சரும நோய் தீர்க்கும் நாகராஜர்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் நாகர்கோவில். பெயர் வர காரணம் நகரின் மையத்தில் இருக்கும் நாகராஜா கோயில் தான். இங்கு மூலவர் நாகராஜாவுக்கு கருவறை ஓலை கூரையால் வேயப்பட்டிருக்கும். இந்த நாகராஜரை வழிபட்டால் சரும நோய்கள் விலகும்.

தற்போதைய களக்காடு முதல் குமரி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் அடங்கிய வேணாட்டை மன்னர் பூதல வீர உதயமார்த்தாண்டர் ஆட்சி செய்து வந்தார். இவர் ஒரு சமயம் சரும நோயால் அவதிப்பட்டு வந்தார். பல வகைகளில் வைத்தியம் பார்த்தும் மன்னரின் நோய் குணமாகவில்லை.
Advertising
Advertising

ஒரு அடியாரின் ஆலோசனையின் பேரில் நாகர்கோவில் நாகராஜரை ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒன்பது வாரம் தொடர்ந்து வழிபட்டு வந்தார். அதன் பயனாக மன்னரின் சரும நோய் நீங்கியது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இக்கோயிலின் கருவறைக்கு பின்புறம் உள்ள இடத்தில் தொழு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உடைய ‘ஒடி வள்ளி’ என்னும் மூலிகை செடி இருந்தது என்றும், இதன் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவை கொண்டது என்றும் கூறப்படுவதுண்டு.

அர்த்த மண்டப நுழைவு வாயிலில் உள்ள ஐந்து தலை பாம்பு சிற்பத்தில் தீர்த்தங்கரரின் உருவமும், முக்குடையும் உள்ளன. கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் ‘மகாமேரு மாளிகை’ என்று அழைக்கப்படும் தெற்குவாசல், கோயிலின் நுழைவு வாயிலாக உள்ளது. இவ்வழியாகத்தான் பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர். நாகர்கோவில் நகராட்சியின் முத்திரை சின்னமாக மகாமேரு மாளிகை பயன்படுத்தப்படுகிறது.  இக்கோயிலின் மூலவர் நாகராஜர். இவரை நாகரம்மன், நாகராஜர் என அழைக்கின்றனர். நாகராஜர் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டிருப்பது சிறப்பான அம்சமாகும்.

அக்கூரையில் எப்போதுமே ஒரு பாம்பு காவல் புரிகிறது என்றும் வருடந்தோறும் ஆடி மாதம் கூரை புதிதாக வேயப்படும்போது ஒரு பாம்பு வெளிவருவது வழக்கம் என்றும் சொல்கிறார்கள். மூலவர் அமைந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருக்கிறது. மூலவர் இங்கு தண்ணீரிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றிலிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோயிலின் முக்கிய பிரசாதமாகும். இது ஆறு மாதகாலம் கருப்பு நிறமாகவும், ஆறு மாதகாலம் வெள்ளை நிறமாகவும் மாறிவருகிறது. அதாவது தை முதல் ஆனி வரை வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி வரை கருப்பு நிறமாகவும் இருக்கும்.

எத்தனையோ ஆண்டுகளாக அவ்விடம் இருந்து பிரசாதம் எடுத்தும் அட்சயப்பாத்திரம் போன்று அந்த மண் குறையாமல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது அதிசயம். இக்கருவறையில் விமானமும் கிடையாது. பீடமும் கிடையாது. பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் உட்கோயில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் உள்ளன.

நாக தோஷம், ராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திகளும் இங்கு பெறலாம்.

இந்த ஆலயத்தில் நாகராஜர் சந்நதிக்கு வலதுபுறம் அனந்த கிருஷ்ணர், காசி விஸ்வநாதர் சந்நதிகள் உள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜை முடிந்த பின், இவர்களுக்கு பூஜை நடக்கும். அர்த்தஜாம பூஜையில் மட்டும், அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை செய்வார்கள். இந்த கோயிலில் பிரதான மூலவர், நாகராஜர் என்றாலும் கூட அனந்த கிருஷ்ணருக்கு தான் கொடி மரம் உள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள அனந்தகிருஷ்ணர், மூலிகைகளால் உருவானவர் ஆவார். இதனால் அபிஷேகம் கிடையாது.  நாகராஜருக்கு பாம்பு மேக்காட்டு இல்லம் என்ற குடும்பத்தினரே பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வருகிறார்கள். பாம்புகளை குழந்தைகள் போல் வளர்ப்பவர்கள் இவர்கள்.

ஆனால் அனந்தகிருஷ்ணருக்கு, பட்டதரி தந்திரி குடும்பத்தினர் தான் பூஜைகள் செய்வார்கள். பெருமாள் கோயில்களில் உள்ள கொடி மரத்தின் உச்சியில் கருடனை தான் வடிவமைத்து இருப்பார்கள். ஆனால் இங்கு அனந்த கிருஷ்ணர் கொடி மரத்தில் ஆமையை வடிவமைத்து உள்ளனர். பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனை இங்குள்ள கொடி மரத்தில் வடிக்கவில்லை என்பது ஐதீகமாக கூறப்படுகிறது. விசேஷ காலங்களிலும், மாதாந்திர ஆயில்ய நட்சத்திர  நாட்களிலும் அனந்த கிருஷ்ணர் ஆமை வாகனத்திலேயே புறப்பாடாகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்த போது மகா விஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் ஆமையை வடிவமைத்ததாக சொல்கிறார்கள்.

தை மாதத்தில பிரமோற்சவம் அனந்தகிருஷ்ணருக்கே நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தை பூசத்தன்று அனந்தகிருஷ்ணர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளுவார். இந்த ஆண்டிற்கான தேரோட்டம் இம்மாதம் 8ம் தேதி நடக்கிறது. இந்த ஆலயத்தில், ஆகம பூஜை முறைகள் சைவம் மற்றும் வைணவம் அடிப்படையில் நடைபெறுகிறது.  நாகராஜரை தரிசனம் முடித்து விட்டு காசி விஸ்வநாதரையும், பின்னர் அனந்தகிருஷ்ணரையும் தரிசித்தால் எல்லா வித நன்மைகளும் வந்து சேரும்.

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டு சென்றால் தோஷம் நிவர்த்தியாகிறது. கோயில் வளாகத்தில் அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடகன், குளிஜன், பத்மன் ஆகிய ஒன்பது நாகர் சிலைகளும் இடம்பெற்றுள்ளன.

நாகராஜாவுக்கு ஆவணி மாதம் கடைசி ஞாயிற்று கிழமை சிறப்பு வாய்ந்ததாகும். ஆவணி மாதம் நாகராஜா கோயில் வழிபாடு வரக்காரணம் ஆவணி மாதம் இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம். சாரல் மழை பெய்யும். இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் பாம்புக்கு பயந்து நாகர் வழிபாட்டை ஆவணி மாதம் தொடங்கினர்.

மேலும் கேரளத்தில் மலையாள ஆண்டு தொடக்கம் ஆவணி மாதம் முதல் தேதி. அந்த வகையிலும் நாகர் வழிபாடு தொடங்கியிருக்கலாம். ராகுவிற்கு பரிகாரம் நாகர் வழிபாடு தான். அதுவும் ஞாயிற்றுக்கிழமை தான். அதனால் தான் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை நாகராஜா வழிபாடு உருவானது.

இக்கோயிலின் மூலவர் நாகராஜர்தான். இருப்பினும் கோயில் பரிவார தெய்வமாக தனிச்சந்நதியில் அருளும் அனந்த கிருஷ்ணரே உற்சவராக வலம் வருகிறார். தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருள்வதும் அவரே. நாகராஜா கோயில், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

படங்கள் : ஆர்.மணிகண்டன்

Related Stories: