கரும்பன்ன வாழ்வருளும் கரும்பார்குழலி

ஐயர்மலை

தமிழக சக்தி பீடங்கள்

முசிறிக்கும் குளித்தலைக்கும் இடைப்பட்ட மலையே ரத்னாசல மலையாகும் (ஐயர்மலை). தமிழ் நாட்டின் சக்தி தலங்களில் இத்திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. மிக அழகிய சூழ்நிலையில் கோயில் கொண்டிருக்கிறாள் அம்பிகை. இங்கு கொலுவீற்றிருக்கும் நாயகி அராளகேசியம்மன், கரும்பார் குழலியம்மை என்றும் அழைக்கப்படுகிறாள். இத்திருத்தலத்தில் சிவபெருமான் காலையில் கடம்பர், மதியம் சொக்கர், மாலையில் திரு ஈங்கோய்மலைநாதர், அர்த்த சாமத்தில் சிம்மேசர் என்றழைக்கப் படுகிறார். மதியம் சொக்கர் என்றழைக்கப்படுவர் ரத்னாசல மலையில் வீற்றிருக்கும் ரத்னகிரீஸ்வரர். மேற்சொன்ன அடிப்படையில் இங்கு அமைந்துள்ள சிவாலயங்களை வழிபடுகின்றனர். ரத்னகிரீஸ்வரரை வாட்போக்கி நாதர், சொக்கர் என்றெல்லாம் அழைக்கின்றனர்.

ஆயிரம் நாமங்கள் அவருக்கு, அப்பொழுது தான் கூப்பிட்ட குரலுக்கு வந்து கை கொடுப்பார்.இவருக்கு அபிஷேகம் செய்யும்பால் உடனே கெட்டித்தயிராக மாறும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. இம்மலையின் மீது காகங்கள் பறப்பதில்லை. இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருட்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சிவனின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருப்பவை மிகக்குறைவு. அதில் ஒன்று திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 63 வது தேவாரத்தலம் ஆகும்.

வேப்பமரத்தின் குளிர் நிழலில் நமது சக்தி பீட நாயகி அருட் பாலிக்கின்றார். அபய வரத கரங்களும், பத்மம் தாங்கிய மேலிரு கரங்களுமாக கரும்பார் குழலி வீற்றிருக்கிறாள். இங்கு வருகை தரும் மாந்தர்கள் தங்கள் மாங்கல்யம் காக்க வேண்டி நிற்கின்றனர். வேண்டி நிற்போரின் குறை தீர்ப்பவளே நம் அன்னை. குமாரி எனும் திருப்பெயரில் இந்த சக்தி பீடமாம் ரத்னாவளி பீடத்தில் அரசாள்பவள் இவளது பெருமைகளை நாம் சொல்லிக்  கொண்டே போகலாம். குமாரி என்ற பெயருடன் இரத்னாவளி பீடத்தில் அமர்ந்த சிவ பைரவர் இரத்தினம்.

இவள் சூரபதுமன் முதலா அசுரர்களை அழித்த முருகனைத் தேவரும், மனிதரும் போற்ற ஈன்றவள். மகாமாயை. ஈசன் மகிழ முருகனுக்கு ஆயுதம் தந்து அருளியவள். அப்பெருங்கருணையை மனிதர் பெற்றிட ஐம்பத்தியோரு இடங்களில் நிலை கொண்டவள். அப்பெருங்கருணையை மனிதர்களும் பெற்றிய ஐம்பத்தோரு சக்தி பீடங்களிலும் பரவி நிற்பவள். நீலகண்டனின் உயிர். இவளே மதுரையில் மலயத்வஜபாண்டியன் மகிழ மீனாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், காஞ்சியிலே காமாட்சியாகவும் திருவருட்பாலிப்பவள். இந்த அம்பிகை ஈசனுடன் இணைந்து இந்த ரத்னாவளி பீடத்தில் ஜொலிக்கிறாள்.

மீளாத் துன்பத்தில் வாடிய தேவர்களை அசுரர்களின் சிறையிலிருந்து மீட்ட விரனாம் முருகனை உலகினுக்கு அளித்தவள். இத்தேவியை வணங்கி வழிபடுவோரின் துன்பம் துடைத்து காப்பவள். ஈஸ்வர ஜோதியுடன் இணைந்து இந்த ரத்னாவளி பீடத்தில் ஜொலிக்கிறாள், இப்பீட நாயகி. நாமும் இருகரம் கூப்பி வணங்குவோம். அம்பிகையின் கடைக்கண் பார்வை சிறிதே சிறிது பட்டாலும், அவர்கள் உலகம் முழுவதையும் ஒரு குடைகீழ் ஆள்வார்கள்.

அவன் தேவேந்திரனாகி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வான், தேவர்கள் அவனுக்கு ஏவல் புரிவர். மன்மதன் பார்த்துப் பொறாமை கொள்ளும் வகையில் பேரெழில் படைத்து, தேவதாஸிகள், அப்ஸரஸ்கள் போன்றோர் காதல் கொள்வர். அவன் வாக்குகளில் தாம்பூல நறுமணம் வீசும். அவர்கள் நித்ய யௌவனுத்துடன் வாழ்வர் என மூகர் தன் மூகபஞ்சசதியின் ஸ்துதி சதகத்தில் கூறியபடி கரும்பார் குழலி தன் பக்தர்களுக்கு மேற்சொன்ன பலன்கள் அத்தனையையும் தந்தருளும் ஸர்வசக்தி படைத்தவள். கரும்பார்குழலியின் பதமலர்கள் பணிந்து கரும்பைப் போல் இனிய வாழ்வு பெறுவோம். 

Related Stories: