சிறப்பான வாழ்வருளும் சிவகாமசுந்தரி

தமிழக சக்தி பீடங்கள்

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். தரிசிக்க முக்தி தரும் தலம் பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம். ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம். அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாகக் காட்சி தரும் தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம். சைவர்களுக்கு கோயில் என்று அறியப்படும் தலம்.

இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு ராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது. கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிற்பங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

 சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது. சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம், 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. மூன்றாம் பிராகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நதி ஒரு தனிக்கோயிலாக பிராகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கைக் குளத்தருகே எனும் பாடலின் நாயகி இந்த சிவகாமசுந்தரி.

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

ஆலயத்திற்கு ஒரு  கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தில்லை காளியன்னைக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை. காளியன்னையை குங்குமம் கொண்டு சிவக்கச் செய்திருக்கிறார்கள். அன்னையை வெண் உடையில் அலங்கரித்திருக்கிறார்கள்.

குங்குமமும், வெண்மையும் கலந்த காளியன்னை வெண்சிவப்பாய் ஒளிர்கிறாள். அருகில் வருவோரின் வாழ்வில் ஒளியூட்டுகிறாள். அவளின் சந்நதியில் சிறிது நேரம் நிற்க ஜென்மங்களாய் வந்த தீவினைகளை தன் அருட்பார்வை கொண்டு கணநேரத்தில் களைகிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து காளியின் முன்பு அமர பஞ்சாய் பாதிப்புகள் பறந்து போகும். இக்கோயில் மிகத்தொன் மையானது.

தில்லை அம்மனின் கருவறையைச் சுற்றி காணப்படும் கோஷ்ட மூர்த்திகள் அம்பிகையின் பல்வேறு சக்தி அம்சங்களைத் தாங்கி அழகிய சிலையாக, அருள் பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கின்றனர். தெற்கு பிராகாரத்தில் விநாயகப் பெருமான் ஏழு திருக்கரங்களுடன் அருளும் கோலம் பார்க்க அரிதாகும். நின்ற நிலையில் வீணை வாசிக்கும் கலைமகளின் சிற்பம் இத்தலத்து அற்புதம்.

மேலும் தட்சிணாமூர்த்தி கடம்பவன தட்சிணாமூர்த்தி எனும் திருப்பெயரில் பெண் வடிவில் திருவருட்பாலிப்பதும் அற்புதம். வடக்கு பிராகாரத்தில் துர்க்கையும், சண்டிகேஸ்வரியும் அருள் சுரக்கும் கண்களாய் காட்சி தருகிறார்கள்.சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 கி.மீ. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது.

Related Stories: