கேலி செய்வது போல் தோன்றினாலும், உண்மையான அர்த்தம், உபமானம் இல்லாத பன்றி; அதாவது வராகரின் இந்தச் செய்கைக்கு, வரம்பு கட்டவே முடியாத பெருமை பெற்றவர் என்பது பொருள். இப்படிப்பட்ட செய்கையைச் செய்தவரை யாருக்குத்தான் பிடிக்காது? இனி அந்த அற்புதமான பாசுரம். பாசித் தூர்த்து கிடந்த பார்மகட்கு பண்டொருநாள் மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே8. குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வார், இன்னுமொரு அருமையான செய்தியைச் சொல்லுகின்றார். அவர் திருவரங்கம் சென்று அரங்கநாதப் பெருமாளையும், அந்த ரங்கநாத பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தையும், பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்டவர். அவர் இந்தப் பாசுரத்தில் சொல்லுகின்றார். “நான் திருவரங்கம் செல்வேன். அங்கே பரம பாகவதர்கள் கூடி, பகவானுடைய பலவிதமான லீலைகளைச் சொல்லிப் பாடுவார்கள். குறிப்பாக அவன் வராக அவதாரமெடுத்து, பூமியைக் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் கண்களில் நீர் வரும் வண்ணம் ஆடிப் பாடுவார்கள். அங்கே ஏற்கனவே காவிரி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்தக் காவேரி ஆற்று நீரைவிட இவர்கள் கண்களில் இருந்து வரும் நீர் பேராறாக ஓடும். அந்தப் பாகவதர்கள் குதித்துக் குதித்து பாடும்பொழுது நீரும் மண்ணும் கலந்து சேறாகும். அந்தச் சேற்றை எடுத்து, என்னுடைய தலையில் பூசிக் கொண்டு மகிழ்ச்சி அடைவேன்” என்கிறார் குலசேகர ஆழ்வார்.ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய் மாறட ர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப் பாடி வண்பொன்னிப்பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறுசெய்த் தொண்டர் சேவடிக்கு செழுஞ்சேறு என் சென்னிக்கு அணிவனே9. திருமங்கையாழ்வார்
நிறைவாக, திருமங்கையாழ்வார் பதினைந்து பாசுரங்களால் வராக பெருமானைப் போற்றிப் பரவுகிறார். பல தலங்களில் அவர் வராகப் பெருமானைக் குறித்துப் பாடுகின்றார். திருக்கடல்மல்லை, திருவயிந்திரபுரம், சீர்காழி , திருவெள்ளக்குளம், திருவெள்ளறை, திருவரங்கம், திருநறையூர், திருச்சேறை முதலிய திவ்ய தேசத்து பெருமாளைப் பாடுகின்றபோது வராக அவதார நிகழ்ச்சிகளை இணைத்து நெஞ்சுருகிப் பாடுகின்றார். பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம் நாராயணன் என்ற நாமத்துக்குப் பொருளாக வராகப் பெருமானை அவர் போற்றுகின்றார்.“வராக பெருமாளே! இம்மண்ணை கைப்பற்றிய நாராயணன் நீ! உன்னை நல்ல வேதியர்கள் வேத மந்திரங்களால் வாழ்த்துகின்றனர். நீயோ, சீரார் பொழில் சூழ்ந்த திருவெள்ளக்குளம் என்னும் அண்ணன் கோயிலில் ஆராஅமுதமாகக் காட்சி தருகின்றாய் .எனக்கு அருள் செய்” என்று பாடுகின்றார். அவர் அதிமான பாசுரங்களைப் பாடிய திவ்யதேசம் திருநறையூர். (கும்பகோணம் பக்கத்தில் நாச்சியார் கோயில்)காரணம், அந்தப் பெருமாளிடம் தான் திருமங்கையாழ்வார் பஞ்ச சமஸ்காரம் பெற்றார். எனவே திருநறையூர் எம்பெருமான் அவருக்கு ஆசாரியனும் ஆவார். அவரை உருக்கத்தோடு பாடுகின்ற ஒரு பாசுரம் இந்தப் பாசுரம். புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்துஎன்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால் உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நிற்ப நம்பியே வராக அவதாரம் எடுத்து நின்ற அவர் அழகைப் பார்த்தவுடன், ஆழ்வார் உள்ளம் அவரிடத்தில் இல்லை. “வராகப் பெருமானே! நீ என் உள்ளம் கவர்ந்த கள்வன்” என்று அழைக்கின்றார். “அப்படிப்பட்ட பெருமானாகிய நீ, எனக்கு ஆசையோடு திருநறையூரில் நின்று, ஞானத்தைத் தந்த பிறகு, உன்னை விட்டு என்னால் பிரிய முடியாது” என்று பாடுகின்றார். திருமங்கையாழ்வார்மட்டு மல்ல, ஆழ்வார்கள் அனை வருமே, வராகப் பெருமாள் சிறப்பை, வண்ணமயமான தமிழ்ப் பாசுரங்களால் பாடி அருளியிருக்கின்றனர். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு துளி அனுபவித்தோம். இன்னும் அனுபவிப்பதற்கு ஏராளம் இருக்கிறது.வராகப் பெருமான் திருவடிகளே நமக்குத் தஞ்சமாகட்டும்.பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி
