பெப்சி அலுவலகத்தில் சோனா தர்ணா

சென்னை: பெப்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து நடிகை சோனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சி நடிகை சோனா, ‘குசேலன்’, ‘மிருகம்’, ‘பத்து பத்து’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது வாழ்க்கை சம்பவங்களை தழுவி ‘ஸ்மோக்’ என்ற வெப்சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை வடபழனியிலுள்ள பெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த சோனா, திடீரென அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து சோனா வௌியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பெப்சியில் உள்ள புரொடக்‌ஷன் மேனேஜர் சங்கத்தில் பாலகோபி, சங்கர் என இருவர் இருக்கிறார்கள். அவர்கள் எனது வெப்சீரிஸுக்கு பிரச்னை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த வெப்சீரிஸ் காப்பி அடங்கிய ஹார்ட் டிஸ்க் அவர்களிடம் உள்ளது. அவர்களது பணிக்காக ரூ.40 ஆயிரம் நான் வழங்கிவிட்டேன். இன்னும் ரூ.6 லட்சம் வழங்கினால்தான் ஹார்ட் டிஸ்க் கிடைக்கும் என்கிறார்கள். என்னை மிரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் என் வீட்டின் கதவை தட்டுகிறார்கள். இது தொடர்பாக எங்கு புகார் அளித்தும் பயனில்லை. அதனால் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளேன். எனக்கு எனது ஹார்ட் டிஸ்க் திரும்ப கிடைக்கும் வரை போராடுவேன். இவ்வாறு அந்த வீடியோவில் சோனா பேசியுள்ளார். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: