சங்கரன்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் : திரளானோர் பங்கேற்பு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (10ம் தேதி) துவங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (10ம் தேதி) துவங்கியது. இதை முன்னிட்டு கோயில் யானை “கோமதி” பிடிமண் எடுக்கும் வைபம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து நேற்று (10ம் தேதி) கொடியேற்ற வைபவம் நடந்தது.  காலை 6.10  மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். திருவிழா நாட்களில் காலை, மாலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்பாள்  பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறும். 4ம் திருநாளான 13ம் தேதி 63 நாயன்மார்களுக்கு சிவக்கைலாய காட்சி கொடுத்தல் நடக்கிறது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம், வரும் 18ம் தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரையும்  சங்கரன்கோவில், களப்பாகுளம்,  பெருங்கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருந்திரளாகப் பங்கேற்கும் பக்தர்கள் ரதவீதிகள் வழியாக வடம்பிடித்து நிலையத்தில் சேர்க்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: