×

நவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்

முன்னீர்பள்ளம், நெல்லை

கி.பி.1120-22 ஆண்டுகளில் ஸ்ரீவல்லபன் என்ற மன்னரும் மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியனும், குலோத்துங்க சோழன் ஆட்சி செய்த காலத்தில் பாண்டிய நாட்டில் சிற்றரசர்களாக ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் இவ்வூர் 'ஜெயசிங்க நாட்டு கீழ்களக்கூற்றம்’ என்ற பெயரில் விளங்கியது. கி.பி. 1544-ஆம் ஆண்டு விஜயநகர மன்னன் அச்சுதராயன் காலத்தில் 'மன்னீர் பள்ளம் ் என்ற பெயர் பெற்று, தற்போது அது ஸ்ரீமுன்னீர்பள்ளம்’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவல்லப மன்னன் ஒருமுறை ஸ்தபதியை அழைத்து, தான் வழிபட ஒரு சிவலிங்கம் அமைத்துத்தர உத்தரவிட்டான். சிவலிங்கம் உருவாகியபோது அங்கு வந்த ஆண்டி ஒருவர் அதனைத் தனக்குத் தருமாறு கேட்டார். சிற்பி, 'இந்த சிவலிங்கம் அரசன் ஆணைப்படி உருவாவதால் என்னால் தர முடியாது’ என்று தன் இயலாமையை வெளிப்படுத்தினார். ஆண்டி அங்கிருந்து சென்றுவிட, பணி தொடர்ந்தது. பிறகு இரு சிவலிங்கங்கள் உருவான நிலையில், முன்னர் வந்த ஆண்டி மறுபடியும் வந்து, அந்த சிவலிங்கங்களில் ஒன்றைக் கேட்டார்.

சிற்பி இப்போதும் தர மறுக்கவே, ஆண்டி கோபம் கொண்டு தன் கையில் வைத்திருந்த மூலிகைச்சாற்றை அந்த இரு சிவலிங்கங்களின் மேலும் வீசினார். உடனே அவை இரண்டும் தீப்பிழம்பாகி விட்டன. இதனை அரசன் அறிந்து, அந்த ஆண்டி ஒரு சித்தராக இருக்க வேண்டும் என்று எண்ணி, அவரிடமே இந்த வினோத நடவடிக்கைகான காரணம் கேட்டான். அதற்கு அவர், சிற்பி தேர்வு செய்த கற்களில் தேரை இருப்பதாகச் சொன்னார். ேதரை ஓடிய கற்களைச் சிற்பி தேர்ந்தெடுத்திருக்க முடியாது என்று அரசனுக்குத் தெரிந்தாலும் அதை வெளியே சொல்லாமல் அந்தச் சித்தரிடமே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய உதவியை நாடினான்.

மன்னரின் வேண்டுகோளை ஏற்ற ஆண்டி, ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய நீர்நிலைகள் உள்ள இடங்களில் மூன்று சிவலிங்கங்கள் அமைத்து எழுந்தருளச் செய்தார். அவற்றை மன்னரிடம் கொடுத்து மறைந்தார். ஆண்டியாக வந்து இந்த நாடகத்தை ஆடியது இறைவன் சிவபெருமானே என்பதை உணர்ந்த மன்னன், பெருமானுடைய திருவுளம் கண்டு நெகிழ்ந்தான். அவர் கொடுத்த சிவலிங்கங்களில் ஒன்றைத் தன் பூஜைக்கும், மற்ற இரண்டையும் முன்னீர்பள்ளம் மற்றும் ஸ்ரீவல்லபன் என்று அமைக்கப்பட்ட 'தருவை’ என்ற சிற்றூரிலும் ஸ்தாபனம் செய்தான், இவ்விரண்டு ஊர்களிலும் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்வித்தான்.

முன்னீர்பள்ளத்தில் அமைந்தது பரிபூரண கிருபேஸ்வரர் ஆலயம். இந்தச் சிற்றூருக்கு அருகில் தருவை என்ற ஊரில் அமைந்தது 'ஸ்ரீவல்லப பாண்டீஸ்வரர்’ கோயில். பழமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பரிபூரண கிருபேஸ்வரரர் கோயில், சவுந்தர்ய கைலாயம்’ எனப்படுகிறது. இக்கோயில் மூலவர், கிழக்கு முகமாய் அமர்ந்து அருள் பாலிக்கிறார். தனி சந்நதியில் அம்பாள் பரிபூரண கிருபேஸ்வரி, தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவ்விரு சந்நதிகளுக்கும் மேல், எழிலார்ந்த விமானங்கள்!

இங்கு வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் முதலான பரிவார தெய்வங்களும் உள்ளனர். பரிபூர்ண கிருபேஸ்வரர் கோயிலில் உள்ள முன் மண்டபம், 'கைலாய மண்டபம்’ என அழைக்கப்படுகிறது. அங்கு திருமாலின் தசாவதார காட்சிகள், சீதை, ராமர், லட்சுமணர் அனுமான் ஆகியோரின் திருவுருவங்கள் மற்றும் தாயார் சகிதராகப் பள்ளிகொண்ட பெருமாளும் அருட்பாலிக்கின்றனர். தவிர ரிஷபாரூடர், பிட்சாடனர், அகோரபத்திரர், பதஞ்சலி, பிருங்கி சிற்பங்களும் இங்கு அமைந்துள்ளன.

இக்கோயிலில் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள நடராஜரும், அம்பிகையும் தம்பதி சகிதமாக அருட்பாலிக்கின்றனர். இத்திருக்கோயிலில் நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தம்பதி சகிதமாக காட்சி அளிக்கின்றனர். நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் மேலப்பாளையம் வழித்தடத்தில் இக்கிராமம் உள்ளது. கோயில் தொடர்புக்கு ஆர்.கண்ணன், ஆர். கணேசன், 9843569151, 9443539386ல் தொடர்பு கொள்ளலாம்.

- அ.தெய்வநாயகம்.
படங்கள்: ரா. பரமகுமார்

Tags : Navakraha Dosham ,Kripeswarar ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?