அக்னி வளையக் கற்பூரம் - விதுரர்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

‘‘தர்ம சாஸ்திரத்திலும் ராஜநீதி சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவர் விதுரர். கோபமும் ஆசையும் இல்லாதவர்; தீர்க்கமாக ஆராய்பவர்; அமைதியை முக்கியமாகக் கொண்டவர் விதுரர்’’ என விதுரரைப் பற்றி வியாசர் புகழ்ந்துள்ளார். ஆணி மாண்டவ்ய முனிவரின் சாபத்தால், தருமதேவன் (யம தர்மன்) விதுரராக வந்து அவதரித்தார். மாண்டவ்யர் எனும் முனிவர், தர்மங்களை அறிந்தவர். சத்தியத்திலும் தவத்திலும் உறுதியாக இருப்பவர். அப்படிப்பட்ட முனிவர் ஒருநாள்... தன் ஆசிரமத்தின் வாசலில் மரத்தினடியில், கைகளை தலைக்குமேல் உயரத் தூக்கியபடி மௌன நிலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திருடர்கள் சிலர் திருடிய பொருட்களோடு ஓடிவந்து, ஆசிரமத்தில் நுழைந்து ஔிந்து கொண்டார்கள். பின்னாலேயே துரத்தி வந்த காவலர்கள் ஆசிரமத்திற்குள் நுழைந்து கள்வர்களைப் பிடித்தார்கள். விவரமறியாமல், ஆசிரம வாசலில் மௌன நிலையில் தவம் செய்துகொண்டிருந்த மாண்டவ்ய முனிவரையும் திருடர்களுடன் இழுத்துப்போய், மன்னரிடம் ஒப்படைத்தார்கள்.

மன்னரோ, ‘‘அனைவரையும் கழுவில் ஏற்றுங்கள்!’’ எனக் கட்டளையிட்டார். காவலாளி களும் அவ்வாறே செய்து விட்டு, களவுபோய் மீட்கப்பட்ட பொருளை அரசாங்க கஜானாவில் சேர்த்தார்கள். கழுவில் ஏற்றப்பட்ட கள்வர்கள் அனைவரும் இறந்தார்கள். ஆனால், மாண்டவ்ய முனிவர் மட்டும் நெடுங்காலம் உண்ணாமல் இருந்தும் இறக்கவில்லை; உயிரை நிறுத்திக் கொண்டு, ரிஷிகளை வரவழைத்தார். கழுமுனையிலும் அவர் செய்து கொண்டிருந்த தவத்தைக் கண்ட ரிஷிகள் இரவு நேரத்தில் அவரிடம் வந்தார்கள். வந்தவர்கள், ‘‘முனிவரே! இப்படிக் கழுவில் கொடுமையான துயரத்தை அனுபவிக்கும்படியாக, என்ன பாவம் செய்தீர்கள், நீங்கள்?’’ எனக் கேட்டார்கள்.

‘‘நான் ஒரு பாவமும் செய்யவில்லை’’ என்றார் மாண்டவ்ய முனிவர். வந்த முனிவர்கள் திரும்பிவிட்டார்கள்.அதன் பிறகும் பலநாட்கள், மாண்டவ்யர் கழுவிலேயே உயிருடன் இருந்தார். பார்த்த காவலர்கள் பிரமித்தார்கள்; ஓடிப்போய் மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னர் நடுங்கி, மந்திரிகளுடன் ஓடி வந்தார்; கைகளைக் கூப்பி மாண்டவ்யரை வணங்கி, ‘‘முனிவர் பெருமானே! அறியாமையால் நிகழ்ந்த இந்தப் பிழையை மன்னிக்கும்படி வேண்டுகிறேன்’’ என்றார்.

அது மட்டுமல்ல; உடனே கழுமரத்தில் இருந்து, மாண்டவ்ய முனிவரைக் கீழே இறக்கினார் மன்னர். அப்போது, கழுவின் கூர்மையான பகுதி, மாண்டவ்யரின் உடம்போடு வந்து விட்டது. அதை வெளியில் எடுக்க முடியாததால், அதில் ஒரு பகுதியை வெட்டினார் மன்னர்; மீதிக் கொஞ்சம் பகுதி உடம்பிலேயே வெளியே நீட்டியபடித் தங்கிவிட்டது; மாண்டவ்யரும், ‘‘இது பூக்குடலை மாட்ட உதவும். அப்படியே விட்டுவிடு!’’ என்று சொல்லி, அங்கிருந்து புறப்பட்டார்.

கழுத்துக்கும் விலாப்புறங்களுக்கும் நடுவில் இருந்த அந்த ஆணியுடனேயே புறப்பட்ட மாண்டவ்ய முனிவர், அதன் காரணமாகவே ‘ஆணி மாண்டவ்யர்’ என அழைக்கப் பட்டார். தவத்தில் சிறந்த அவர் தன் தவசக்தியின் காரணமாக, எல்லா உலகங்களுக்கும் சென்றுவரும் சக்தி படைத்தவராக இருந்தார்.

ஒருசமயம் அவர் தர்மதேவனிடம் போய், ‘‘கழுமரத்தில் ஏற்றி என் கழுத்தில் கூர்மையான அந்தப் பெரும் ஆணி குத்தும்படியான துயரம் எனக்கு வந்தது ஏன்?’’ எனக் கேட்டார்.

 ‘‘முனிவரே! நீங்கள் பறவைகளின் வால் பகுதியில், கூர்மையான இரும்பைக் குத்தினீர்கள். அதனால் வந்த விளைவுதான் இது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். தானமானது குறைவாகக் கொடுக்கப் பட்டாலும் பல மடங்காகப் பெருகுவதைப் போல, பாவமும் பல மடங்காகப் பெருகித் துயரத்தைத் தரும்’’ என்று பதில் சொன்னார் தருமதேவன்.

ஆணி மாண்டவ்யர் அடுத்த கேள்வியைக் கேட்டார். ‘‘நீ சொன்ன அந்தப்பாவம் , எப்போது என்னால் செய்யப் பட்டது?’’ என்றார். ‘‘நீங்கள் குழந்தைப் பருவத்தில் செய்தது’’ எனப் பதில் சொன்னார் தருமதேவன்.அதைக்கேட்ட ஆணி மாண்டவ்யர், ‘‘பிறந்தது முதல் பன்னிரண்டு வருடங்கள் வரை ஒருவன் எதைச் செய்தாலும் அதனால் பாவம் வராது. ஏனென்றால், அவனுக்கு அந்தக் காலத்தில் நல்லது - கெட்டது தெரியாது. சிறிய குற்றத்திற்காகப் பெரும் தண்டனையைக் கொடுத்து விட்டாய் எனக்கு நீ! எந்தப் பிராணியையும் ஹிம்சை செய்வதைவிட, சாதுக்களான முனிவர்களை வதம் செய்வது மிகப் பெரிய கொடுமை.

‘‘அத்தவறைச் செய்த நீ, பூவுலகில் அடிமையாகப் பிறப்பாய். இதுமுதல், உலகில் வினைப்பயன் உண்டாவதற்கு ஒரு வரம்பை உண்டாக்குகிறேன். அதாவது பதினான்கு வயது வரையில் பாவம் சேராது; அதற்குமேல் பாவம் செய்பவர்களுக்கு மட்டுமே குற்றமுண்டாகும்” என்றார் ஆணி மாண்டவ்ய முனிவர்.

அந்த முனிவரின் சாபத்தை ஏற்ற தருமதேவனே, விதுரராக வந்து அவதரித்தார்.திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் எனும் இந்த மூவரையும் தன் குழந்தைகள் போலவே வளர்த்து வந்தார் பீஷ்மர்; பீஷ்மரால் வளர்க்கப்பட்ட மூவரும் கல்வி - கேள்விகளிலும் ஞானங்களிலும் தலைசிறந்தவர்களாக விளங்கினார்கள். விதுரர் இளமையாக இருக்கும்போதே, திருதராஷ்டிரனுக்கு தர்மங்களை எல்லாம் உபதேசம் செய்யும் மந்திரியாக, பீஷ்மரால் நியமிக்கப்பட்டார், அவர்.    

சாஸ்திரங்களின் நுட்பங்களை அறிவதிலும் அவற்றை கிரகிப்பதிலும் தலைசிறந்தவராக விளங்கிய விதுரருக்கு இணையான தர்மசீலனோ - தர்மத்தை அறிந்தவனோ மூவுலகங்களிலும் யாரும் இருந்தது இல்லை.  விதுரரைக் கலந்து ஆலோசித்தே, திருதராஷ்டிரனுக்குக் காந்தாரியைத் திருமணம் செய்துவைத்தார் பீஷ்மர். அது மட்டுமல்ல! பாண்டு மன்னரும் அவர் மனைவி மாத்ரியும் இறந்தபோது, பீஷ்மருடன் சேர்ந்து அவர்களுக்குச் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்களை - ஈமக் கடன்களைச் செய்தவர் விதுரரே.

பாண்டு மன்னர் இறந்தபின், பாண்டவர்களும் கௌரவர்களும் அஸ்தினாபுரத்தில் ஒன்றாக இருந்தபோது, பீமனிடம் பொறாமை கொண்ட துரியோதனன் ஒருநாள், விஷம் கலந்த உணவைப் பீமனுக்குத் தந்தான். துரியோதனனின் சூழ்ச்சி தெரியாத பீமன், விஷம் கலந்த உணவை உண்டு மயங்கி விழுந்தான்; மயங்கி விழுந்தவனை கட்டி பாம்புகள் உள்ள ஆழமான மடுவில் தள்ளிவிட்டு அரண்மனை திரும்பினான், துரியோதனன்.

மற்றைய பாண்டவர்களும் குந்திதேவியும், பீமனைப் பல இடங்களில் தேடியும் காணாமல் துயரத்தில் ஆழ்ந்த போது, அவர்களைத் தேடி வந்தார் விதுரர். அவரிடம் தம் மனக்குறைகளைச் சொல்லி குந்திதேவி அழுதபோது, அவர்களுக்கு ஆறுதல் சொன்ன விதுரர், ‘‘அம்மா! துரியோதனன் செய்ததைச் சொல்லாதே! தம்பட்டம் அடிக்காதே! நீ உன் குழந்தைகளைப் பத்திரமாகக் காப்பாற்று!’’ ‘‘தீய குணங்கள் உள்ள துரியோதனனை நிந்தித்தால், உன்னுடைய மற்ற குழந்தைகளையும் அவன் கொன்றுவிடுவான். வியாச முனிவர் வாக்குப்படி, உன் குழந்தைகள் தீர்க்கமான ஆயுள் உள்ளவர்கள். கவலைப்படாதே! பீமன் வந்து விடுவான்’’ என்று ஆறுதல் சொன்னார் விதுரர்.

அவர் சொன்னபடியே பீமன் திரும்பினான். இதன்பிறகு, குந்தியையும் பஞ்ச பாண்டவர்களையும் அரக்கு மாளிகையில் வைத்து எரித்து விடவேண்டும் எனத் தீர்மானித்த துரியோதனன் அதற்கான முயற்சிகளில் இறங்கினான். அதை அறிந்த விதுரர் தன் நம்பிக்கைக்குரிய ஆள் மூலம் அரக்கு மாளிகையில் வேறு யாருக்கும் தெரியாமல் சுரங்கம் தோண்ட ஏற்பாடு செய்தார். அத்துடன் பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பின் கங்கையைக் கடப்பதற்காக, யந்திரங்களோடு கூடியதும் பெரும் காற்றுக்கும் அலைகளுக்கும் அசையாததுமான, கொடிகள் கட்டிய ஒரு கப்பலையும் தயார் செய்தார்.

அரக்கு மாளிகை நோக்கிப் பாண்டவர்கள் செல்லும் முன், சங்கேதமாக - சூசகமாகத் தர்மரிடம், ‘‘எதிரியின் புத்தியை எவன் அறிகின்றானோ, அவன் எதிரியால் உண்டாகும் ஆபத்தைத் தாண்டக்கூடிய செயலைச் செய்ய வேண்டும். உலோகத்தினால் செய்யப்படாமலே உடம்பை அழிக்கக் கூடிய கூர்மையான ஆயுதத்தைத் தெரிந்து கொண்டு எவன், அதைத் தடுக்கும் வழியையும் தெரிந்து கொண்டிருக்கின்றானோ அவனைப் பகைவர்களால் கொல்ல முடியாது.

‘‘காடுகளை அழிப்பதும் குளிரைப் போக்குவதுமான ஒன்று (தீ), பெருங்காட்டில் வளைக்குள் வாழும் எலி முதலியவைகளை எரிக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதை அறிந்து எவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றானோ, அவன் பிழைத்திருப்பான்’’.

‘‘கண்ணில்லாதவன் வழியை அறிய மாட்டான்; திசைகளையும் அறிய மாட்டான். தைரியமில்லாதவன் செல்வ த்தை அடைய மாட்டான். உலோகத்தால் செய்யப்படாததும் பகைவர்கள் ஏவுவதுமான ஆயுதத்தையே (தீ) மனிதன் வாங்கிக் கொள்கிறான்; தான் வாங்கித் திருப்பிப் போடுகிறான்.’’

‘‘முள்ளம்பன்றி சுரங்கத்தில் புகுந்து கொண்டு, நெருப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும். நடப்பவன் வழிகளைத் தெரிந்து கொள்கிறான்; நட்சத்திரங்களினால் திசைகளைத் தெரிந்துகொள்கிறான். நான் சொல்வதை நீ புரிந்துகொள்!’’ என்று விதுரர் கூறினார். அதன்பின் குந்தியும் பாண்டவர்

களும் விதுரர் முதலானவரிடம் விடை பெற்று, காசியிலிருந்த அரக்கு மாளிகையை நோக்கிப் புறப்பட்டார்கள். போகும் வழியில் குந்திதேவி, ‘‘விதுரர் சொன்னது எங்களுக்குப் புரியவில்லை. அவர் என்ன சொன்னார்?’’ எனக் கேட்டார்.

அதற்குத் தர்மர், ‘‘விஷத்தில் இருந்தும் தீயில் இருந்தும் நமக்கு ஆபத்து வரும். அவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். சுரங்கத்தின் வழியாகத் தப்பிப் பிழைத்து, நட்சத்திரங்களால் திசைகளை அறிந்து கொள்ள வேண்டும். சுவர்களைச் சோதனை செய்து பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் சொன்னார்” என்று பதில் சொன்னார்.

அரக்கு மாளிகை எரிந்தபோது, விதுரரின் அரும்பெரும் உதவியினாலேயே பாண்டவர்களும் குந்தியும் பிழைத்தார்கள். ஆனால், இந்த விவரம் தெரியாமல், அரக்கு மாளிகை தீப்பற்றி எரிந்து பாண்டவர்களும் குந்தியும் அழிந்து விட்டதாக அஸ்தினாபுரத்தில் அனைவரும் அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள். பீஷ்மரும் பாண்டவர்களை எண்ணி, மிகவும் வருந்திக் கதறி அழுதார். அப்போது அவரிடம் விதுரர் ரகசியமாகப் பாண்டவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறி விவரங்களைச் சொன்னார்.

அதைக்கேட்ட பீஷ்மருக்கு மெய் சிலிர்த்தது; ‘‘விதுரா! உன்னால்தான் பாண்டுவின் குலம் அழிந்து போகாமல் இருக்கிறது’’ என்று சொல்லிப் புகழ்ந்தார்.

இதன்பின் திரௌபதி திருமணம் முடிந்தபிறகு, விதுரர் திருதராஷ்டிரனிடம், ‘‘பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் திரௌபதியைத் திருமணம் செய்துகொண்டார்கள்’’ என விரிவாக எடுத்துரைத்தார்.மேலும், ‘‘மன்னா! பாண்டவர்களிடம் வேற்றுமை பாராட்டாதீர்கள்! இரண்டு கை

களாலும் அம்புவிடும் அர்ஜுனனை வெல்ல தேவேந்திரனாலும் முடியாது. பதினாயிரம் யானை பலமுள்ள பீமனை வெல்ல, ராட்சசர்

களாலும் முடியாது; பீமன் மிகுந்த பலங்கொண்ட இடும்பனையும் பகாசுரனையும் கொன்றவன்.’’

‘‘யமனுடைய பிள்ளைகளைப் போன்ற நகுல சகாதேவர்களை உயிருடன் இருக்க விரும்பும் எவன்தான் போருக்கு அழைப்பான்? தைரியம், இரக்கம், பொறுமை, சத்தியம், பராக்கிரமம் என அனைத்தும்கொண்ட தர்ம புத்திரனுடன் போரிட முடியுமா?’’

‘‘மன்னா! பாண்டவர்களிடம் அன்பு செலுத்துங்கள்! உங்கள் மேல் சுமத்தப்பட்ட (பாண்டவர்களைக் கொல்ல சதி என்ற) பழியை நீக்கிப் பொது மக்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிக்கப் பாருங்கள்!’’ என அற உபதேசமும் செய்தார்.

பிறகு, விதுரர் பாஞ்சால தேசம் போய் குந்தி - திரௌபதி - பாண்டவர்கள் என அனைவரையும் அஸ்தினாபுரம் அழைத்து வந்து, பாண்டு மன்னர் வாழ்ந்த மாளிகையிலே வாழச் செய்தார். திருதராஷ்டிரனுக்கு மட்டுமல்ல; அவன் பிள்ளைகளான துரியோதனன், துச்சாதனன் முதலானவர்க்கும் அறிவுரை சொன்னார். அவர்கள் கேட்டால்தானே!   துரியோதனன் சகுனியின் தூண்டுதலால், பாண்டவர்களைச் சூதாட அழைத்து அதன் மூலம் அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ளத் திட்டமிட்டான். அப்போது விதுரர் துரியோதனனிடம், ‘‘துரியோதனா! சொன்னதைக் கேள்! பாண்டவர்களிடம் இருப்பது அனைத்தையும் நீ கவர வேண்டுமென எண்ணினால்,பொய்மை நிறைந்த சூதாட்டம் வேண்டாம். சுலபமான வழி ஒன்று சொல்கிறேன் கேள்!

‘‘உன் தந்தையான திருதராஷ்டிரன் ஓர் ஓலை எழுதிப் பாண்டவர்களுக்கு அனுப்பினால் போதும்; மறுக்கவே மாட்டார்கள்; திருதராஷ்டிரன் கட்டளையிட்டால், அனைத்தையும் உனக்குக் கொடுத்துவிட்டுப் பாண்டவர்கள், காட்டிற்குச் சென்றுவிடுவார்கள்’’.

‘‘ஆகையால் உன் தந்தையிடம் சொல்லி, ஓர் ஓலை எழுதி அனுப்பச்சொல்! பாண்டவர் செல்வம் உனக்குக் கிடைத்துவிடும்; கெட்ட பெயரும் வராது; மற்றவர்கள் உன்னைப் பழிக்கவும் மாட்டார்கள். இதை மீறி சூதாட்டம் நடத்தினால், உலகம் உள்ளவரை, அந்தப்பழி உன்னை விட்டு நீங்காது’’ எனக் கூறினார், விதுரர். அதை ஏற்காத துரியோதனனோ, விதுரரை மிகவும் இழிவாகப் பேசினான்.

விதுரர் கோபப்படவில்லை; ‘‘துரியோதனா! எனக்குப் பாண்டவர்களும் நீங்களும் ஒன்றுதான். நீ்ங்களும் பாண்டவர்களும் ஒற்றுமையாக அரசாண்டால், எந்தப் பகையும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பகையரசர் அனைவரும் உங்கள் அருளை வேண்டி, உங்கள் அரண்மனை வாசலில்

காத்துக் கிடப்பார்கள். பேரும் புகழும் செல்வமும் வளரும் உனக்கு’’. ‘‘துரியோதனா! வஞ்சனைகொண்ட தீயவர்கள் சொல்லும் நன்மை தராத வார்த்தைதான் உனக்கு ஏற்குமே தவிர, நான் சொல்லும் நல்ல வார்த்தைகள் ஏற்காது உனக்கு’’ என்றார், விதுரர்.

துரியோதனனோ மேலும் இழிவாகப் பேசி, விதுரரை அவமானப்படுத்தினான். விதுரர் விலகிப்போய் விட்டார். அறிவுரை சொன்ன விதுரரையே அனுப்பிப் பாண்டவர்களை, சூதாட்டத்திற்கு அழைத்து வரச் செய்தான் துரியோதனன். மாயச் சூதாட்டம் நடந்தது. செல்வங்கள் அனைத்தையும் இழந்து, தங்களையும் (ஐந்து பேர்களையும் இழந்து) தோற்றுப்போன தர்மரிடம் சகுனி, ‘‘தர்மா! திரௌபதியைப் பந்தயமாக வைத்து ஆடு!’’ என்றான். அதுவரை மிகவும் பொறுமையோடு இருந்த விதுரர், கொதித்துப்போய் எழுந்தார்.

(தொடரும்)

பி.என். பரசுராமன்

Related Stories: