உன் மகிழ்ச்சியே மனிதரை வாழவைக்கிறது

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘திராட்சை ரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும். போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும். அவற்றில் நாட்டம் கொள்பவர் மடையரே! சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்ய மாட்டார். அவர் அறுவடை காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார். மனிதர் மனதில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது. மெய்யறிவு உள்ளவரே அதை வெளிவரச் செய்வார்.’’ - (நீதிமொழிகள் 20: 1,4,5)

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புகிறோம். ஆனால், மகிழ்ச்சி எது? எங்கே இருக்கிறது? எப்படி கிடைக்கும்? இந்த கேள்விக்குத்தான் விடை தெரியவில்லை. சும்மா இருப்பதே சுகம் என்பது சிலர் எண்ணம். ஆனால், சோம்பேறித்தனம் வாழ்க்கையில் வெறுப்பைத்தான் வளர்க்கும். எப்படியாவது, யாரையாவது ஏமாற்றி வெற்றி பெறுவதே சுகம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் மனமே அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை.

போதையே மகிழ்ச்சி என்று இன்றைய இளையதலைமுறைகூட நம்பிக்கெடுகிறது. போதை மருந்துகள், புகை பிடித்தல், புகையிலை போடுதல் போன்றவை உடம்பை முறுக்கேற்றிக் கெடுக்கின்றன. உடம்பு சீரழிகின்றது. மனம் மகிழ்ச்சி பெறுவதில்லை. உண்மையான மகிழ்ச்சி எங்கேதான் இருக்கிறது? நாமெல்லாம் ஒன்றுகூடி உழைப்பதிலும், உழைப்பின் பலனை ஒன்று கூடி அனுபவிப்பதிலும்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. கூடி உழைப்போம், கூடி சுவைப்போம், கூடி மகிழ்வோம்.‘‘உன் உள்ளத்திற்கு வருத்தம் விளைவிக்காதே; உன் திட்டங்களால் உன்னையே துன்பத்துக்கு உட்படுத்தாதே; உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது; அகமகிழ்வே மானிடரின் வாழ் நாளை வளரச்செய்கிறது; உன் உள்ளத்திற்கு உலகையூட்டு; உன்னையே தேற்றிக்கொள்; வருத்தத்தை உன்னிடமிருந்து தொலைவில் விரட்டி விடு; வருத்தம் பலரை அழித்திருக்கிறது. அதனால், எவ்வகைப் பலனுமில்லை. பொறாமையும், சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும்; கவலை உரிய காலத்திற்கு முன்பே முதுமையை வருவிக்கும். மகிழ்ச்சியான நல்ல உள்ளம்

உணவுப் பொருள்களை சுவைத்து இன்புறுகிறது.’’ - (சீராக 30: 21-25)

நான் யார்? இந்த உலகம் எப்படிப்பட்டது? என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியில் எப்போதும் ஈடுபட்டிருங்கள். இந்த உண்மையான சிந்தனை நமக்கு ஞானத்தைத் தருகிறது. ‘நான் யார்’ என்று நாம் சிந்திக்கும்போது நமக்கு ஞானம் கிடைக்கிறது. மனமும் உங்களிடமுள்ள ஒரு கருவி. நீங்கள் மனம் அல்ல. நீங்கள் மனத்திலிருந்து வேறுபட்டு இருக்கிறீர்கள். உங்களிடம் கைவிளக்கு இருக்கிறது. அதுபற்றி உங்களுக்குத் தெரியும். கைவிளக்கு உங்களிடம் உள்ள ஒரு கருவி. அதை நீங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தலாம். உங்கள் உடலும் அதுபோன்றதுதான். இது உங்கள் கருவி. நீங்கள் இதிலிருந்து வேறுபட்டு இருக்கிறீர்கள். இதனை நீங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தலாம். உங்களை இந்த உடம்புடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் எங்கும் நிறைந்திருக்கிற அமரத்துவம் பெற்ற ஆத்மா. முதலில் நீங்கள் உங்களை அறிந்துகொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் உண்மை இயல்புக்கு உள்ள மதிப்பை அறிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மனிதகுலத்துக்குத் தொண்டு செய்ய முடியும். மக்கள் உயர்நலம் பெற உதவ முடியும்.

 

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: