ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தமிழகத்தில் தடை செய்ய கடுமையான சட்டம்: பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் எம்.முகமது சேக் அன்சாரி வெளியிட்ட அறிக்கை:இணையத்தின் வழியாக பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் சமீபகாலமாக பெருகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழ்நிலையில் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், பேராசையின் காரணமாகவும் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமைகளாக மாறினர். தற்போது சூதாட்ட செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலர் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். திமுக அரசு அமைந்த பிறகு ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் இத்தகைய இணையவழி சூதாட்டத்தால் நிகழும் அவலங்கள் குறித்து அறிக்கையை  சமர்ப்பித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தேசிய அளவில் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டுமென நீதிபதி தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரமாக  செயல்பட்டு அது தொடர்பான குற்றங்களை ஒழிப்பேன் என்று கூறி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அது போல, ஆன்லைன் போதையான,  ரம்மி உள்பட அனைத்து சூதாட்ட விளையாட்டையும் முற்றிலும் தடுக்கும் விதமாக உடனடியாக கடுமையான சட்டம் இயற்றி, வளர் இளம் தலைமுறையினர் மற்றும் சமுகம் சீர்கெடுவதிலிருந்து பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தமிழகத்தில் தடை செய்ய கடுமையான சட்டம்: பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: