அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

200. அம்ருத்யவே நமஹ (Amruthyave namaha)

 “பள்ளியில் ஓதிவந்த தன்சிறுவன் வாயில் ஓராயிரநாமம்

ஒள்ளியவாகிப் போத ஆங்கதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலன் ஆகிப்

பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப் பிறையெயிற்று அனல்விழிப் பேழ்வாய்

தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே”

என்பது திருமங்கையாழ்வாரின் பாசுரம். அசுர குருமார்களான சண்டன், மர்க்கனிடம் பாடம் பயின்று வந்த பிரகலாதன், துளியும் அசுர சுவபாவம் இன்றி,  திருமாலின் திருநாமங்களைப் பாடுவதைக் கண்டு திகைத்துப் போனான் இரணியன். ஆணவமும் இரக்கமின்மையுமே வடிவெடுத்தவனாக இருந்த இரணியனால்,  தனது மகன் பிரகலாதன் பக்தியும் ஞானமுமே வடிவெடுத்தவனாக இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. “நாராயணனை வணங்காதே! நான் தான்  கடவுள்! என்னை வணங்கு! நாராயணாய நமஹ என்று சொல்லாதே! ஹிரண்யாய நமஹ என்று சொல்!” என்றெல்லாம் இரணியன் பலமுறை அறிவுறுத்தியும்,  தொடர்ந்து பிரகலாதன் “நாராயணா! நாராயணா!” என்று சொல்லிக் கொண்டு திருமாலையே தியானித்து வந்தான். அதனால் மிகவும் ஆத்திரமடைந்த இரணியன்,  தன் மகனைத் துன்புறுத்தத் தொடங்கினான்.

ஆயுதங்கள் ஏந்திய நூற்றுக்கணக்கான அசுரர்களைக் கொண்டு வந்து நிறுத்திப் பிரகலாதனைப் பயமுறுத்தினான். “அம்ருத்யவே நமஹ” என்று மனதுக்குள் ஜபம்  செய்து வந்த பிரகலாதன் அவர்களைக் கண்டு அஞ்சவில்லை. விப்ரசித்தி என்ற மாயாவியை அழைத்து, திகில் காட்சிகளையும் அச்சுறுத்தவல்ல  மனத்தோற்றங்களையும் காட்டிப் பிரகலாதனைப் பயமுறுத்தச் சொன்னான். ஆனால் “அம்ருத்யவே நமஹ” என்று ஜபித்து வந்த பிரகலாதன் அதற்கும்  அஞ்சவில்லை. இதனால் மேலும் கோபம் கொண்ட இரணியன், தன் அசுரப் படை வீரர்களை அழைத்து ஆயுதங்களால் தாக்கிப் பிரகலாதனைக் கொல்லச்  சொன்னான். அவர்கள் ஆயுதங்களால் தாக்கிய போதும், “அம்ருத்யவே நமஹ” என்று ஜபம் செய்து வந்த பிரகலாதன் மேல் ஒரு சிறு காயம் கூட  ஏற்படவில்லை. எட்டு யானைகளை விட்டுப் பிரகலாதனை மிதிக்கச் சொன்னான் இரணியன். ஆனால் திருமாலின் திருநாமம் யானையை விட  வலிமையானதாயிற்றே!

அதனால் “அம்ருத்யவே நமஹ” என்று ஜபித்த பிரகலாதனின் நெஞ்சில் யானைகள் கால் வைத்தவாறே, யானைகளின் கால் எலும்புகள் முறிந்துவிட்டன.  பிரகலாதனை நெருப்பில் தூக்கி எறியச் சொன்னான் இரணியன். “அம்ருத்யவே நமஹ” என்று மீண்டும் ஜபம் செய்தான் பிரகலாதன். நெருப்பு அவனுக்குக் குளிர்  சாதனம் போல் இருந்தது. “உலகமே என்னைக் கண்டு அஞ்சுகிறது. ஆனால் எனது மகன் என்னைக் கண்டு அஞ்சவில்லையே!” என்று புலம்பினான் இரணியன்.  அப்போது அவனது மந்திரி ஒருவன், “மன்னா! தாங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டாம். உங்கள் மகன் உட்கொள்ளும் உணவோடு விஷத்தைக் கலந்து கொடுத்து  விட்டால் எளிதில் அவன் இறந்து விடுவானே!” என்று ஆலோசனை வழங்கினான். அவ்வாறே இரணியனும் பிரகலாதனின் உணவில் விஷம் கலந்தான்.  “அம்ருத்யவே நமஹ” என்று ஜபம் செய்தபடி அவ்வுணவை உட்கொண்டான் பிரகலாதன். அந்த விஷம் அவனை ஒன்றும் செய்யவில்லை.

‘ம்ருத்யு:’ என்றால் மரணம் என்று பொருள். ‘அம்ருத்யு:’ என்றால் மரணம் ஏற்படாமல் காப்பவர் என்று பொருள். பிரகலாதனுக்கு இரணியன் ஆபத்து  ஏற்படுத்திய போதெல்லாம் மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றியதால் நரசிம்மர் ‘அம்ருத்யு:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்  200-வது திருநாமம். நரசிம்மருடைய மந்திரங்களிலும் “ம்ருத்யோர்ம்ருத்யு: - மரணத்துக்கே மரணத்தை ஏற்படுத்துபவர்” என்று அவர் போற்றப்படுகிறார். நாமும் தினமும் “அம்ருத்யவே நமஹ” என்று ஜபம் செய்து நரசிம்மரை வழிபட்டு வந்தால், நோய்களற்ற நிம்மதியான நீண்ட ஆயுளைப்  பெறலாம். (200-வது திருநாமமான ‘அம்ருத்யு:’ முதல், 210-வது திருநாமமான ‘ஸுராரிஹா’ வரையுள்ள 11 திருநாமங்கள் நரசிம்ம அவதாரத்தை  விளக்கவந்தவை. மேற்கொண்டு நரசிம்மரின் பெருமைகளை அனுபவிப்போம்.)

201. ஸர்வத்ருசே நமஹ (Sarvadhrushe namaha)

இரணியன் தன் மகன் பிரகலாதனைக் கொல்ல எவ்வளவோ முயற்சிகள் செய்தான். எனினும் அசுரர்களின் ஆயுதங்களோ, பாம்புகளின் நஞ்சோ, ஆழ்கடலோ,  நெருப்போ எதுவும் பிரகலாதனுக்கு எந்த ஆபத்தையும் உண்டாக்காதபடி திருமால் அவனைக் காத்து வந்தார் என்பதை ‘அம்ருத்யு:’ என்ற திருநாம விளக்கத்தில்  கண்டோம். இவ்வாறிருக்க, பிரகலாதன், தான் நாராயண நாம சங்கீர்த்தனம் செய்வதோடு நில்லாமல், தன்னோடு குருகுலத்தில் பயிலும் மற்ற அசுரச்  சிறுவர்களையும் நாம சங்கீர்த்தனம் செய்ய வைத்தான்.

ஏற்கெனவே பிரகலாதனைக் கொல்ல முடியாமல் விரக்தியிலிருந்த இரணியன், இச்செய்தியைக் கேள்வியுற்றதால் மேலும் சீற்றம் கொண்டான். பிரகலாதனை  அழைத்து, “ஏ முட்டாளே! நான் தான் அனைத்து உலகங்களுக்கும் இறைவன். என்னை விட்டுவிட்டுத் திருமாலை வழிபடுகிறாயே! அந்தத் திருமால் எவ்வளவு  பெரிய கோழை தெரியுமா?” என்று கேட்ட இரணியன், தனது முந்தைய வரலாற்றைச் சொன்னான். “முன்பு என் தம்பி இரண்யாட்சனைத் திருமால் பன்றி  வடிவில் வந்து கொன்றுவிட்டான். அந்தத் திருமாலைப் பழி வாங்கியே தீருவேன் என்று நான் சபதம் செய்தேன். அவனைக் கொல்வதற்காக அவன் பள்ளி  கொள்ளும் இடமாகிய பாற்கடலுக்குச் சென்றேன். அங்கே மகாலட்சுமி, கருடன், விஷ்வக்சேனர் உள்ளிட்ட அனைவரும் இருந்தார்கள்.

ஆதிசேஷப் படுக்கையும் இருந்தது. ஆனால் அதில் திருமாலைக் காணவில்லை. திருமால் எங்கே என்று நான் கேட்டேன். என்னைக் கண்டு அஞ்சி திருமால்  எங்கோ சென்று ஒளிந்து கொண்டதாக அங்கிருந்தோர் கூறினார்கள். அனைத்து உலகங்களிலும் அவனை நான் தேடிவிட்டேன். ஆனால் அவனைக் காண  முடியவில்லை. இப்படி என்னைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்ட அந்தக் கோழையைத் தெய்வம் என்று என் முன்னால் சொல்லாதே! நான் தான் கடவுள்!”  என்றான் இரணியன். சிரித்தான் பிரகலாதன். “தந்தையே! திருமால் கோழையுமில்லை. உங்களுக்கு அஞ்சி அவர் எங்கும் ஒளிந்து கொள்ளவுமில்லை. உங்கள்  இதயத்தில் தான் அவர் அமர்ந்து கொண்டிருந்தார். ஆனால் உலகம் முழுக்கத் தேடிய நீங்கள் உங்கள் இதயத்தில் மட்டும் தேடவே இல்லை!” என்றான்.

“அறிவிலியே! உளறாதே! என் இதயத்துக்குள் எப்படி அந்தத் திருமாலால் நுழைய முடியும்?” என்று கேட்டான் இரணியன். “தந்தையே! உங்கள் இதயம்  மட்டுமல்ல! அனைவருக்குள்ளும் அனைத்துப் பொருட்களுக்குள்ளும் திருமால் உறைகிறார். நம் அனைவருக்குள்ளும் உறையும் திருமால் நாம் செய்யும்  அனைத்துப் பாப புண்ணியங்களையும் கண்காணித்து, அவற்றுக்கு ஏற்றபடி நமக்குப் பலன்களையும் அளிக்கிறார்! அதர்மம் தலைதூக்கும் போது தாமே அவதரித்து  அதை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவார்!” என்றான் பிரகலாதன். “மூடனே! அனைத்துப் பொருட்களுக்குள்ளும் திருமால் இருக்கிறான் என்றால், இதோ இந்தத்  தூணில் இருக்கிறானா?” என்று ஒரு தூணைக் காட்டிக் கேட்டான் இரணியன்.

“சாணிலும் உளன் ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட

கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற

தூணினும் உளன் நீசொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை

காணுதி விரைவின்…”

 “தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார், “கடவுள் இல்லை!” என்று சொன்னீர்களே, அந்தச் சொல்லிலும் கடவுள் உள்ளார்!” என்று விடைளித்தான்  பிரகலாதன். தன் கதையால் இரணியன் அந்தத் தூணைத் தட்ட அதைப் பிளந்து கொண்டு நரசிம்மர் தோன்றி இரணியனை வதம் செய்தார் என்பது வாசகர்கள்  அறிந்ததே. பிரகலாதன் சொன்னபடி அனைவருக்குள்ளும் உறைந்து, நம் அனைத்துச் செயல்களையும் கண்காணித்து, அதற்கேற்றபடி பலனளிப்பவராகத் திருமால்  திகழ்வதால், ‘ஸர்வத்ருக்’ என்று அழைக்கப்படுகிறார். ‘த்ருக்’ என்றால் காண்பவன். ‘ஸர்வத்ருக்’ என்றால் அனைத்தையும் காண்பவர் என்று பொருள்.  அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 201-வது திருநாமம். “ஸர்வத்ருசே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தீர்க்கமான கண் பார்வையை  நரசிம்மர் அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: