எறும்பின் உபதேசம்

மன்னர் ஒருவர் கடுந்தவம் செய்தார். கடவுள் நேரே காட்சி கொடுத்தார். அவரை வணங்கிய மன்னர், “தெய்வமே! யாரிடமும் இல்லாத ஒன்றை, அடியேனுக்குத் தந்தருள வேண்டும்” எனக் கேட்டார்.தெய்வமும் சிரித்தபடியே, “இந்தா! இந்தப் பட்டு விரிப்பை வைத்துக் கொள்! இதில் ஏறி உட்கார்ந்தால், நீ எங்கே போக வேண்டும் என நினைக்கிறாயோ, அங்கே இது ஆகாய வீதி வழியாகக் கொண்டு போய்விடும். எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி!” என்றபடியே

மன்னரின் பார்வையிருந்து மறைந்தார்.

மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை.

தெய்வம் தந்த விரிப்பை அங்கேயே தரையில் விரித்து, அதில் ஏறி அமர்ந்து ஆகாயத்தில் பறந்து அரண்மனையை அடைந்தார். எல்லை இல்லா மகிழ்ச்சியில் மிதந்தார் மன்னர். அதுஆணவத்தில் கொண்டுபோய் விட்டது.

“அ...ஹ... ஆகாயத்தில் பறப்பேனாக்கும் நான். என்னைப்போல, எவன் இருக்கிறான்? மிகவும் உயர்ந்தவன் நான்” என வாய்விட்டுச் சொல்லவும் செய்தார். ஒருநாள்... மன்னர் ஆகாயவீதி வழியாகப் போய்க் கொண்டிருக்கையில், கீழே சில எறும்புகள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார். மன்னருக்கு எறும்புகளின் மொழியும் தெரியும். ஆகையால், ‘‘அந்த எறும்புகள் என்ன பேசிக் கொள்கின்றன என்பதைக் கேட்கலாம்’’ என நினைத்து, அப்படியே தன் பயணத்தை நிறுத்தி, எறும்புகளின் பேச்சைக் கவனித்தார்.

ஓர் எறும்பு மற்றோர் எறும்பிடம், “போ!

சீக்கிரம்போய் ஔிந்து கொள்! மன்னரைப்

பார்க்காதே! பார்க்காதே!’’ என்று சொல்லி

அவசரப் படுத்திக் கொண்டிருந்தது.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை; ‘‘நம் பார்வையில் படக்கூடாது என்று சொல்லக் காரணம் என்ன?” என நினைத்த மன்னர், எறும்பிடமே கேட்டார்; ‘‘என்னைப் பார்த்து ஔிந்து கொள்ளச் சொல்லி, அந்த எறும்பிடம் ஏன் சொன்னாய்?” எனக் கேட்டார்.

‘‘மன்னா! உங்களைப் பார்த்து அந்த எறும்பும் உங்களைப் போலவே, ஆணவம் பிடித்து அலையக் கூடாதல்லவா? அதற்காகத்தான்” என்று பதில் சொன்னது எறும்பு.

மன்னருக்கு அதுவே பெரிய அடியாக இருந்தது; இருந்தும் விடவில்லை; ”எறும்பே! உன்னை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றார்.

எறும்பும், “மன்னா! என்னால் இங்கிருந்து கத்திப் பேச முடியவில்லை. உங்கள் கையில் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்னை!

உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்” என்றது.

மன்னர் எறும்பை எடுத்துத் தன்கையில் வைத்துக் கொண்டார்; “எறும்பே! என்னைவிட உயர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறாயா நீ?’’ எனக் கேட்டார். “பார்த்திருக்கிறேன்” எனப் பதில்சொன்னது எறும்பு.

மன்னர் திகைத்து, “யார் அவர்?” எனக்கேட்டார்.

“நான்தான்” என்று பதில் சொன்ன எறும்பு, மன்னரின் திகைப்பைக் கவனிக்காததைப்போல, மேலும் சொன்னது;“மன்னராகிய நீங்களே கையில் தூக்கி வைத்துக்கொண்டு என்னைத் தாங்குகிறீர்கள் என்றால், உங்களைவிட நான் தானேஉயர்ந்தவன்”  என்றது.அதைக் கேட்டதும் மன்னரின் அகந்தை மாயமாய் மறைந்து போனது. அன்று முதல் அடக்கத்தோடு நடக்கத் தொடங்கினார்.

V.S. சுந்தரி

Related Stories: