தயாரிப்பாளர் டில்லி பாபு நினைவேந்தல் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. டில்லி பாபு கடந்த செப்டம்பர் 9ம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. டில்லிபாபுவின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை தயாரிப்பாளர் தனஞ்செயன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்கே செல்வமணி, “தில்லி பாபுவை எனக்கு கடந்த ஏழு எட்டு வருடங்களாக தெரியும். என் வீட்டில் தான் அவரது அலுவலகம் உள்ளது.

என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எப்போதும் சிரித்த முகத்தோடும் குழந்தைத் தனமாகவும் இருப்பார். என்னுடைய வீட்டில் ஏழெட்டு வருடங்களாக அவரது அலுவலகம் இயங்கி வருகிறது. வெயில், மழை, கொரோனா என எது வந்தாலும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் வாடகை போட்டு விடுவார். எனக்கு மட்டுமல்ல, எல்லோரிடமும் இன்முகத்தோடு இருப்பார். அவரது நல்ல குணங்களை நாம் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நினைவஞ்சலி. வெற்றிப் படம், தோல்விப் படம் என்றில்லாமல் எல்லாப் படங்களுக்கும் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும். மிகச்சிறந்த மனிதர்.

அவரது புகழ் நிச்சயம் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும்” என்றார். அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசுகையில், “தில்லி பாபு சார் மிகவும் நல்ல மனிதர். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகதான் இருந்திருக்கிறார். அவருக்குப் பின் அவரது தயாரிப்பு நிறுவனம் இதே புகழோடும் நற்பெயரோடும் இருக்க நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். தேவுக்கும் எனது வாழ்த்துக்கள்” நடிகர் முனீஷ்காந்த், “ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கம்பெனி ஆர்டிஸ்ட் போல நான். அவர்கள் தயாரிப்பில் பல படங்களில் நடித்திருக்கிறேன். நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது”. இயக்குநர் ராம்குமார், “என்னுடைய ‘ராட்சசன்’ கதையை 35 பேர் நிராகரித்தார்கள்.

எனக்கு சினிமா மேல் வெறுப்பே வந்துவிட்டது. 36ஆவது நபராகதான் டில்லி பாபு சாரிடம் கதை சொன்னேன். கேட்டவுடன் உடனே ஒத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தார். 35 பேர் நிராகரித்தார்கள் என்றாலும் அவர் என் மேல் சந்தேகப்படாமல் நம்பிக்கை வைத்தார். பல விதங்களில் எனக்கு நம்பிக்கைக் கொடுத்தார். நம் மேல் நம்பிக்கை வைக்கும் நபர்கள் கிடைப்பது கஷ்டம். அப்படியான ஒருவரை நான் இழந்திருப்பது பெரும் இழப்பு. அவரை இந்த சமயத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன்”.

நடிகர் ஜெயப்பிரகாஷ், “தில்லி பாபு சாரை சில முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவரது இழப்பு என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. அதற்குக் காரணம் அவரது நல்ல மனதுதான். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” நடிகர் ரமேஷ் திலக், “நான் எப்போதாவதுதான் அவரிடம் பேசுவேன். ‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி விழாவின் போது அவரிடம் ‘ஹாய்’ சொன்னேன். அவர் இல்லை என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்றார். நிக்கி கல்ராணி, ஆதி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

The post தயாரிப்பாளர் டில்லி பாபு நினைவேந்தல் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: