கீழடியில் புதிய அருங்காட்சியகம் கட்டுமான பணி 99 சதவீதம் நிறைவு: அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

திருப்புவனம்: கீழடியில் புதிதாக ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து விட்டன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுபணித்துறை, சாலைப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தமிழக பொதுப்பணி, சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இரண்டு நாள் பயணமாக இன்று காலை 6.30 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஷ்சேகர், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், தமிழரசி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.  பின்பு அமைச்சர் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் கீழடி சென்ற அவர், அங்கு நடந்து வரும் அகழ்வராய்ச்சி பணிகளை பார்வையிட்டார். மேலும் ரூ.12 கோடியில் கீழடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டிடத்தையும், அவர் பார்வையிட்டார். பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். பின்பு நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘கீழடியில் கிடைத்துள்ள பண்டைய கால பொருட்கள் மூலம், கி.மு. 4 ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள பொருட்களை  காட்சிப்படுத்த ரூ.12 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு அருங்காட்சியகம்  அமைத்துள்ளது. இந்த அருங்காட்சியக கட்டிடம் செட்டிநாடு கட்டிடகலை  வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. காட்சி கூடத்தில் ஒளி, ஒலி  காட்சி அரங்கு, அதற்கான அலங்கார வடிவமைப்பு, மற்றும் சிற்பக்கலைக்கூடம்  அமைக்கும் பணி முடிவடைய இன்னும் 2 மாதம் ஆகும்.  பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து  வைக்க உள்ளார்’’ என்று தெரிவித்தார்.தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதிய சாலைப்பணிகள், சாலை மராமத்து, பாலம் கட்டுதல் உள்ளிட்ட சாலைப்பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். பிற்பகல் 2.30 மணிக்கு சிவகங்கையில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வழியாக பாம்பன் சென்றார். அங்கு பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் குறித்தும், பாம்பன் கால்வாய் ஆழப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இன்று இரவு அவர் ராமேஸ்வரத்தில் தங்குகிறார்.  நாளை காலை 8.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி சாலை, தமிழ்நாடு கடல் சார் வாரிய கட்டிடம், கட்டப்படவுள்ள இடங்களை அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். படகுத்துறையை ஆய்வு செய்துவிட்டு, ராமேஸ்வரம் முதல் தலைமன்னார் கடல்வழி போக்குவரத்து சாத்தியக்கூறுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். பின் ராமநாதபுரம் வரும் அமைச்சர் ஏ.வ.வேலு ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு  கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதிய சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.  ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு, மாலை 5 மணிக்கு மதுரை வருகிறார். 5.30 மணிக்கு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். பின்பு நாளை இரவு 8.15 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். …

The post கீழடியில் புதிய அருங்காட்சியகம் கட்டுமான பணி 99 சதவீதம் நிறைவு: அமைச்சர் ஏ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: