தீராத பிணிகளை தீர்த்து வைக்கும் செண்பகவல்லி அம்மன்

கோவில்பட்டி ஊர்ப் பெயரே அதன் சிறப்பைச் சொல்கிறது. ஆன்மிகம் தழைத்தோங்கும் இந்தத் தலத்தின் நாயகியாகத் திகழ்கிறாள் அன்னை செண்பகவல்லி. இந்த தெய்வம் உள்ளூர் மக்களை எந்த அளவுக்கு ஈர்த்திருக்கிறாள் என்பதற்கு இங்கே உலவிவரும் அநேக செண்பகவல்லிகளும், செண்பக ராமன்களும் சாட்சி. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு செண்பகவல்லியாவது, ஒரு செண்பகநாதனாவது இருக்கிறார்கள்! தங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் அன்னைக்குப் பலவழிகளில் நன்றிக் கடன் செலுத்தி களிப்படைந்திருக்கிறார்கள் பக்தர்கள். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று, சமீபத்தில் நடந்தேறிய கும்பாபிஷேகம். 45 நாள் மண்டல பூஜைகளும் பக்தர்களின் காணிக்கைகளாலேயே பரிபூரணமாக நிறைவேறின. யாரிடமும் தனிப்பட்ட முறையில் நன்கொடை வசூலிக்க, கோயில் நிர்வாகத்தினர் செல்லவில்லை என்ற தகவல் நெகிழ்ச்சியூட்டுகிறது. அதைவிட, ‘மக்கள் தாமாக முன்வந்து அளித்த காணிக்கைகள், நன்கொடைகளை வைத்து, இப்போதே இன்னொரு கும்பாபிஷேகமும் நடத்தலாம்!’ என்று சொன்ன ஊர்ப் பெரியவர்களின் வார்த்தைகளில் பக்தியும் பெருமையும் பொங்கிப் பெருகின. கோயில் வளாகத்திற்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் முதலில் மூல விநாயகரை தரிசித்துக் கொள்ளலாம்.  

அவருக்கு எதிரே அகத்தியர் தீர்த்தம். குறுமுனி உருவாக்கிய தீர்த்தம் இது. கயிலையில் பரமேஸ்வரன்-பார்வதி திருமணத்தைக் காண ஈரேழுலகோரும் கயிலாயத்தில் குழுமிவிட, புவியின் வடபகுதி தாழத் தொடங்கியது. அதனை சமன்படுத்த ஈசன், அகத்தியரை தென்புலம் அனுப்பிவைத்தார். ஐயனின் ஆணைப்படி தெற்கே வந்த அகத்தியர் பொன்மலைக்கு வந்தார். அங்கே களாமரக் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய சிவனை பூஜித்தார். அதேபகுதியில் தவமியற்றிய முனிவர்கள் அந்த ஈசனை நீராட்டி, அர்ச்சித்து மகிழ, ஒரு தீர்த்தம் உருவாக்கித் தரவேண்டும் என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். அதன்படி அகத்தியர் பொன்மலையைத் தன் கமண்டலத்தால் தட்ட உடனே அங்கிருந்து பீறிட்டுக் கிளம்பியது ஒரு அருவி. அதுவே ஓடிவந்து இந்தத் தலத்தில் தீர்த்தமாக நிறைந்தது. இப்போதும் அகத்தியர் சிலைக்குக் கீழே உள்ள கோமுகியிலிருந்து நீர் வெளியேறி எதிரே உள்ள தெப்பக் குளத்தை நிறைக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்றும் ஆன்மிகப் புதிராகவே உள்ளது. இத்தலத்தில் இறைவன் லிங்கத் திருமேனியனாக அருள்பாலிக்கிறார். சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களால் பூவன மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட இவர், களாக்காட்டில் தோன்றியவர் என்பதால் களாவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

ஆனால், பூவன பூக்களால் பூஜை செய்யப்பட்டவர் என்பதால் தோன்றிய பூவனநாதர் என்ற பெயர்தான் மிகவும் பிரபலமானது. இறைவன் ஆணைப்படி செண்பக மன்னன் உருவாக்கிய கோயில் என்பதால், அம்பிகை செண்பகவல்லி என்று போற்றி வழிபடப்படுகிறாள்.  ஊர் மக்கள் அனைவரும் ஏகோபித்துப் போற்றி வணங்கும் செண்பகவல்லி அம்பாள், 7 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள். தன் பிள்ளைகள் தனக்கு நிறைவேற்றி வைக்கும் பூஜைப் பணிவிடைகளைக் கண்டு தாய்மை பொங்க ஆசியளித்து மகிழ்கிறாள். அன்னைக்கென்று தனி கோயில், தனி நுழை வாயில். பலிபீடம், கொடிமரம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால், அன்னையின் சந்நதி வாயிலருகே இருபுறமும் துவார சக்திகளைக் காணலாம். இவர்களுக்கு தெற்கே விநாயகரும், வடக்கே பாலசுப்பிரமணியரும் வரவேற்கிறார்கள். இவர்களை வணங்கி உள்ளே செல்லலாம். மகாமண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பள்ளியறை உள்ளது. மகாமண்டபத்தின் நடுவே சிறு அளவிலான நந்தி ஒன்று அம்பிகையை நோக்கியபடி அமர்ந்துள்ளது. பொதுவாகவே அம்மனுக்கு முன்னால் அவர் வாகனமான சிம்மம்தான் வீற்றிருக்கும். இங்கே அம்பிகை சிவ அம்சமாகவே திகழ்வதால் நந்தி இடம் பெற்றிருக்கிறது.

இந்தக் கோயிலைக் கட்டிய செண்பக மன்னனுக்கும், திருச்சுற்றில், செண்பகராஜா பீடம் என்று தனிச் சந்நதி உள்ளது. அடுத்தடுத்து சுரத்தேவர், 63 நாயன்மார்கள், 10 தொகை அடியார்கள், நாகர், விநாயகர், அம்பாள் மற்றும் நந்தி முன்னிற்க இரு லிங்கங்கள் என்று ஆசி வழங்குகிறார்கள். தவிர, கன்னி விநாயகர், நால்வர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, பஞ்சலிங்கங்கள், நவநீத கிருஷ்ணன், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோரும் தனித்தனிச் சந்நதிகளிலிருந்து ஆசி வழங்குகின்றனர். இத்தல மூல நாயகனாம் அகத்தியர் மற்றும் பைரவர் அருளாட்சி புரிகிறார்கள். கோயில் விமானம் ஒன்றில் மகாத்மா காந்தி இடம் பெற்றிருக்கிறார். ஆன்மிகமும், தேசியமும் ஒருங்கே இங்கே நிலைபெற்றிருப்பதற்கு இன்னொரு உதாரணம் - கோயில் வளாகத்திலேயே இயங்கி வரும் இந்து நல்வழி மன்றம். காஞ்சி மகாப் பெரியவரின் ஆசியால் உருவான இந்த மன்றம், இளங்குருத்துகளின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. பாகவதம், தேவாரம், திருவாசகம், திருக்குறள் இவற்றில் ஏற்கெனவே ஆர்வமும், மனப்பாடமாகவும் உள்ள சிறுவர்களுக்கு இங்கே மாலை நேரத்தில் மூன்று மணிநேரம் ஆன்மிக, தேசிய உணர்வுகள் ஊட்டப்படுகின்றன.

அந்த மாலைப் பொழுதின் பிற கவர்ச்சிகளில் சிக்காமல் அதிக எண்ணிக்கையில் பல மாணவர்கள் இங்கே பயில்வது, இந்த மன்றத்தின் நிர்வாக சிறப்பையும், நேர்மையையும் பறைசாற்றுகிறது. பொதுவாகவே இந்தக் கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்கள், தனித்தனியே உள்ள கோபுர வாசல் வழியாக, முதலில் அம்பாளை தரிசித்துவிட்டு, பிறகுதான் இறைவனை வணங்குகிறார்கள். அன்னையின் சிபாரிசு, ஐயனை எல்லா வரமும் அளிக்கத் தூண்டுமல்லவா! அம்பிகை தீராத பிணிகளையெல்லாம் தீர்த்து வைக்கிறாள்; மனம் போல வாழ்க்கை, குறைவிலா குழந்தைப் பேறு, குன்றாத செல்வம் எல்லாம் அருள்கிறாள். அது உண்மை என்பதை இவ்வூர் மக்கள் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து மேற்கொள்ளும் திருப்பணிகளும், அறப்பணிகளும், அவர்கள் முகத்தில் குடி கொண்டுள்ள மகிழ்ச்சியும் தெரிவிக்கின்றன. நெல்லை மாவட்டத்தின் குறிப்பிடத் தகுந்த நகரம் கோவில்பட்டி. இங்கே நடுநாயகமாக கோயில் கொண்டிருக்கிறார்கள் பூவனநாதரும், செண்பகவல்லித் தாயாரும்.

Related Stories: