கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

கழுகுமலை: தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவின் 9ம் திருவிழாவான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு மேல் சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகர் கோ ரதத்திலும், கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவி அருணா சுப்பிரமணியன், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயக்கொடி, தொழிலதிபர் ராஜேந்திரன், பழனி, முத்தால்ராஜ், கிருஷ்ணா சிட்பண்ட்ஸ் மாரியப்பன், பிரதோஷ குழு முருகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். அரோகரா கேஷம் முழங்க திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர், தெற்கு ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேர், கீழ பஜார் வழியாக நிலையத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்களுக்கு சமுகஆர்வலர்கள் நீர்மோர் வழங்கினர், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா நடந்தது. 10ம் திருவிழாவான இன்று தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தபசுக்காட்சியும், நாளை(22ம் தேதி) இரவு 7.35 மணிக்கு மேல் திருக்கல்யான வைபவமும் நடக்கிறது. நாளை மறுநாள் (23ம் தேதி) இரவு 8 மணிக்கு  பட்டினப் பிரவேசமும், மறுநாள் (24ம்தேதி) மஞ்சள் நீராட்டும் நடைபெறும்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: