எம்.சி.ஏ. படித்துள்ள என் மகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. பல பரிகாரங்கள் செய்தும் திருமணத்தடை நீங்கவில்லை. செவ்வாய் 2ல் உள்ளதால் செவ்வாய் தோஷம் உள்ளதா? உத்யோகத் தடை, திருமணத் தடை நீங்க பரிகாரம் கூறவும். மதுரை வாசகர்.
உங்கள் மகளின் பிறந்த ஊர் மதுரை என்றும் பிறந்த நேரம் இரவு 07.39 மணி என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். துல்லியமாகக் கணிதம் செய்து பார்த்ததில் லக்ன சந்திக்கான காலத்தில் அவர் பிறந்திருக்கிறார் என்பது தெரிகிறது. மேஷம், ரிஷபம் என்ற இரண்டு லக்னங்கள் சந்திக்கின்ற வேளையில் அதாவது மேஷ லக்னத்தின் இறுதிப்பாகையில் அவர் பிறந்திருக்கிறார். நீங்கள் ஜாதகத்தில் ரிஷப லக்னம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். லக்னம் எது என்று துல்லியமாகக் கணித்தால்தான் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதையும், திருமணம் குறித்த பலன்களையும் காண இயலும். அது மட்டுமல்ல உத்யோகம் உட்பட எந்த ஒரு விஷயத்தையும் பற்றி அறிந்துகொள்ள பிறந்த லக்னம் என்பது மிகவும் முக்கியமாகும்.
இதுபோன்ற சந்தேகம் வருகின்ற காலத்தில் உங்கள் மகளின் சாமுத்ரிகா லட்சணத்தைக் கொண்டு அதாவது அவரது நடை, உடை, பாவனை செயல்பாடுகள், பேசுகின்ற விதம் ஆகியவற்றைக் கொண்டு இவர் மேஷ லக்னத்தில் பிறந்திருக்கிறாரா அல்லது ரிஷப லக்னத்தைச் சேர்ந்தவரா என்பதை நன்கு கற்றறிந்த அனுபவம் வாய்ந்த ஜோதிடரால் சொல்ல இயலும். உங்கள் மகளையும் அழைத்துக்கொண்டு அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் செல்லுங்கள். உங்கள் மகளை நேரில் பார்க்கும் அவரால் இவரது லக்னம் எது என்பதை உறுதியாகச் சொல்ல இயலும். அதன் பிறகு திருமணம் உட்பட மற்ற முயற்சிகளில் இறங்குங்கள். எப்படி ஆகினும் மகத்தினில் பிறந்த உங்கள் மகள் ஜகத்தினை ஆள்வார் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைவிட 14 வயது குறைவான ஆதரவற்ற பெண்ணுடன் பழக்கம் உண்டாகி பல லட்ச ரூபாய் இழந்து அதிலிருந்து விடுபட இயலாமல் தவிக்கிறேன். அந்தப் பெண்ணின் வறுமை கருதி உதவி செய்திடப் போய் இன்று பணப்பிரச்சினை மற்றும் மன உளைச்சலில் சிக்கி உள்ளேன். இரு தரப்பிலும் பாதிப்பில்லாமல் விடுபட பரிகாரம் வேண்டுகிறேன். ராமநாதன், காரைக்குடி.
உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்ற சுக்கிரனோடு எட்டாம் பாவகத்தில் சனி மற்றும் ராகு இணைந்திருப்பது பலவீனமான நிலை ஆகும். மேலும் வக்ரம் பெற்ற குருவுடன் கேது இரண்டில் இணைந்திருப்பதும், ஏழாம் வீட்டுச் சூரியனும் சேர்ந்து உங்களுக்கு இது போன்ற பிரச்னைகளைத் தந்திருக்கிறார்கள். பூர்வ ஜென்மத்திய கடன் இந்த ஜென்மத்தில் கழிந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
தற்போதைய சூழலின்படி வருகின்ற 19.06.2019 வரை அந்தப் பெண்ணிற்கு நீங்கள் தொடர்ந்து உதவி செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பீர்கள். அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாமல் விலகிவிட இயலும். இருந்தாலும் நீங்கள் இழந்த பணம் இழந்ததுதான். அது குறித்து கவலைப்படாமல் இனிமேலாவது எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். பெண்களால் பிரச்னை என்பதை உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். வியாழன் தோறும் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஆறுமுறை சொல்லி வணங்கிவர பிரச்னை தீரும்.
