நலம் தரும் திதிகளும் அவற்றின் பலன்களும்...

ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கடல் போன்ற ஒரு கலையாகும் ஜோதிடக் கலையை கற்றுக் கொள்வதற்கு அனைவருக்குமே ஆர்வம் இருந்தாலும், எல்லோராலும் தலை சிறந்த ஜோதிடர் ஆகிவிட முடியாது. அப்படி ஒருவர் ஜோதிடர் ஆக முடியாவிட்டாலும், ஜோதிட சாஸ்திரம் கூறும் சில இரகசிய விடயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் செயல்படுவதால் வாழ்வில் எல்லா வகையான இன்பங்களையும் பெற முடியும். அந்த வகையில் ஜோதிடத்தில் ஒவ்வொரு நாளும் கூறப்படுகின்ற திதிகள் பற்றியும், அந்த திதி தினத்தில் என்ன செய்தால் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

இடி என்பது சந்திரனுக்குரிய தினமாகும். ஒரு மாதத்தில் 30 திதிகள் வருகின்றன. இதில் அமாவாசை தொடங்கி வருகின்ற 15 திதிகள் வளர்பிறை திதிகள் ஆகும். பௌர்ணமி தொடங்கி வருகின்ற 15 திதிகள் தேய்பிறை திதிகள் ஆகும். ஒவ்வொரு திதிகளுக்கும், ஒரு அதிதேவதை உண்டு. அந்த திதி தினங்களில், அத்திதிகளுக்குரிய தேவதைகளை வணங்கி விட்டு, அதில் குறிப்பிட்டுள்ள காரியங்களில் ஈடுபடுவதால் நன்மையான பலன்களை பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அறிவுரையாகும்.

பிரதமை திதி : இந்த பிரதமை திதிக்கு அதி தேவதை அக்னி பகவான் ஆவார். வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் புது வீடு கட்டுவாதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.

துவிதியை திதி: அரசாங்கம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள் வாங்கி அணியலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். கோயில்களில் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம். இந்த திதிக்கு அதிதேவதையாக பிரம்ம தேவன் இருக்கிறார்.

திருதியை திதி : இந்த திதியின் அதிதேவதை கௌரி எனப்படும் பராசக்தி ஆவார். இந்த திதியில் குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சங்கீதம் கற்க தொடங்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அலங்கரித்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.

சதுர்த்தி திதி: எமதருமன், விநாயகப் பெருமான் ஆகிய இருவரும் இந்தத் திதிக்கு அதிதேவதைகளாக இருக்கின்றனர்முற்காலத்தில் மன்னர்கள் பிற நாடுகளின் மீதான படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுத்தனர். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்ய உகந்த திதி இது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நீங்கும்.

பஞ்சமி திதி: அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதைகள் ஆகின்றனர். எனவே நாக வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபட நாக தோஷம் நீங்கும். நாக பஞ்சமி விசேஷ தன்மை கொண்ட திதியாகும்.

சஷ்டி திதி : இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் எனப்படும் முருகப்பெருமான் ஆவார். சஷ்டி என்றால் ஆறு என்பது பொருள். ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நன்மைகள் ஏற்படும். நன்மக்கட் பேறு உண்டாகும். சிற்பம், வாஸ்து போன்ற காரியங்களில் ஈடுபடலாம். புதிய ஆபரணங்கள் தயாரிக்கலாம். புது வாகனம் வாங்கலாம். புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். Sivanmalai

சப்தமி திதி: இந்த திதியின் அதிதேவதை சூரிய பகவான் ஆவார். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான நன்மைகளை தரும். தொலைதூர பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ள சிறந்த திதி இது. திருமணம் செய்யலாம். புதிய இன்னிசை சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். புதிய ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

அஷ்டமி திதி: இதன் அதி தேவதை ருத்திரன் எனப்படும் சிவ பெருமான் ஆவார். வீடு மற்றும் தங்களுக்கான அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதிய தளவாடம் வாங்கலாம். நாட்டியம் பயில்வதற்கும் சிறந்த திதியாகும்.

நவமி திதி: இந்த திதிக்கு அம்பிகை அதிதேவதை ஆவாள். எதிரிகள் பயத்தை போக்கும் திதி இது. தீமையான விடயங்கள் அனைத்தையும் ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபட சிறந்த திதி இது.

தசமி திதி: இந்தத் திதிக்கு எமதருமன் அதிதேவதை ஆவார். அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு மிகவும் ஏற்ற திதி இது. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.

ஏகாதசி திதி : இந்த திதிக்கும் ருத்ரன் எனப்படும் சிவன் அதிதேவதை ஆவார். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிற்பம் செதுக்குதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

துவாதசி திதி : அதிதேவதை விஷ்ணு பகவான் ஆவார். பொதுவாக மதச்சடங்குகளில் ஈடுபடவும், தெய்வீக காரியங்கள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி இது.

திரயோதசி திதி : இந்த திதியில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம் ஆகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். விளையாட்டுகள், கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி திதி : மகாசக்தியான காளி தேவி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள். எனவே புதிய ஆயுதங்கள் உருவாக்க, துஷ்ட சக்திகள், எதிரிகளை வெற்றி கொள்ள, தீயவற்றை ஒழிக்கும் மந்திரம் பயில ஆகிய செயல்களுக்கு ஏற்ற திதியாக இருக்கிறது.

பௌர்ணமி திதி : இந்த பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். உங்கள் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம். கோயில் சிற்ப வேலைப்பாடுகள், மங்கள காரியங்களில் ஈடுபடலாம். தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம்.

அமாவாசை திதி : அமாவாசை திதிக்கு சிவன், சக்தி ஆகிய இருவரும் அதிதேவதை ஆவார்கள். பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்கள் செய்ய உகந்த திதி . ஈடுபடலாம். இயந்திரம் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் தொடங்கலாம்.

பொதுவாக திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை சிறந்த திதிகளாகும். தேய்பிறை காலத்தில் வருகிற துவிதியை, திருதியை, பஞ்சமி ஆகிய மூன்று திதிகளும் சுப திதிகள் ஆகும். தேய்பிறை காலத்தில் இந்த மூன்று திதிகளில் மட்டும் சுப காரியங்களில் ஈடுபடலாம்.

Related Stories: