குறைகள் களைவார் கோதண்டராமர்

புன்னை நல்லூர்

தனிச் சிறப்பு பெற்று விளங்கும் ராமர் கோயில்களில் ஒன்று தஞ்சை அருகே புன்னைக்காடு என்ற புன்னை நல்லூரில் உள்ளது. பெயர் கோதண்டராமர் திருக்கோயில். தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னரான பிரதாபசிங் ராஜாவால், சமுத்திரத்தின் வடகரையில் கட்டப்பட்டது. கலை நுணுக்கத்துடனும், திருப்பொலிவோடும் கூடிய பல்வேறு சிற்பங்களும், வானளாவிய 5 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது.

 அழகிய வட்டக்கல்லின் மேல் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தின் அடிப்பகுதியில் கிழக்குப் பக்கம் சீதை,  ராமருடன் லட்சுமணரும், தெற்குப் பக்கம் சங்கும், மேற்கு பக்கம் நாமமும், வடக்குப் பக்கம் சக்கரமும் அழகிய வேலைப்பாட்டுடன் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் உட்புற சுவர்களில் கருடாழ்வார், ஆஞ்சநேயருடன், ராமர் பட்டாபிஷேக காட்சிகள் தஞ்சை பாணி ஓவியங்களாக வரையப்பட்டுள் ளன. பெரும் சக்தி வாய்ந்த கருடாழ்வார் தம்மை வேண்டுவோர் அனைவருக்கும் அருட்பாலிக்கும் விதமாக  கொடிமரத்தின் அருகிலேயே அமைந்துள்ளார். அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் முன்பு துவார பாலகர்களும், தென்புறத்தில் விஷ்வக்சேனரும் எழுந்தருளியுள்ளனர்.

தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர்களின் நிர்வாகத் திறமையையும், பக்தி நெறியையும் பாராட்டும் விதமாக ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என விரும்பிய நேபாள மன்னர் ஒருவர், சாளக்கிராம கல்லினால் ஆன ராமர், லட்சுமணர், சீதாதேவி, சுக்ரீவன் ஆகிய திருவுருவங்களை வழங்க, அவையே மூலவர்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ராமனின் தாமரை மலர் போன்ற திருமுக மண்டலம், மணிகள் அசைந்தாடி சிற்றொலி எழுப்பும் வளைந்த கோதண்டத்தை லாவகமாக கையில் ஏந்தியிருக்கும் எழிற்பாங்கு, மூன்று வளைவுடன் கூடிய திருமேனி ஆகியவை பக்தி உணர்வுடன் கலை உணர்வையும் தூண்டி நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வலப்புறம் சாமுத்ரிகா லட்சணத்துடன் சீதாதேவியும், இடப்புறம் அண்ணன் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட இளவல் லட்சுமணனும், சுக்ரீவனும் சாளக்கிராம கல்லில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்திலிருந்து ராமர், சீதாதேவி,  பூதேவி ஆகியோர் பூமியிலிருந்து உற்சவர்களாக தோன்றினர். அவர்கள் புன்னைநல்லூருக்கு கொண்டு வரப்பட்டனர். மூலவர் மூர்த்திகளின் அருகிலேயே இவர்கள் வைக்கப்பட்டனர். இந்த உற்சவ மூர்த்திகளின் அருகிலேயே லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் திருவுருவங்களும் உற்சவ மூர்த்திகளாய் எழுந்தருளியிருக்கின்றன. மனக்குறையோடு இந்த கோதண்டராமரிடம் வருவோர், அவரை தரிசித்த அந்தக் கணமே குறைகள் நீங்கியவராய், மனம் தெளிந்து செல்வது இத்தலத்தின் அருள் நடைமுறையாக உள்ளது. தஞ்சாவூர் - நாகை சாலையில் தஞ்சாவூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் புன்னைநல்லூர் உள்ளது.

- ஆ. அன்னவயல்

Related Stories: