கொடியேற்றத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்திருவிழா துவங்கியது

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 16ம்தேதி தேரோட்டமும், 19ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை தேரோட்டம். இந்த ஆண்டு சித்திரை தேர்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று காலை அம்மன் மற்றும் கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாளான இன்று காலை காலை 10 மணிக்கு பல்லக்கிலும், மாலை 5 மணிக்கு அபிசேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். இதனை தொடர்ந்து தினமும் பல்லக்கு, பூதவாகனம், அன்னவாகனம், ரிஷபவாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை உள்ளிட்ட வாகனத்தில் தினமும் புறப்பாடாகி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஒன்பதாம் திருநாள் இரவு 8 மணிக்கு உற்சவ அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பத்தாம் நாளான வரும் 16ம்தேதி(செவ்வாய்)  நடக்கிறது. அன்று காலை 10.31 மணிக்குமேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. பதினோராம் திருநாள் காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். பனிரெண்டாம் திருநாள் இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. 13ம் திருநாளான வருகிற 19ம் தேதி  தெப்பஉற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை  கோயில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: