ஆயிரம் காலத்துப் பயிர்!

என்ன சொல்கிறது என் ஜாதகம்?

?என் கணவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்று பத்து ஆண்டுகள் ஆகிறது. நான் சம்பாதித்து என் ஒரே மகனைக் காப்பாற்றி வருகிறேன். நான்

மறுமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நல்லபடியாக அமையுமா? எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்.

- ஹர்ஷவர்த்தினி, மந்தைவெளி.

உங்கள் ஜாதகத்தில் கடுமையான களத்ர தோஷம் உள்ளது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டின் அதிபதி செவ்வாய் மூன்றாம் வீட்டில் நீசம் பெற்றிருக்கிறார். அதோடு ராகு - கேதுவின் தாக்கமும் ஏழாம் பாவத்தின் மீது விழுவதால் கடுமையான களத்ர தோஷம் என்பது உண்டாகியிருக்கிறது.

தாம்பத்ய வாழ்வு என்பது உங்களைப் பொறுத்த வரை கானல்நீராகப் போய் இருக்கிறது. நீங்கள் மறுமணம் செய்துகொண்டாலும் இனிமையான வாழ்க்கை அமைவதற்கான வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் உங்கள் ஜாதகத்தில் தொழில் மற்றும் உத்யோக பாவத்தைக் குறிக்கும் ஜீவன ஸ்தானமும், பிள்ளையைக் குறிக்கும் புத்ர ஸ்தானமும் உங்களுக்குத் துணை நிற்கிறது. மனதில் இருக்கும் குழப்பங்களுக்கெல்லாம் விடையளித்து உங்கள் மகனை நல்ல முறையில் வளர்த்து வாருங்கள். மறுமணம் பற்றிய யோசனையை விடுத்து உங்கள் உத்யோகத்தில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நீங்கள் வெகு விரைவில் சொந்தமாக சுயதொழில் தொடங்கும் வாய்ப்பும் பிரகாசமாய் உள்ளது.

37வது வயது முதல் தனலாபம் சிறப்பாக உள்ளதால் செய்யவிருக்கும் சுயதொழிலை நன்றாக விரிவுபடுத்தி பத்து பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்வீர்கள். மகனை நன்றாகப் படிக்க வைத்து சிறப்பான வாழ்க்கையையும் அவருக்கு அமைத்துத் தருவீர்கள். உங்கள் மகனின் வளர்ச்சி உங்கள் மனக்குழப்பத்தைப் போக்கி முழுமையான சந்தோஷத்தைத் தரும். கவலை வேண்டாம். தன்னம்பிக்கையுடன் வாழ்வினில் போராடி வெற்றி காண்பவர் நீங்கள் என்பதையே உங்களது ஜாதகம் உணர்த்துகிறது.

?என் மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாதிரித்தேர்வு வரை முதல் மாணவனாக சிறப்பான மதிப்பெண்கள் பெற்றுள்ளான். கொரோனாவால் தள்ளிப்போன பொதுத்தேர்வு தற்போது நடைபெற உள்ள நிலையில் திடீரென்று அவனுக்கு கை எழுத வரவில்லை. படித்தவற்றை பேப்பரில் எழுத முடியாமல் அவதிப்படுகிறான். மருத்துவரிடம் காண்பித்தும் முன்னேற்றம் எதுவும் இல்லை. அவனது ஜாதகத்தில் ஏதேனும் கோளாறு உள்ளதா?

- தங்கபாண்டியன், ராஜபாளையம்.

உங்கள் மகனின் ஜாதகப்படி தற்சமயம் சனியின் ஆதிக்கத்திற்குள் வந்துள்ளார். அவரது ஜாதகத்தில் சனி பகவான் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தைரியக்குறைவு உண்டாகியுள்ளது. இந்தப் பிரச்னை தற்காலிகமானதுதானே தவிர, நிரந்தரமானது அல்ல. சனியினால் உண்டாகும் தைரியக் குறைவினைப் போக்கவும், எழுத்து வேகம் அதிகரிக்கவும் கடுமையான முயற்சி தேவை. அடிக்கடி நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்க்கச் செய்யுங்கள்.

மகன் முதல் மாணவனாகத்தான் வரவேண்டும் என்ற எண்ணத்தினை விடுத்து அவருக்கு தைரியம் ஊட்டும் விதமாக பேசுங்கள். திருவோண நட்சத்திரம் மகர ராசியில் பிறந்திருக்கும் அவருக்கு தற்போது ஏழரைச் சனியின் தாக்கமும் பாதித்திருக்கிறது. தகப்பனாரைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் பாவத்தில் குரு அமர்ந்திருப்பதால் தந்தை அருகில் இருந்தாலே அவரது மனோதைரியம் கூடும். தேர்வின்போது நீங்களே உங்கள் மகனை தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். தேர்வு முடியும் வரை அப்பா வெளியிலேயே காத்திருப்பேன், கவலைப்படாதே என்று அவருக்கு தைரியமூட்டுங்கள்.

அப்பா அருகில்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையே அவரை உற்சாகத்துடன் தேர்வு எழுத வைக்கும். மருந்து மாத்திரைகளால் அவரது பிரச்னைக்குத் தீர்வு காண இயலாது. மனதளவில் தைரியக்குறைவு என்பது உண்டாகியிருக்கிறது. அதனைச் சரிசெய்யும் விதமாக அன்புடன் பேசி வாருங்கள். அவரது உத்யோக ஸ்தானம் என்பது வெகு சிறப்பாய் உள்ளது. மகனை மருத்துவம் படிக்கவைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளீர்கள்.

உங்கள் விருப்பத்தினை மகன் மீது திணிக்க வேண்டாம். அவரது ஜாதகப்படி அவருக்கு மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பிரிவினைத் தேர்ந்தெடுப்பதைவிட வணிகவியல் (காமர்ஸ்) பிரிவினைத் தேர்ந்தெடுத்து படிப்பது நல்லது. மத்தியஅரசு உத்யோகத்தில் உயர்அதிகாரியாய் பணியில் அமர்ந்து தந்தையாகிய உங்களுக்கு பெருமை சேர்ப்பார் உங்கள் மகன் என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

?மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் என் மகன் படிப்பில் ஆர்வமின்றி இருக்கிறான். சிலநேரம் படிப்பதாக சொல்கிறான். மறுநாள் மீண்டும் படிக்க மறுக்கிறான். இவ்வாறு முதல் வருடமும் ஓடிவிட்டது. மெக்கானிக்கல் துறையில் எனது மகனுக்கு படிப்பு வருமா அல்லது வேறு துறையா? எதிர்காலம் எப்படி அமையும்?

- ரமேஷ், பெரம்பலூர்.

கல்லூரியில் சேர்ப்பதற்கு முன்னால் எவருமே யோசிப்பதில்லை. மகனை இன்ஜினியர் ஆக்க வேண்டும் என்று எண்ணிய நீங்கள் அவரது விருப்பத்தினைக் கருத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டீர்கள். பூரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம், கும்ப ராசியில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் கல்வியைக் குறிக்கும் வித்யா ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பது அவரது கல்வி நிலையில் ஒருவித சோம்பல்தன்மையை உருவாக்கும். அதோடு உயர்கல்வியில் தடை உண்டாகும் என்பதையும் தற்போது நடந்து வரும் சனி தசையின் காலம் உணர்த்துகிறது. எனினும் ஜென்ம லக்னத்தின் மீது குருவின் பார்வை பலம் விழுவதும் தொழில் ஸ்தானத்தில் சூரியனும், ராகுவும் இணைந்திருப்பதும் இவரை உயர்ந்த உத்யோகத்தில் அமரச் செய்யும். தற்போது 24.07.2020 வரை நேரம் சரியாக இல்லை.

அதுவரை அவரது கல்வி நிலை என்பது சற்று மந்தமாக இருக்கும். அதன்பிறகு நேரம் நன்றாக இருந்தாலும் இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டிய மாணவர் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தற்போது முதலாம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளதால் அதே கல்லூரியில் அவருக்கு பிடித்தமான பிரிவிற்கு மாற்றிக் கொள்ள இயலுமா என்பதை விசாரித்துப் பாருங்கள்.

இயலாவிட்டால் ஒரு வருட காலம் வீணாகப்போனாலும் பரவாயில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு இந்த கல்வியாண்டிலாவது அவரை அவருக்குப் பிடித்தமான கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிற்கு மாற்றிவிடுங்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவினில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் அவரால் அந்தத்துறையில் நன்கு சாதிக்க முடியும். மேற்படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் நன்றாக உள்ளது. அவரது ஜாதகத்தில் சுக்கிரனின் பலமும் கூடியிருப்பதால் கிராஃபிக்ஸ், வெப் டிசைனிங் போன்ற துறைகளும் நன்றாக கைகொடுக்கும். மீடியாவில் சாதிக்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. வெளிநாட்டு உத்யோகமும், கௌரவம் நிறைந்த வாழ்க்கையும் காத்திருக்கிறது என்பதையே உங்கள் மகனின் ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

?என் மகனுக்கு வயதிற்கேற்ற புத்தியோ விவரமோ கிடையாது. படிப்பும் ஏறவில்லை. வேலைக்கு அனுப்பியும் அடிக்கடி தூங்கிக்கொண்டே இருக்கிறான் என்று வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்கள். மனநல மருத்துவரை அணுகினேன். பலன் இல்லை. என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

- உமாமகேஸ்வரி, கடலூர்.

ஜென்ம லக்னத்தில் உள்ள கேதுவும், ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் சனியும் இதுபோன்ற ஸ்திரமற்ற புத்தியைத் தருகிறார்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி அவரது 23வது வயதில் இருந்து நல்லகாலம் பிறக்கிறது. அதுவரை அவரை குழந்தைபோல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அவரது ஜாதகத்தைப் பொறுத்த வரை கொடிபோல படரும் அமைப்பு உள்ளது. ஒரு கொடியானது நன்கு வளர ஒரு ஊன்றுகோல் எவ்வாறு தேவையோ, அதுபோல அவரது வாழ்வு சிறக்க தக்க துணை தேவை. அவரது ஜாதகத்தில் பித்ரு ஸ்தானத்திற்கு உரியவர் குரு பகவான் என்பதால் தந்தை ஆகிய உங்கள் கணவர்தான் அவருக்கு குருவாக இருந்து அவரை நல்வழிப்படுத்த இயலும். தந்தை எப்பொழுதும் தனக்கு அருகாமையிலேயே அவரை வைத்துக்கொண்டு அவருக்குப் பிடித்தமான வேலையை மட்டும் செய்யவைத்து பழக்கி வரச் சொல்லுங்கள்.

உங்கள் மகனின் ஜாதகப்படி அவருக்கு ஓவியம் வரைகின்ற திறமை உண்டு. நம் கண்களுக்கு அவர் ஏதோ கிறுக்குவது போல் தோன்றினாலும் கொஞ்சம், கொஞ்சமாக அந்தத் திறமை மெருகேறி அவர் நன்றாகப் புகழ் பெறுவார். உங்கள் கணவரின் பரம்பரையில் யாரோ ஒருவருக்கு ஓவியம் வரைகின்ற திறமை இருக்க வேண்டும், ஏன் உங்கள் கணவருக்கே கூட அந்த திறமை இருக்கலாம். ஆனால், அதனை ஒரு தொழிலாகச் செய்யாமல் தவிர்த்திருக்கலாம். உங்கள் மகனைப் பொறுத்தவரை அவனது சம்பாத்தியம் என்பது இந்த ஓவியம் வரைகின்ற கலையை வைத்தே அமையும். தற்காலத்திய சூழலில் இந்த கலையை வைத்து சம்பாதிக்க இயலுமா என்றெல்லாம் எண்ணி மகனின் வாழ்வினைப் பாழாக்காமல் அவரது முயற்சிக்குத் துணையாக நின்று அவரை ஊக்குவியுங்கள்.

அதனை விடுத்து லேத் பட்டறை, மெக்கானிக் ஷெட் போன்ற வேலைகளுக்கு உங்கள் மகனை அனுப்புவதால் எந்தவித பயனும் உண்டாகாது. மாறாக அவரது வாழ்வு வீணாகிவிடும். உங்கள் மகனின் திருமண வாழ்வும் நன்றாக உள்ளது. நல்ல குணவதியான பெண் அவரது மனைவியாக அமைந்து வாழ்விற்கு ஒளியூட்டுவார். 23வது வயது முதல் உங்கள் மகனின் வாழ்வு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை அவரது ஜாதகத்தைக் கொண்டு அறிய முடிகிறது.

?காதல் திருமணம் செய்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் என் மனைவி விவாகரத்து வாங்கும் மனைநிலையில் உள்ளார். அவரது அம்மா மற்றும் திருமணம் ஆகாத அக்கா ஆகியோரின் ஆலோசனையின்படி தாய்வீடு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. என் மனைவியுடன் சேர்ந்து வாழும் அமைப்பு எனக்கு உள்ளதா அல்லது அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிடலாமா? எனது ஜாதக பலம் எவ்வாறு உள்ளது?

- ஈஸ்வர், பெங்களூரு.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந்துள்ள உங்கள் மனைவிக்கும், பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியைச் சேர்ந்த உங்களுக்கும் பொருத்தம் என்பது நன்றாக உள்ளது. ஜாதக ரீதியான பொருத்தங்களும் நன்றாகவே அமைந்துள்ளன. அவரது ஜாதகத்தில் குறையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுடைய ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சனிபுக்தி நடந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்த சந்தோஷத்தில் என்ன பேசுகிறோம் என்பதனை அறியாமல் அவரது குடும்பத்தாரைப் பற்றி நீங்கள் சொன்ன வார்த்தைகள் அவர் மனதினைப் புண்படுத்தியிருக்கிறது. உங்கள் மீதான தவறான கருத்தினையும் அவரது மனதில் தோற்றுவித்துள்ளது. உங்கள் திருமணத்தை விரும்பாத அவரது பிறந்த வீட்டார் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் செயல்படுகிறார்கள்.

இந்தப்பிரச்னையை இப்படியே வளரவிடாமல் தடுப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. மனைவியோடு மனம் திறந்து தனிமையில் பேசுவதற்கு அவரிடம் ஒரு வாய்ப்பு கேளுங்கள். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் அம்மன் கோயிலில் அமர்ந்து உங்கள் மனைவியுடன் மனம் திறந்து பேசுங்கள். நீங்கள் அவருடன் இணைந்து வாழ்வதுதான் உங்கள் இருவரின் எதிர்காலத்திற்கும் நல்லது. 12.08.2020ற்குப் பின் உங்கள் மனைவி உங்களை முழுமையாகப் புரிந்துகொள்வார். ஆயிரம் காலத்துப் பயிரான இந்த திருமண பந்தம் என்பது மிகச்சிறப்பாகவே அமைந்துள்ளது என்பதையே உங்கள் இருவரின் ஜாதகங்களும் உணர்த்துகின்றன.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

ஆன்மிகம், தபால் பை எண். 2908,

மயிலாப்பூர், சென்னை - 600 004

தொகுப்பு: சுபஸ்ரீ சங்கரன்

Related Stories: