தேவகுருவின் அருளைப் பெறுவது எப்படி?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நவகிரகங்களில் முழு சுப கிரகமாக இருப்பவர் தேவ குரு என்று அழைக்கப்படும் வியாழ பகவான். தனுசு மற்றும் மீனம் ஆகிய வீடுகளுக்கு அதிபதியாக  இருப்பவர். புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ஆகிய நக்ஷத்ரங்களுக்கு சொந்தக்காரர். அதாவது மேற்சொன்ன நக்ஷத்ரங்களில் ஒருவர் ஜெனித்தால் அவரது  ஆரம்ப கால திசை என்பது குரு திசையாக இருக்கும். கடக ராசியில் குரு உச்ச பலமும் மகர ராசியில் குரு நீச பலமும் பெறுகிறார். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பலம் உண்டு. உதாரணமாக சனி பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடம் பலமாக இருக்கும். அதே போல் குரு  பகவானுக்கு பார்வை பலம் உண்டு.

குரு பகவானைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு முழு சுப கிரகம். தனகாரகன் - சுபகாரகன் - சந்தான காரகன் ஆகிய பெயர்களாலும் வழங்கப்படுகிறார்.  ஆரூடம் அல்லது பிரஸ்ணம் பார்க்கும் போது குரு பகவானையே பிரதானமாக எடுத்துக் கொள்வார்கள். பிருகு நந்தி நாடி முறையில் பலன் சொல்லும்  போது ஆணின் ஜாதகத்திற்கு குரு பகவானைத்தான் லக்னமாக கணிப்பார்கள். மேலும் ஒரு ஜாதகத்தில் குல தெய்வ அனுக்கிரஹத்தை குரு பகவானின் பலத்தை வைத்தே நிர்ணயம் செய்ய முடியும். ஒருவரது ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்று அழைக்ககூடிய பூர்வ புண்ணிய ஸ்தானம் பலவீனமாக இருந்தாலும் குரு பகவான் பலமாக இருந்தால் சந்தான பாக்கியத்திற்கு எந்த குறைவும் ஏற்படாது.

ஒவ்வொரு கிரகமும், தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாவது வீட்டினைப் பார்ப்பார்கள். சில கிரகங்களுக்கு மட்டும் சிறப்புப் பார்வைகள் உண்டு.  செவ்வாய் தான் அமர்ந்திருக்கும் வீட்டிலிருந்து நான்கு - ஏழு - எட்டாம் வீட்டினைப் பார்ப்பார். குரு பகவான், தான் எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறாரோ  அங்கிருந்து ஐந்து - ஏழு - ஒன்பது ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பார். சனி பகவான் தான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அவர் தனது பார்வையை மூன்று -  ஏழு - பத்து ஆகிய ஸ்தானங்களில் பார்வையை செலுத்துவார்.

தற்போதைய சூழ்நிலையில் குரு பகவான் விருச்சிக ராசியில் இருக்கிறார். அவர் தனது பார்வையை ரிஷபம் - கடகம் - மீனம் ஆகிய ராசிகளில்  செலுத்துகிறார். இதில் மேஷம் - மிதுனம் - கன்னி - தனுசு ஆகிய ராசிகளுக்கு குரு பகவான் மறைந்திருக்கிறார். ஆனாலும் குரு பகவான் தனது  பார்வையின் மூலம் மேற்சொன்ன ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அளிக்கிறார். இருப்பினும் குரு பகவான் மறைந்திருந்தால் அதற்கு தகுந்தாற் போல் பரிகாரம் செய்து கொண்டால் நமக்கு அவரின் அருள் கிடைக்கும் என்பது உறுதி. எனவே மேற்சொன்ன ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது  அவசியமாகிறது.  ஒரு ஜாதகத்தில் குரு பகவான் பலம் குன்றி காணப்பட்டாலும் இங்கு நாம் சொல்லப் போகும் பரிகாரங்களை செய்து கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் பரிகாரம் என்பது நவக்கிரகங்களில் இருக்கும் குருவிற்குதானே தவிர சிவன் கோயிலில் வலம் வரும் போது தெற்கு  நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு அல்ல. சில இடங்களில் குரு பகவானுக்கு தனி சந்நதி இருந்தால் அங்கும் நாம் சொல்லப் போகும் பரிகாரங்களை செய்து பயன் பெறலாம். சித்தர்கள் சமாதி அல்லது சித்தியடைந்த இடங்களுக்குச் சென்று தியானம் செய்வதன் மூலம் குருவின்  அருளைப் பெறுவதோடு சித்தர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். தினமும் முன்னோர்களை வணங்குவதாலும் குருவின் அருள் கிட்டும். ஆதிகுருவான  முருகனை வணங்குவது - கந்தனுடைய க்ஷேத்திரங்களுக்கு செல்வது நல்ல பரிகாரம். யானைக்கு உணவு கொடுப்பது நல்ல பரிகாரம்.  

வியாழக்கிழமைதோறும் வீட்டில் வாசற்படிக்கு மஞ்சள் பூசி வழிபடுவதால் நேர்மறை எண்ணங்கள் உருவாகி நினைத்த காரியங்களை செய்ய முடியும். வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் (காலை 6 - 7, மதியம் 1 - 2, மாலை 8 -9) குருவிற்குகொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடலாம். மஞ்சள்  ஆடைகளை பயன்படுத்தும் போதும் குருவின் அருள் கிடைக்கும். அதே போல் மஞ்சள் கனகபுஷ்பராக ராசிக்கல் அணிவதும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.  மஞ்சள் வஸ்திரத்தை தானம் கொடுப்பதால் குருவின் அருட்பார்வையைப் பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. எந்த தெய்வத்தின் அபிஷேகத்திற்கும்  மஞ்சள் பொடி கொடுப்பது மிகச் சிறந்த பரிகார முறையாகும்.

தினமும் நெற்றியில் நயம் மஞ்சளை திலகமிட்டுச் செல்ல எண்ணிய காரியம் கை கூடும்.  சந்தான பாக்கியம் இல்லாதவர்கள் குரு ஹோரையில் அதற்கான முயற்சிகளை செய்யும் போது குருவின் அருளால் தடைகள் அகலும். வீடு மனை  வாங்குவதற்கு இருக்கும் தடைகளை விலக்க தினமும் சிவன் ஆலயத்தில் இருக்கும் குருவிற்கு நெய் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். ”ஓம்ஸ்ரீகுருப்யோ  நம!” என்ற மந்திரத்தை தினமும் குளித்தவுடன் 11 முறை சொல்லவும். அதே போல் “ஓம் வ்ருஷபத்ஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு  ப்ரசோதயாத்!” என்ற மந்திரத்தையும் தினமும் 11 முறை சொல்லலாம்.  எந்த பரிகாரத்தையும் ஆத்மார்த்தமாக செய்வதன் மூலம் குருவின் அருளைப்  பெறலாம்.

Tags :
× RELATED சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ...