எத்தனை கோடி இன்பம்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-64

புனிதம் நிறைந்த இந்த மனித வாழ்வின் பொருள் தெரியாமலேயே,

பலபேரின் வாழ்க்கை முடிந்து வருகிற பரிதாபத்தைத் தான் அனைவரும் அறிந்த கீழ் கண்ட பாடல் எடுத்துரைக்கின்றது

நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

அவரவரின் சொந்த முயற்சி என்பது சிறிதளவும் இல்லாமல் இறைவனின் பெருங்கொடையால்தான் இந்த மானிட தேகம் நமக்கு அமைந்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் எண்ணிச் செயலாற்ற வேண்டும்.

‘அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது’

‘வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்

- என்ற சான்றோர்களின் அறிவுரையை எண்ணி நம்வாழ்வைப் பயனுள்ளதாக நாம் பரிணமிக்கச் செய்ய வேண்டும்.

‘கடவுள் மனிதன்மேல் வைத்துள்ள நம்பிக்கையை இன்னும் கைவிட்டுவிடவில்லை என்பதையே ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் உறுதிப்படுத்துகிறது’ என்கிறார் அறிஞர் ஒருவர். இறை உணர்வும், பொதுத் தொண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம் அமையுமானால் இம்மானிட சமுதாயம் மகத்தான வெற்றி பெறும். ‘நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை’ என்பதைப் பரிபூரணமாக உணர்ந்து கொண்டு மற்றவர்களை வாழ்வித்து நாமும் வாழக் கற்றுக் கொண்டு விட்டால் பாரதியார்போல் ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய்’ என நாமும் ஆனந்தக் கூத்திடலாம்.

காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்,

நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்!

காக்கை குருவியை நாம் குறைந்த அறிவு கொண்ட உயிரினங்களாகத்தான் பார்க்கிறோம். கடலையும், மலையையும் இயற்கைப் பொருட்களாகத்தான் நம்மால் பார்க்க முடிகிறது என்று தாயுமானவர் பாடுகின்றார்.

எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!

அனைத்துயிரும் ஒரு ஆண்டவனின் குழந்தைகள் என்கிற உணர்வை ஒவ்வொரு மனிதனும் இறைபக்தி மூலமே பெற முடியும். அப்படிப்பட்ட பக்தி உணர்வு தலைப்பட்டாலே பரோபகாரம் செய்வது அனைவருக்கும் இயல்பாகவே மாறிவிடும். உதவிபுரிவதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்கிறார் திருவள்ளுவர். இறை இன்பமும், ஈத்துவக்கும் இன்பமும் இணைந்துவிட்டால் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! எங்கள் இறைவா! என்று எல்லோராலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியுமே!

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ

போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய்

ஏக வுருவாய்க் கிடக்குதையோ

இன்புற் றிடநாம் இனிஎடுத்த

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே.

காகம்கூட அனைவருக்கும் பொதுவாக விருந்து படைக்கிறதே! ஆறறிவு மனிதனே! மீண்டும் அடைய முடியாத இம்மானுடப் பிறப்பை இப்போதே பயன்படுத்திக் கொள்ள, பொங்கித் ததும்பிப் பூரணமாய் என்று குரல் கொடுக்கிறார் தாயுமானவர். மனித மனத்தை தன் அருகே அழைத்து அதற்கு ஒரு அறிவுரையை வழங்குகின்றார் அருணகிரிநாதர்.கந்தர் அனுபூதி என்னும் மந்திர நூலில் மனத்தை முன்னிலைப்படுத்தி உபதேசிக்கும் விதமாக மூன்று

பாடல்கள் அமைந்துள்ளன.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று

உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்

மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

என்றும்...

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது

இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

வேதனையிலிருந்து விடுபட அருணகிரியார் மனதிற்கு மொழியும் அறிவுரைகள் இரண்டுதான்

ஒன்று -  இறைதாள் நினைவாய்

இரண்டாவது -  கரவாது

இடுவாய்!

இறை உணர்வும், உயிர் அன்பும் அமைந்தால் இவ்வுலக வாழ்வில்

மட்டுமல்ல மேலுலகிலும் இன்புற்று வாழலாம் என்கிறார்.

செந்தமிழ் மூதாட்டி..;. தானமும்

தவமும் தான் செய்வராயின்

வானவர் நாடு வழி பிறந்திடுமே...

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Related Stories:

>