“வஸூதான்யம் யச:கீர்த்திம் அவிச்சேதம் ச ஸந்ததே:
சத்ருநாசன மத்யாசு தேஹிமே விபுலாம் ச்ரியம். ”
இரண்டு பிள்ளைகள் பிறந்த பின் எனது மகனின் குடும்ப வாழ்க்கை இணக்கமாக இல்லை. மருமகள் கடமைக்காக குடும்பத்தில் இருக்கிறாள். தம்பதியருக்கிடையே பிணக்கு இருந்து வருகிறது. மருமகள் தன் பெற்றோரிடம் காட்டும் அன்பை கணவனிடம் காட்டுவதில்லை. நாங்கள் சென்றால் கூட பிள்ளைகளை எங்களுடன் விளையாட அனுமதிப்பதில்லை. என் மகனின் குடும்ப வாழ்வு சிறக்க பரிகாரம் கூறுங்கள். அருப்புக்கோட்டை வாசகர்.
விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. இருவரும் ரிஷப லக்னத்தில் பிறந்திருப்பதாலும், இருவரின் ராசிகளின் அதிபதியும் செவ்வாய் ஒருவரே என்பதாலும் இருவருக்கும் இடையே பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மை என்பது உண்டு. என்றாலும் தற்போது நடந்து வரும் சந்திர தசை உங்கள் மருமகளின் மனதில் அநாவசியமான சந்தேகத்தினை உண்டாக்கி வீண் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.
உங்கள் மகனின் ஜாதகப்படி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ள கேது தசை அவருக்கு உத்யோக ரீதியான இடமாற்றத்தைத் தரக்கூடும். உத்யோக ரீதியாக அவர் வெளியூர் செல்ல நேரும் போது குடும்பத்தில் உண்டாகும் பிரிவினை என்பது கூட ஒருவிதத்தில் நல்லதுதான். உங்கள் மருமகளின் ஜாதகப்படி 41வது வயது முதல் மனத் தெளிவு உண்டாகி கணவனுடன் அன்யோன்யத்துடன் வாழத் தொடங்குவார். உங்கள் மகனின் ஜாதகப்படி அடுத்த ஏழு வருடங்கள் கேது தசை நடக்க உள்ளதால் தத்துவ சிந்தனைகள் மூலம் மனம் பக்குவப்படும். பிள்ளைகளே பெற்றோரை இணைக்கும் பாலமாக செயல்படுவர். குலதெய்வப் பிரார்த்தனை ஒன்றே போதுமானது. மகன் நலமுடன் வாழ்வார்.
பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் மகள், ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மகன் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இவர்களை நம்பி மேற்படிப்பு படிக்க வைக்கலாமா? இவர்கள் நன்றாக படிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? கோபால், ராசிபுரம்.
ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு ஒன்றுமாக இரண்டு முத்துக்களை பெற்றெடுத்திருக்கும் உங்களுக்கு வீண் கவலை எதற்கு? சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் அமர்ந்திருப்பதால் நல்ல வாழ்க்கை என்பது அவருக்கு அமையும். அவரை அதிகம் தொல்லைப்படுத்தாமல் அவரது போக்கிலேயே விடுங்கள். வரும் 2020ம் வருடம் ஆகஸ்டு மாதம் முதல் அவரது மனம் பக்குவம் அடையும். அதன்பிறகு தனது கல்வியில் தீவிர கவனம் செலுத்துவார்.
திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் லக்னத்திற்கும், ராசிக்கும் அதிபதியான சனி ஐந்தில் வக்ர கதியில் அமர்ந்திருக்கிறார். விளக்கு நன்றாக எரிய ஒரு தூண்டுகோல் அவசியம் என்பது போல இவருக்கு ஒரு தூண்டுகோல் தேவை. இவரை அவ்வப்போது தூண்டிக் கொண்டே இருங்கள். ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கும் செவ்வாயும், 11ல் இணைவினைப் பெற்றிருக்கும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரும் இவரை வாழ்வினில் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வார்கள். தற்போதைய சூழலில் பிள்ளைகள் இருவரையும் பள்ளிப் பருவத்தினை ஆனந்தமாய் அனுபவிக்க விடுங்கள். கல்லூரிக்குச் செல்லும்போது இருவரும் தெளிவாக இருப்பார்கள். பரிகாரம் தேவையில்லை.
என் மகன் கடந்த 7 வருடங்களாக போதையில் மிருகமாக அலைகிறான். உறவினர் மற்றும் பெற்றோர் பேச்சு கேட்பதில்லை. இவனது எதிர்காலம் எப்படி இருக்கும்? சிறப்பான பரிகாரம் செய்து போதையில் இருந்து மீட்க தக்க உபாயம் கூறவும். ஜெயலட்சுமி, திருச்சுழி.
பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி துவங்கி உள்ளது. இவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் இரண்டாம் வீட்டில் கேதுவுடன் இணைந்துள்ளார். சந்திரனும் கேதுவும் நீசம் பெற்ற சுக்கிரனின் சாரத்தில் இணைந்துள்ளதால் போதைக்கு அடிமையாகி இருக்கிறார். என்றாலும் சென்ற ஜனவரி மாதம் முதலாக அவர் மனதில் குற்ற உணர்ச்சி என்பது உருவாகி இருக்கிறது. தனது நடவடிக்கையால் கௌரவத்தை இழந்து வருகிறோம் என்ற எண்ணம் மனதில் உதிக்கத் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி கொஞ்சம், கொஞ்சமாக அவரை மீட்டுவிட இயலும். அறுகம்புல்லை சாறாகப் பிழிந்து தினமும் சிறிதளவு அவரைப் பருகச் செய்யுங்கள். அவர் மறுக்கும் பட்சத்தில் சிறிதளவு தும்பைப் பூவினை வாயினில் போட்டு மெல்லச் சொல்லுங்கள். தினமும் காலை வேளையில் நீராகாரம் அல்லது பழைய சோற்றினை உணவாகக் கொடுங்கள்.
அவருடைய கிரக நிலையின்படி 19.04.2019 முதல் 05.09.2019ற்குள் அவரை போதையிலிருந்து மீட்டெடுக்க முடியும். தாயார் வழி உறவினர் ஒருவர் அவருக்குத் துணையாக இருப்பார். தசாநாதன் ராகு ஆயுள் ஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நேரத்தினை விட்டுவிட்டால் பிறகு அவரை எப்பொழுதும் அதிலிருந்து மீட்க இயலாது என்பதையும் நினைவில் கொண்டு செயல்படுங்கள். பெற்ற தாயின் ஆதரவான பேச்சு அவரது மனதை மாற்றும். பொறுமையை இழக்காதீர்கள். குழந்தை தவறு செய்யும்போது அதனை அன்போடு திருத்த வேண்டியது தாயின் கடமையல்லவா, 30 வயதானாலும் அவர் உங்கள் குழந்தைதானே.. திங்கட்கிழமை காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள்ளாக வருகின்ற ராகு கால வேளையில் அவரை எப்படியாவது அருகில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கே அமரச் செய்யுங்கள். கீழ்க்கண்ட அபிராமிஅந்தாதி பாடலைச் சொல்லி அம்பிகையை மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குறை தீரும்.
“நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.”
வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.
